ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் நல்ல நிகழ்வு , அசம்பாவிதம் எதுவாக இருந்தாலும் " பொறந்த நேரம் அப்பிடி " என்று சொல்ல கேட்டிருக்கிறோம். இதை யோசித்து பார்க்கும் போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம் ..அவருக்கு ஒரு ராணியாம் ..( அட நெஜமாவே இப்படித்தானுங்க இந்த கதை ஸ்டார்ட் ஆகுது ...) ரத ,கஜ ,துரக பதாதிகளோடு செங்கோலோச்சிய மன்னனுக்கு ஒரு குறை. பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் வேண்டாத தெய்வங்கள் இல்லை . செய்யாத யாகங்கள் இல்லை. நல்லாட்சி புரியம் மகாராஜாவுக்கும் மகா ராணிக்கும் புத்திர பாக்கியம் வேண்டி மக்களும் விடாது பிரார்த்தனை செய்தனர். பாலை வார்த்தது போல் ஒருநாள் அந்த நற்செய்தி வந்தது. ஆமாம் ..மகாராணி கர்ப்பம் தரித்தாள். அரியாசனத்தில்அமரபோகும அடுத்த வாரிசை எதிர் பார்த்து நாடே ஆவலோடு காத்திருந்தது. பிறக்கபோவது இளவரசிதான் என்றும் இளவரசன்தான் என்றும் IPL ஆட்டம் போல் குடிமக்களில் சிலர் பந்தயம் கட்டினர். குழந்தை பிறந்தவுடன் அந்த நாழிகை குறித்து கொள்ளப்பட்டு பின்பு ஜோதிடர் ஜாதகம் கணிப்பது மரபு. அதிலும் ராஜ வம்சம் , அரிய மகப்பேறு. சொல்லவா வேண்டும்? நாடெங்கிலும் இருந்து பெரிய ஜோதிடர்கள் முன் கூட்டியே வரவழைக்கப்பட்டு அரண்மனையில் தங்க வைக்கபட்டுருந்தனர். . அரண்மனையில் பிரசவத்திற்காக சகல வசதிகளோடு பிரத்தியேகமாக ஒரு அறை தயார் செய்யப்பட்டு ராஜ வம்சத்தின் முதல் வாரிசை பிரசவிக்க தயாரானாள் மகராணி.அந்த நாளும் வந்தது. மகாராணிக்கு பிரசவ வலி வந்ததும் அனைத்து ஜோசியர்களும் வரவழைக்கப்பட்டு பிரசவ அறைக்கு வெளியே கூடினர் . கொழு கொழுவென்று சகல சாமுத்திரிகா லட்சணங்களுடன் அமுல் பேபி போல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது . குழந்தை ஜனித்த நாழிகை அரண்மனை தாதி எலுமிச்சை பழத்தை வெளியில் உருட்டி விட அந்த நேரத்தை எல்லா ஜோசியர்களும் கவனமாக குறித்து கொண்டனர். ஜோதிடர்கள் அனைவரும் மும்முரமாக ஜாதகம் கணிக்க தொடங்கினர். ஆனந்தத்தில் மகாராஜா தாதிக்கு கழுத்திலிருந்த தங்க காசு மாலையை பரிசளித்ததோடு அதற்கு வரி விலக்கும் அளித்தார். (தாதி அவர்களுக்கு விரைவில் அடுத்த வாரிசு உருவாக மனதுக்குள் வேண்டிகொண்டாள்.)
தாரை தப்பட்டை முழங்க பொது மக்களுக்கு இந்த நற்செய்தி அறிவிக்கப்பட்டது. நாடே விழாகோலம் பூண்டது.
அடுத்த ஓரிரு தினங்களில் எல்லா ஜோதிடர்களும் அரசவையில் கூடினர். நடுநாயகமாக அரியாசனத்தில் மாகாராஜா கம்பீரமாக வீற்றிறுக்க ஜோதிடர்களின் முகத்தில் தவழ்ந்த சந்தோஷத்தை கவனித்த மகாராஜா அது நல்ல செய்தியின் அறிகுறியாக தெரிய உள்ளுக்குள் நிம்மதி பெரு மூச்செறிந்தார். அதே போல் ஓலை சுவடிகளை கைகளில் கட்டாக வைத்திருந்த மூத்த ஜோதிடர் சபையில் எழுந்து "மகாராஜா ...இளவரசர் வருங்காலத்தில் சகல நற்குணங்கள் கொண்டு வீர தீர பராக்கிரமசாலியாக திகழ போவது உறுதி. தங்களை போல் சகல வல்லமைகளையும் கொண்டு குடிமக்கள் வாழ்த்த சீரும் சிறப்புமாக நல்லாட்சி புரிவார். இது எங்கள் எல்லோருடைய ஒருமனதான கணிப்பு " என்றார். அரசரும் அகமகிழ்து எல்லோருக்கும் பணமுடிப்பை தன் கைகளால்
வழங்கி கௌரவித்தார். எல்லோரும் ஒவ்வொருவராக பணமுடிப்பை பெற்று கொண்டு நன்றி கூறி "அப்போ நாங்க பொறப்படுரோம்" என்று சொல்லி விடைபெற , கடைசியாக ஒரு ஜோதிடர் மட்டும் பண முடிப்பை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அரசருக்கு அதிர்ச்சி. "ஜோதிடரே ஏன் பண முடிப்பு வேண்டாம் என்கிறீர்கள் ..? வேறு ஏதாவது வேண்டுமா ? எதுவாக இருந்தாலும் கேளுங்கள் . தருகிறேன் " என்றார் .
அதற்கு அந்த ஜோதிடர் "மன்னா ..என்னை மன்னித்து விடுங்கள் . என் கணிப்பு வேறு ..இதை சொல்லி உங்கள் சந்தோஷத்தை குலைக்க விரும்பவில்லை "
"பரவாயில்லை ..சொல்லுங்கள் ..."
"என் கணிப்பின் படி இளவரசர் இந்த உலகில் வாழபோவது பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே. பதின்ம வயது பாலகனாக மாறுவதற்கு முன் ஒரு வன விலங்கால் அவருக்கு துர்மரணம் நிகழும் ..கிரக நிலைகள் கொண்டு நான் கணித்த ஜாதகம் சொல்கிறது . இதை சொல்வதற்கு என்னை மன்னித்து விடுங்கள் ..."
:"ஜோதிடரே என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறீரா ...? இத்தனை ஜோதிடர்களின் கணிப்பு பொய்யா ..? யாரங்கே ..!! இந்த பித்தனை சிறையில் அடையுங்கள்!! " என்று உத்தரவிட அரண்மனை காவலர்கள் ஜோதிடரை இழுத்து சென்றனர். அரசர் ஜோதிடனிடம் சூளுரைத்தார் .
"உம் கணிப்பு பொய்த்தால் யானை கொண்டு உம் சிரம் இடற, அந்த துர்மணம் உமக்கு நிகழும் ..இழுத்து செல்லுங்கள் இவனை '' என்று உத்தரவிட ,
கச்சையணிந்து கவரி வீசிய இளம் தாதியர் உட்பட அனைவரும் அதிர்சியில் உறைந்ததனர்.
அந்த ஜோதிடனை பித்தன் என்றே முடிவு செய்து எள்ளி நகைத்து அவன் சொன்னதை ஒரு பொருட்டாக யாரும் எடுத்து கொள்ளவில்லை. நாட்கள் பறந்தது . இளவரசருக்கு குதிரையேற்றம் , வாள் வீச்சு , வில்வித்தை என்று ஆய கலைகள் அனைத்தும் கற்று தரபட்டு அனைவரும் வியக்கும் வகையில் அனைத்திலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். பன்னிரண்டாம் வயது முடிவடைந்து பதின்ம பருவ வயது அடைய இன்னும் சில தினங்கள் இருந்தன. மன்னருக்கு அந்த ஜோதிடன் சொன்ன வார்த்தைகளை முழுவதுமாக ஊதாசினபடுத்த முடியவில்லை.
கோட்டையில் உயரமாக மிக பாதுகாப்பான அறையில் இளவரசர் தங்க வைக்கபட்டார். வாளேந்திய வீரர்கள் இரா பகலாக கோட்டையை சுற்றி காவலிருந்தனர்.
இன்னும் ஒரு ஜாமம் கடந்தால் அந்த ஜோதிடன் சொன்ன கெடு முடிவடைந்து விடும். அன்று இரவு முழுவதும் மேலும் படைகள் குவிக்க பட்டு பல மைல்களுக்கு ஒரு ஈ , காக்கை கூட அண்டாதவாறு வீரர்கள் விழித்திருந்து காவல் காத்தனர். மறுநாள் அதிகாலை இளவரசரை எழுப்பபோன அரண்மனை சேவகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இளவரசர் கட்டில் மேல் பிணமாக ரத்த வெள்ளத்தில் ....!!
இத்தனை காவலையும் மீறி இது எப்படி சாத்தியம் ....?
மன்னரின் வீர தீர பராக்கிரமத்தை பறை சாற்றி வேட்டையாடப்பட்டு அரண்மனை சுவற்றை அலங்கரித்த சிங்கம், புலி, மான் தலைகள் ..
இளவரசர் உறக்கத்தில் இருந்த போது தலைமாட்டின் மேல் இருந்த கடம்பை மானின் தலை சுவற்றில் இருந்து விழுந்து அதன் கூறிய கொம்பு இளவரசரின் இதயத்தை துளைத்து ...
நாடே சோகத்தில் ஆழ்ந்தது.
ஒருபுறம் புத்திர சோகத்தில் வாட, மறுபுறம் ஒரு குற்றமும் புரியாத ஜோதிடனுக்கு பன்னிரண்டு வருடங்கள் சிறை வாசம் விதிததற்காக குற்ற உணர்வு மன்னனை வாட்டி எடுத்தது. உடனே அந்த ஜோதிடனை விடுதித்து அரசவைக்கு அழைத்து வர உத்தரவிட்டார். ஜோதிடனை கண்டதும் தன்னை மன்னிக்கும்படி வேண்டிகொண்டார். ஜோதிடனும் இளவரசருக்கு நேர்ந்த துர்மரணம் கேட்டு மனமுருகி கண்ணீர் விட அரசர் ஜோதிடனிடம்
"ஜோதிடரே அது எப்படி உங்களால் மட்டும் அவ்வாறு சரியாக கணிக்க முடிந்தது ..?" என்று ஆச்சர்யத்தோடு வினவ ,
அதற்கு ஜோதிடர் பன்னிரெண்டு ஆண்டுகள் பின்னோக்கி போய் இளவரசர் பிறந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்
" மன்னா , இளவரசர் பிறந்த நாழிகை எப்படி குறிக்கப்பட்டது
என்பது தங்களுக்கு நினைவிருக்கிறதா ...?"
"ஆமாம் ..பிரசவம் முடிந்த கணம் தாதி எலுமிச்சையை வெளியே உருட்டி விட்ட நேரம் ..."
"ஆமாம் ...சரியாக சொன்னீர்கள். ஆனால் தாதி எலுமிச்சையை முதலில் உருட்டி விடும் போது அது கதவில் பட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டது . இதை யாரும் கவனிக்கவில்லை . அவள் மீண்டும் அந்த எலுமிச்சையை தேடி எடுத்து இரண்டாம் முறை வெளியே உருட்டி விட்ட நேரத்தைதான் மற்றவர்கள் குறித்து கொண்டு இளவரசரின் ஜாதகத்தை கணித்தனர். அப்போது சில மணித்துளிகள் கடந்து விட்டது .ஆனால் துரதிருஷ்ட வசமாக இளவரசர் பிறந்த நேரம் அவருடைய ராசிப்படி கிரக நிலைகள் தோஷத்தின் உச்சகட்டத்தில் இருந்த கணம். "
கதை இப்படி முடிகிறது . ராசி பலன் , ஜாதகம் இதெல்லாம் மூட நம்பிக்கையா இல்லை இதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்கிற விவாததுக்கெல்லாம் போக நான் விரும்பவில்லை. அது அவரவர் நம்பிக்கை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிரம்ப ஆச்சர்யமளிக்கிறது. கலீலியோ டெலஸ்கோப் கண்டுபிடிப்பதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே வெறும் கண்களால் கிரகங்களை கண்டறிந்து நம் முன்னோர்கள் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கி இருக்கின்றனர். யோசித்து பார்த்தால் பிரபஞ்சத்தில் இருக்கும் பல துகள்கள் (particles ), தனிமங்கள் நம் உடலிலும் உள்ளன. உதாரணம் Ca, Na, K, H2O, C, I , Fe..etc
உயிரற்ற ஜடமென்று நாம் கருதும் கிரகங்களும் ஏதோ ஒரு சக்திக்கு கட்டுப்பட்டு தொடர்ச்சியாக ஒரு ஹார்மானிக் இயக்கத்தில் இயங்கி கொண்டிருக்கின்றன. நமக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் இடையே ஏதோ ஒரு வகை ஒத்ததிர்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது .
ஒருவேளை அந்த கிரகங்களின் நிலைப்பாடும் ஒவ்வொரு தனி மனித வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக வைத்து கொண்டாலும் அதை தெரிந்து கொண்டு என்ன ஆக போகிறது ?மேலும் அதை அந்த ஜோதிடன் போல் துல்லியமாக கணித்து சொல்லும் திறமை இங்கே எத்தனை பேருக்கு இருக்கிறது ..? மக்களின் அறியாமையை தனக்கு சாதகமாக்கி பணம் பண்ணும் கூட்டம்தானே இங்கே அதிகம் ?
இன்ன தேதியில் சாகபோகிறோம் இலை கண்டம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு அந்த மன உளைச்சலில் பரிகாரங்கள் செய்து கொண்டு வாழ்வதை காட்டிலும் வாழும் ஒவ்வொரு நாளையும் இதுதான் கடைசி நாள் என்று கொண்டு வாழ்கையை அனுபவிப்பதே உத்தமம் என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய தனிப்பட்ட தாழ்மையான அபிப்ராயம்.
இப்போது இது புது ஃபேஷன். மருத்துவர் சொல்லும் உத்தேச பிரசவ தேதியில் ஜோசியர் குறித்து கொடுத்த நாளை தேர்ந்தெடுத்து
இயற்கையாக பிரசவ வலி எடுத்து பிரசவம் செய்து கொள்ளாமல் நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து சிசேரியன் செய்து கொள்வது.
இதிலெல்லாம் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது இந்த குழந்தைகள் வருங்காலத்தில் ஒரு பில் கேட்ஸ் ஆகவோ , அம்பானியாகவோ , சச்சினாகவோ, சானியா மிஸ்ராவாகவோ வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்த்துதான் சொல்ல முடியும்.
***
No comments:
Post a Comment