கண்ணெதிரே தவழ்ந்து குமரியாய் வளர்ந்து ஒருநாள் காற்றோடு காற்றாய் கலந்து காணாமல் போன ஒரு கஸ்தூரி மஞ்சளுக்கு சமர்ப்பணம் ..
ஊடலின் சோகம்
கூடலின் சுகம்..
சிசுவின் அழுகையில்
சுரந்திடும் முலை பாலில்
வழிந்தோடும் தாய்மை..
சிகையில் முதல்
வெள்ளி கண்டு கலக்கம்..
பேர பிள்ளைகள்
மடியை ஈரமாகிய பூரிப்பு...
யாவுமறியாமல்
வாழ்கை நாடகம்
முடியும் முன்னரே
பாதியில் எழுந்து
நீ கிளம்பியதேனோ ..?
காலன் வரும் வரை
காத்திருக்க பொறுமை இன்றி
உனக்கு நீயே
ஏன் எழுதிக்கொண்டாய் முடிவுரை ..?
வாழ்வை எதிர் கொள்ள முடியா
கோழையல்ல நீ
மரணத்தின் மூலைக்கு
தள்ளப்பட்ட நிராயுதபாணி ..
பாதி முடிந்த சித்திரமே
உன் முழு பிம்பம்
என் கண்களில் இன்றும்..
பரிபூரணமாய் நீ
என் இதயத்தில் என்றும்..
No comments:
Post a Comment