அன்புடையீர்...இந்த சிறு கதையை நீங்கள் படித்து முடித்த உடன் இந்த உலகம் ஒரு உருண்டை, வாழ்கை ஒரு வட்டம் என்ற உண்மை பொட்டில் அடித்தார் போல் உங்களுக்கு புரியும் ...
அன்புடையீர்...இந்த சிறு கதையை நீங்கள் படித்து முடித்த உடன் இந்த உலகம் ஒரு உருண்டை, வாழ்கை ஒரு வட்டம் என்ற உண்மை பொட்டில் அடித்தார் போல் உங்களுக்கு புரியும் ...
என்னடா சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுறாரே ஒருவேளை கிரிக்கெட் விளையாடி பின்னந்தலையில் "மெடுல்லா ஒப்ளேங்கட்டா"-வில இவருக்கு அடிபட்டிருக்குமோன்னு தானே யோசிக்கிறீங்க ......?
அதெல்லாம் ஒண்ணுமில்லே ..ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொன்னா தத்துவம் அடி மனசுல ஆழமா பதியும்னுதான் . சரி வாங்க, கதைக்கு போவோம்...
வேலூர் ..பிரபல தனியார் மருத்துவ மனை ... .உள்ளூர் நோயாளிகள் போதாதென்று இந்தியாவின் பல்வேறு மாநில நோயாளிகள் , உறவினர்கள் என்று ஏகப்பட்ட கூட்டம்
"இங்க தன்ராஜ் ஃ பாமிலி யாரு ...?" அட்டெண்டெர் பெரியசாமி வெளியே பெஞ்சில் வரிசையாக அமர்ந்திருந்த நோயாளிகளையும் உறவினர்களையும் பார்த்து கேட்க ,
"நான்தாங்க பேஷண்டுக்கு வைஃப் ." என்றார் ஒரு முப்பதைந்து வயது மதிக்கதக்க பெண்மணி கவலை தோய்ந்த முகத்தோடு .
"உள்ள போங்கம்மா ...டாக்டர் வர சொல்றார் ..."
டாக்டர் குமரகுரு "கன்சல்டண்ட் யூராலாஜி" என்று வெள்ளை எழுத்துக்களில் மேஜை மீது இருந்த செவ்வக மர பலகை சொல்லியது .
சுமார் நாற்பத்தைந்து வயதில் குறுந்தாடியில், கஞ்சி போட்டு இஸ்தரி செய்து தும்பை பூ வெள்ளை கைத்தறி சட்டை அவர் எளிமையை காட்ட , அகன்ற நெற்றியும் கண்களில் தெரிந்த தேஜஸும் பழுத்த அனுபவத்தை காட்டியது.
சுழல் நாற்காலியில் அமர்ந்து பெரிய கம்யூட்டர் மானிட்டரில் நோயாளியின் எக்ஸ் ரே , CT ஸ்கேன் படங்களை மூக்கு கண்ணாடியை நாசி நுனிக்கு கீழிறக்கி கூர்ந்து பார்த்து கொண்டிருந்தார்.
"வாங்கம்மா நீங்கதான் Mr .தன்ராஜின் மனைவியா ..?"
"ஆமாம் டாக்டர் .."
"உட்காருங்க.. நீங்க வேலூரா ..?"
ஒருவித பதட்டத்துடன் நாற்காலியை இழுத்து நுனியில் உட்கார்ந்த தன்ராஜின் மனைவிக்கு திரை படங்களில் மருத்துவர்கள் ஒரு எக்ஸ்-ரே வை தலை கீழாக பிடித்து பார்த்து உதட்டை பிதுக்கி , தலையை ஆட்டி "இன்னும் மூணு மாசம்தான் .." என்று சொல்லும் காட்சிகளெல்லாம் கண் முன் தோன்றி மறைந்தன.
"இல்லை டாக்டர் அம்பத்தூர் . இங்க உறவு காரங்க கல்யாணதுக்கு வந்தோம் ..வந்த எடத்துல இப்படி ஆயிடிச்சி. ரிசப்ஷன் முடிஞ்சி ஃ ப்ரெண்ட்ஸ் கூட கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனாரு. எனக்கு அப்பவே தெரியும் இந்த ஆளு இப்படி ஏதாவது பண்ணுவாருன்னு. ஃ ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து குடிச்சிட்டு வண்டி ஓட்டி ..." முந்தானையில் கண்களை கசக்கினாள் அந்த பெண்மணி.
"கவலை படாதீங்கம்மா. நல்லவேளை உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லை . ஆனா இடுப்பில இருக்கிற சில எலும்புங்க உடைஞ்சு சிறுநீர் வெளியேறும் வழி பாதிக்க பட்டிருக்கு. அதனால சிறுநீர் வெளியேற முடியாம சிறுநீர்ப்பை உப்பி அடிவயிறு வீங்கி இருக்கு. ஃபோலிஸ் கதீட்டர் -ங்குற ரப்பர் குழாயை உள்ளே செலுத்தி சிறுநீரை வெளியேற்ற முயற்சி செய்தோம் ஆனா முடியலே. சிறுநீர் பையின்கொள்ளவை விட அதிகமானால் சிறுநீர்
சிறுநீரகத்துக்கு ஏறிஅதனால சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் .
அதோடு சிறுநீர் கசிந்து உள்ளே இருக்கும் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கு .அதனால அவருக்கு அடிவயிற்றில ஒரு குழாயை செலுத்தி சிறுநீரை வெளியேற்றி இருக்கோம். இதை "சுப்ரா பியுபிக் பஞ்ச்சர்"ன்னு சொல்லுவாங்க . இது தற்காலிகம்தான். அவருக்கு உடனடியா அறுவை சிகிச்சை செய்தாகணும். ..உங்க கணவர் இப்போ கையெழுத்து போட முடியாத நிலைமையில் இருப்பதாலே நீங்க அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்து இந்த பேப்பர்ல கையெழுத்து போடணும் . "இன்ஃ பார்ம்டு கன்சென்ட்" அதாவது ,
டாக்கர்-ங்குற முறையில அறுவை சிகிச்சை பற்றியும் அதன் பின் விளைவுகள் பற்றியும் நோயாளிக்கு விளக்க வேண்டியது என் கடமை . . விபத்தால அடி வயிற்றில இருக்கிற சில நரம்புகள் பாதிக்க பட்டிருக்கிறதால துரதிருஷ்ட வசமா பிற்காலத்தில் தாம்பத்திய உறவு பாதிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. மருத்துவரின் கவன குறைவு தவிர்த்து அறுவை சிகிச்சை செய்ததின் விளைவாகத்தான் அப்படி நேர்ந்தது என்று சட்ட ரீதியாக மருத்துவ நிர்வாகத்தின் மீதோ மருத்துவர் மீதோ நஷ்ட ஈடு எடுக்க மாட்டோம் என்பதற்கான உங்கள் சம்மதம் கூட இதுல உள்ளடங்கி இருக்கு ... .
உங்களுக்கு வேற ஏதாவது கேட்கணும்னு தோணிச்சின்னா கேளுங்க ..."
தன்ராஜின் மனைவி எதுவும் பேசும் நிலைமையில் இல்லை . கன்னிபருவத்திலே சிச்சுவேஷன் சாங் "பட்டு வண்ண ரோசாவம் .." பாட்டு மட்டும் ஏனோ நினைவுக்கு வந்தது .
வாழ்க்கையில் எல்லா கெட்ட விஷயங்களும் ஒரே சமயத்தில் கைகோர்த்து வர , தன் விதியை நொந்து கொண்டு அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்து பேப்பர்களில் கையெழுத்து போட்டு கொண்டிருக்கும் கேப்பில் ... ஒரு விஷயம் மட்டும் உங்களிடம் சொல்லி கதையை தொடர்கிறேன்.
அதாவது டாக்டர் குமர குருவும் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளி தன்ராஜும் ஒரு கால கட்டத்தில் பல வருடங்களுக்கு முன்பு சந்தித்து இருக்கிறார்கள் என்பதும் பொறியாளராக ஆக வேண்டிய டாக்டர் குமரகுரு மருத்துவராக காரணமே தன்ராஜ்தான் என்கிற விஷயம் நம்மை தவிர வேறு யாருக்கும் தெரியாது .. சரி மேல படிங்க ..
சென்னை ..25 வருடங்களுக்கு முன்பு ...
ப்ளஸ் டூவில் ஸ்டேட் ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்ற குமர குருவுக்கு இப்படி ஒரு குழப்பம். மருத்துவமா இல்லை பொறியியலா ..? எதுவும் முடிவு செய்ய முடியாத நிலையில் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை முன்னதாக இருந்ததால் பொறியியல் கல்லூரியில் விண்ணப்பித்து மனதில் இருந்து மருத்துவத்தை நீக்கி தான் ஒரு பொறியாளன் என்கிற நினைப்புக்கு தன்னை மாற்றி கொண்டு பொறியியல் கல்லூரி வாழ்கையை துவங்கினார்.
அப்போதெல்லாம் கல்லூரிகளில் ராகிங் என்ற பெயரில் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. புதிதாக சேரும் மாணவர்களை சீனியர்கள் வெறும் தரையில் நீச்சலடிக்க சொல்லுவது , நடனமாட சொல்லுவது போன்ற சிறுபிள்ளை தனமான கல்லூரி வளாகத்தில் நடைபெறும் கோமாளிதனங்கள் பலராலும் சகித்து கொள்ளப்பட்டது. ஆனால் விடுதியில் ராகிங் எனும் பெயரில் சில விஷமிகளின் வக்கிர புத்தியும் கொடூர காமுக குணங்களும் அரங்கேறும். பல சமயங்களில் இவை எல்லை மீறி பல பேர் வாழ்கையில் நீங்காத வடுக்களை ஏற்படுத்தியதுண்டு ... தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கூட போனதுண்டு ..
குமர குரு விடுதியில் சேர்ந்து அன்றோடு இரண்டாம் வார இறுதி. அன்றுதான் "அஃபிஷியலாக" வருடம்தோறும் சீனியர்களால் ராகிங் நடைபெறும் நாள்..
"இன்னைக்கு கிளாஸ் முடிஞ்சி சேர்மன் ரூம்ல ... அவங்க என்ன செய்ய சொல்லுறாங்களோ அதை செஞ்சிட்டா எந்த பிரச்சனையும் இல்லை. இன்னிக்கு ஒருநாள்தான்.. அப்புறம் கவலை பட தேவையில்லை .."
அன்று காலையிலிருந்தே அரசல் புரசலாக புது மாணவர்கள் அந்த மாலையை எதிர்பார்த்து ஏதேதோ பேசி கொண்டிருந்ததனர். சிலர் ஆவலோடு எதிர்பார்த்தும் , சிலர் சற்று பயந்தும் காணப்பட்டனர். ஒருவரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது. சக மாணவன் ஒருவன் குமர குருவின் காதை கடித்தான் ..
" முக்கியமா ஹிட்லர் சல்யூட் அடிக்க சொல்லுவாங்க. .."
"அது ஈஸி தானே .. ஒரு கையை உயர்த்தி ..."
"இது நீ நெனைக்கற மாதிரி இல்லை ..."
"அப்போ எப்பிடி ..?"
"வெயிட் பண்ணு இன்னிக்கி சாயங்காலம் நீயே தெரிஞ்சுக்குவே .."
அன்று மாலை சேர்மேன் தன்ராஜ் அறைக்கு ஜூனியர்கள் அனைவரும் கூடினர். குழுக்களாக பிரித்து அவன் அறைக்குள் அனுப்பபட்டனர்.
அறைக்குள் நுழைந்ததும் குமர குருவுக்கு மூச்சு முட்டியது . எங்கும் ஒரே சிகரெட் புகை மண்டலம் . அங்கங்கே காலி மது பாட்டில்கள் தரையில் சிதறி கிடக்க சுவர் முழுவதும் அரை நிர்வாண பெண்களின் போஸ்டர்கள் . ..
சீனியர்கள் பலர் கட்டிலில் அமர்ந்திருக்க எதிரே பலி கடாக்கள் போல் ஜூனியர்கள் நிற்கவைக்க பட்டிருந்தனர் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ராகிங் செய்யப்பட்டனர் . சிலர் கழை கூத்தாடி குரங்கை போல் "பல்டி" அடிக்க , புகை பழக்கம் இல்லாதவர்கள் வாயில் வலுக்கட்டாயமாக சிகரெட் திணிக்கப்பட்டது ..மது சுவை அறிந்திராதவர் வாயில் மது ஊற்றப்பட்டது. குமர குருவும் மற்றவர்களும் இன்றோடு இந்த மூடர்களின் முட்டாள்தனம் ஒரு வழியாக முடிந்தால் போதும் என்று பல்லை கடித்து கொண்டு அவர்கள் செய்ய சொன்ன கோமாளிதனங்களை ஒவ்வொன்றாய் செய்ய கடைசியில் போதையில் இருந்த வைஸ் சேர்மன் எழுந்து,
"வெரி குட் .ஃ பிரெண்ட்ஸ் ..ஒத்துழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி ..இன்னிலேந்து நம்ப எல்லோரும் ஃ பிரெண்ட்ஸ்.. நம்ப சபை கலையறதுக்கு முன்னே கடைசியா நம்ப சேர்மனுக்கு எல்லோரும் ஹிட்லர் சல்யூட் வெச்சி மரியாதை செஞ்சிட்டு கெளம்பலாம் ..." என்றான் தள்ளாடி கொண்டே .
வரிசையில் முதலில் இருந்த மாணவன் இதை ஏற்கெனவே எதிர்பார்த்தது போல் ஆடையை களைய ஆரம்பித்தான் ...குமர குருவுக்கு தூக்கி வாரி போட்டது .
என்ன ஒரு கொடுமை .? வக்கிர புத்தி கொண்ட கீழ்த்தரமான செயல்கள் ..?
முதல் ஆளை தொடர்ந்து பிறந்த மேனியில் எல்லா மாணவர்களும் வரிசையாக ஒரு கையை தூக்கி விறைப்பாக நாஸி சல்யூட் செய்து நிற்க, சேர்மன் தன்ராஜ் எழுந்து சிகரெட் புகைத்து கொண்டே ஒரு நாட்டின் தேச தலைவர் அணிவகுப்பை பார்வையிடுவது போல் ஒவ்வொருவராக பார்த்து கொண்டு கடந்து வர கடைசியாக நின்று கொண்டிருந்த குமர குருவின் இதய துடிப்பு சென்செக்ஸ் குறியீடு போல் தாறு மாறாக ஓடியது ..
கடைசியாக குமரகுருவின் எதிரே வந்து நின்ற தன்ராஜ், திமிராய் குமர குருவின் முகத்தில் சிகரெட் புகையை ஊதி ,
"நீ மட்டும் என்ன..? மெரிட்ல வந்தா பெரிய கொம்பா ...? கழட்டுடா ..." என்று உரக்க கத்த,
குமர குரு எதுவும் செய்யாமல் நிற்க ...."பளார் ....." அறையில் பொறி கலங்கியது ..!!
அறை வாங்கியதோடு மட்டும் இல்லாமல் தன் மானம் பலர் முன்னிலையில் கடை விரிந்த அவமானத்தால் கூனி குறுகி போக, அந்த வார இறுதியோடு விடுதியை காலி செய்து கிளம்பி அப்பாவிடம் உண்மையான காரணம் சொன்னால் சங்கட படுவார் என்பதற்காக பொறியியல் பிடிக்கவில்லை என்று ஒரு காரணம் சொல்லி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்து படித்து டாக்டரானது ....அதெல்லாம் பழைய கதை ...
புது அத்தியாயம் , புது நண்பர்கள் , புது வாழ்கை.. இதெல்லாம் நடந்து பல வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையில் அந்த நிகழ்வை மறந்தே போனார் டாக்டர் குமர குரு .
எடுத்த துறை எதுவாக இருந்தாலும் தன்னை முழு மனதோடு ஈடு படுத்தி கொண்டால் வாழ்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு சிறந்த ஒரு உதாரணம் டாக்டர் குமார குரு .
தன் திறமையாலும் அறிவாற்றலாலும் மருத்துவ உலகில் தனி இடத்தை பிடித்து மற்ற மருத்துவர்களால் முடியாது என்று கைவிடப்பட்ட பல கேஸ்களை சவாலாக எடுத்துக்கொண்டு பல நோயாளிகளுக்கு புது வாழ்வு தந்தவர் . உலகில் பல மருத்துவ ஜர்னல்களில் இவரின் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடபட்டு உலக அரகில் பல அங்கீகாரங்களை பெற்று தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்..
சற்று சவாலுக்குரிய கேஸ் என்பதால் அன்று அவசர பிரிவிலிருந்து அழைப்பு வந்த போது இந்த நிகழ்வு நடந்து பல வருடங்கள் ஆகி விட்டதாலும் , விபத்தில் பலமாக காயம் பட்டு முகம் வீங்கியிருந்த தன்ராஜை அவருக்கு அடையாளம் கண்டு கொள்ள வாய்ப்பில்லை .
"ICU- வில் இத்தர பேருக்கு பேஷண்ட காணாம் பட்டில்லா.. ஒரு ஆள் கார் மட்டுமே காணம் பட்டு ..."
மருத்துவர்கள் ரவுண்ட்ஸ் வரும் நேரமென்பதால் நோயாளியை பார்க்க குழுமி இருந்த கும்பலை விரட்டி கொண்டிருத்தாள் சேர நாட்டிளம் செவிலி.
ரவுண்ட்ஸின் போது டாக்டர் குமர குருவின் உடன் இரண்டு மருத்துவ மாணவிகள் கையில் பய பக்தியோடு நோட்ஸ் எடுத்து கொண்டிருந்தனர்.
தன்ராஜ் கை கால்களில் கட்டுகளோடு படுத்திருக்க ஒரு குழாயில் சிறு நீர்ப்பையில் இருந்து கட்டிலுக்கு அடியில் சிகப்பு நிறத்தில் இரத்தம் கலந்த சிறுநீர் ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரிக்க பட்டு தொங்கியது . பக்கத்தில் பல வித திரவ மருந்துகளை தானியங்கி இயந்திர பம்புகள் மெல்லிய குழாய் மூலம் இரத்த நாளங்களில் செலுத்தி கொண்டிருந்தது . மானிட்டரில் இதய துடிப்பு வரைபடம் , இரத்த அழுத்தத்தை குறிக்கும் பலவித எண்கள் பளிசிட்டுகொண்டிருந்தது .
டாக்கர் குமரகுருவை பார்த்ததும் எழுந்து நின்று மரியாதையுடன் வணங்கினாள் தன்ராஜின் மனைவி .
"வணக்கம்மா ..சௌக்கியமா இருக்கீங்களா ..?ஆபரேஷன் எல்லாம் நல்ல படியா முடிஞ்சது . இரணம் ஆற இன்னும் கொஞ்ச நாள் ஆகும் . இன்னும் ரெண்டு நாள்ல ICU -ல வெச்சிட்டு அப்புறம் ரெகுலர் யூராலாஜி வார்டுக்கு மாத்திடலாம் ."
" ரொம்ப நன்றி டாக்டர் இப்பத்தான் எழுந்து ரெண்டு வார்த்தை பேசினாரு . மறு படியும் தூங்கிட்டாரு. .."
வலிநிவாரண மருந்து, மயக்க மருந்துகளால் முழுவதும் மயக்க நிலை தெளியாமல் இருந்த தன்ராஜ் இந்த சம்பாஷனை கேட்டு லேசாய் கண்விழிக்க எதிரில் குறுந்தாடியுடன் நின்றுருந்த டாக்டர் குமரகுருவும் அவர் அருகில் நின்றிருந்த இரண்டு மருத்துவ மாணவிகளும் மங்கலாக தெரிந்தனர் .
தன்ராஜ் கண் விழித்ததை பார்த்த அவன் மனைவி காதருகே போய்,
"இவர்தான் டாக்கர் குமரகுரு... உங்களுக்கு ஆபெரேஷன் செஞ்ச பெரிய டாக்டர் ...." என்றாள் .
அதை புரிந்து கொண்ட தன்ராஜ் இரண்டு கரமும் தூக்கி கை கூப்ப முடியாத நிலையில் இடது கை, வலியால் அடிவயிற்றை பிடித்திருக்க வலது கரத்தை சிரமப்பட்டு நீட்டி உயர்த்தி அவருக்கு வணக்கம் செலுத்த பிரயர்த்தன பட, பார்பதற்கு அது கிட்டத்தட்ட அந்த "ஹிட்லர் சல்யூட் " போலிருந்தது .
*******
No comments:
Post a Comment