Saturday, June 29, 2013

நம்பிக்கை (கவிதை )



காற்றிலிருந்து விபூதி

வாயிலிருந்து சிவலிங்கம்

உடல் முழுதும் பரவிய புற்று

ஒரு நாளில் மாயமாய் மறைய

பக்கவாதம் கண்டு

சக்கர நாற்காலியில் இருந்தவர்

எழுந்து ஓடும்

அற்புதங்கள்

பள்ளி வாசலில் கரீம் பாய்

முகத்தில் ஊத ஓடிவிடும்

குழந்தையின் குளிர் ஜுரம்..

மந்திரத்தில் மாங்காய்

நம்புவோருக்கு....

இலையுதிர் காலம் ( கவிதை )













வசந்தத்தில் ஓர் நாள் ...

மடிகள் தலையணை

விரல்கள் கேசத்தில்

விளையாட மரகிளையில்

கிளிகள் கொஞ்சி பேசின

நம்மை போல் ..

பசு மரத்தில்

நாம் செதுக்கிய

நம் பெயர்கள்

இன்று வடுவாய்...

புரையோடிய என் இதயத்தின்

காயம் போல..

இப்போது இலையுதிர் காலம்

அந்த நினைவுகள்

நெஞ்சிலிருந்து உதிராமல் 

ஒற்றைமாய் நான் ..



Friday, June 28, 2013

இரயில் பயணங்களில் ..(கட்டுரை )

 
 
     ancestry.com என்று ஒரு இணைய தளம் .   குடும்ப பெயரை வைத்து
தங்கள் வம்சா வழி (family tree ) , மூதாதையரை பற்றி தெரிந்து கொள்ள ஏதுவான தளம் . ஒரு முறை நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட ஒரு   நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கையில்..
  "நம்மில் பெரும்பாலானோருக்கு  தாத்தா பெயர் தெரிந்தாலே அதிகம் .  இந்தியாவிலும் இப்படி ஒரு data base இருந்தால் நன்றாக இருக்குமே.." என்று சொன்னேன் . அதற்கு அவர்,

 "நீங்க வேற ..பரதேசி படம் பார்த்த அப்புறம் நானே ஆடி போயிட்டேன் . நம்ப கொள்ளு தாத்தா கொத்தடிமைன்னு தெரிஞ்சா இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போயிடும் .." என்றார்.

கிழக்கு இந்திய கம்பெனி என்று வணிகம் செய்ய வந்து நம்மில் புரையோடி கிடந்த பிரிவினையை சாதகமாக்கி நம்மை   அடிமைபடுத்தி   200 வருஷங்களுக்கு மேல் நம்மை ஆண்டு வளங்களை கொள்ளையடித்து ...புளித்து போன வரலாறு . ஆனால் அந்த வெள்ளைக்காரன் புண்ணியம் கட்டி கொண்ட விஷயங்களில் ஒன்று இந்தியன் ரயில்வேஸ் . இன்று உலகிலேயே பெரிய நெட்வொர்காக விளங்கும் இந்தியன் ரயில்வேக்கு அடித்தளம் போட்டவன் வெள்ளைகாரன்தான் .


அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் பல விஷயங்கள்  தொலைந்து போயின . சுழலும் கிராம ஃ போன் இசை தட்டு , எண்களை ஒவ்வொன்றாய் சுழற்றும் டிரிங் ..டிரிங் தொலைபேசி ,வால்வ் ரேடியோ, புகைப்பட சுருள் காமெரா ..

இவை தவிர தனிப்பட்ட முறையில் நான் நிறையவே " மிஸ்" செய்வது புகை வண்டி. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வாலிப பருவம் வரை  என் வாழ்கை பயணித்தது இரயில் ரோட்டில்தான் .  ரயில்வே குவார்டர்ஸ் ரயில் ரோட்டின் மிக அருகே இருந்ததால் குழந்தையாய் இருந்த போது எங்கள் இடுப்பில் கயிறு கட்டி கட்டில் காலோடு கட்டி வைப்பார்களாம்.

நாணயங்களை தண்டவாளத்தின் மேல் வைத்து இரயில் ஏறி சப்பையாக்குவதை பார்ப்பத்தில் ஒரு ஆனந்தம். ஊடகங்களுக்கு ஒலியை கடத்தும் தன்மை உண்டு இதற்கு ஒரு உதாரணம் தொலைவில் வரும் ரயில் வண்டியின் ஓசையை தண்டவாளத்தில் உணர முடியும் என்று வாத்தியார் பாடம் நடத்த இதை பரிசோதித்து பார்க்க தண்டவாளத்தில் நான் தலையை வைக்க இதை பார்த்து அப்பாவின் சகா "உங்க புள்ளை தண்ட வாளத்தில தலை வெச்சிருக்கான் " என்று சொல்ல வீட்டில் என்னமோ ஏதோ என்று பதற தலை தப்பியது தம்புரான் புண்ணியமாக போனது.
இதை போல் சிறார்கள் நாங்கள் கை கோர்த்து தண்டவாளத்தின் மேல் நடந்த நாட்கள் பல ..

சிறுவயதில் எல்லோருக்கும் ஒவ்வொரு மாதிரி ஆசை.  டாக்டர் , பைலட் ..இப்படி ...ஆனால் எனக்கோ லோகோ மோடிவ் நீராவி எஞ்சின் டிரைவர் ஆக வேண்டுமென்பது . ஏனோ தெரியாது அப்போதெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியர்கள்தான் புகைவண்டி மற்றும் டீசல் எஞ்சின் ஓட்டுனர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் பாசெஞ்சர் வண்டி வரும் போதும் எஞ்சின் வந்து நிற்கும் இடத்துக்கு போய் நின்று கொள்
வோம்.

கம்பீரமாக நீராவியை கக்கிகொண்டு பெரு மூச்செறிந்து
ஓடி வந்து நின்று ஆசுவாசபடுத்தி கொள்வதை பார்க்கும் பொழுது அந்த பிரம்மாண்ட கருப்பு இயந்திரம் முரட்டு காட்டு யானையை நினைவு படுத்தும்.
ஓட்டுனர்கள் தலையில் கரித்தூள் படிவதை தடுக்க கர்ச்சீப் கட்டி பின்புறம் சவலில் நிலக்கரியை வாரி லாவகமாக கீழே இரையாமல்   லீவரை இழுத்து இரும்பு கதவை திறந்து கனன்று கொண்டிருக்கும் தீயில் வீசுவதிலிருந்து
அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து
அந்த எஞ்சினின் இயக்கம் ஒவ்வொன்றும் அத்துப்படி .

கடைசி பெட்டியில் வெள்ளை யூனிபார்ம் அணிந்த கார்ட் விசில் அடித்து பச்சை கொடியை காட்டியவுடன் டிரைவர் மேலிருக்கும் கம்பியை பிடித்து இழுக்க வால்விலிருந்து நீராவி விடுபட்டு ஹாரன் வழியே போய் ..அதுதான் நம்மில் பலர் என்றோ கேட்ட கூ .....கூ ........!!

இப்போது எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் சுற்று சூழலை மாசு படுத்தாத நிலக்கரி, தண்ணீரை மட்டுமே பயன் படுத்தும் "கிளீன் எனர்ஜி "

  கப்பலில் இருக்கும் ஸ்டியரிங்  போல் ஒரு இரும்பு சக்கரத்தை
கடிகார திசையில் சுற்றி கடப்பாரை போன்ற ஒரு பெரிய லீவரை தூக்க மிக அழுத்தத்தில் இருக்கும் நீராவி பிரம்மாண்டமான பிஸ்டனை தள்ளி இரும்பு சக்கரத்துடன் இணைந்துள்ள  பெரிய நெம்பு கோல் சக்கரத்தை சுழற்றி வண்டியை முன் நகர்த்தும் . ஸ்டியரிங்கை
 கடிகார திசைக்கு எதிர் திசையில் சுழற்றினால் வண்டி பின் நோக்கி செல்லும் . இவ்வளவுதான் . மற்றபடி நீராவி அழுத்தங்களை பலவித மாணிகளில் அவ்வபோது  கண்காணிப்பர்  . எப்போதும் பைலட் கோ -பைலட் போன்று இருவர். ஒருவர் கரியள்ளி கொட்ட மற்றவர் மெயின் டிரைவர் . இவர் தான் எங்கள் ஹீரோ . ரயில்வே குவாரடர்ஸில் இருக்கும்
என் சக வயது பையன்கள் என்ஜினருகே போய் டிரைவரிடம் மூச்சா போகும் ஒருவிரல் சைகை காண்பித்தால் அதை அவர் புரிந்து கொண்டு எஞ்சினுக்கு போடும் கிரீஸை கொடுப்பார் . அது இப்போதைய சாசேஜ் போல் அழகாக பட்டர் பேப்பரில் சுற்றியிருக்கும் . அதுதான் எங்கள் play dough . ஒழுகும் ஃ பௌண்டைன் பேனாவுக்கும் மறையில் தடவினால் ஒழுகாது .

எக்ஸ்பிரஸ் ரயில் எங்கள் ஊரில் நிற்காது . அப்போதெல்லாம் ரயில்வண்டி ஒவ்வொரு நிலையத்தையும் கடந்து விட்டது என்பதற்கு அத்தாட்சியாக குறுப்பிட்ட எண் பொறிக்கப்பட்ட இரும்பு குண்டு மூங்கில் பிரம்பால் செய்யப்பட்ட டென்னிஸ் ராகெட் போன்ற வளையத்தில்
விலங்கு தோலினால் ஆன பௌச்சினுள் வைக்கப்பட்டு டிரைவரிடம் கொடுக்க படும். இதனை அந்த டிரைவர் அடுத்த நிலையத்தில் கொடுக்க வேண்டும் . ஒவ்வொரு நிலையத்திலும் இந்த முறையை பின்பற்றினால்தான் வண்டி அடுத்த நிலையத்துக்கு செல்ல முடியும் .

அந்த நிலையத்தின் நிலைய அதிகாரி (ஸ்டேஷன் மாஸ்டர் )
அல்லது பாயிண்ட்ஸ் மேன் , பிளாட்பாரத்தில்  அதிவேகமாக வரும் ரயிலுக்கு வெகு அருகில் நின்று கொண்டு அந்த மூங்கில் வளையத்தை கொடுக்க வேண்டும் . எக்ஸ்பிரஸ் வண்டியின் டிரைவர் தான் கொண்டு வந்த வளையத்தை வீசி எறிந்து இந்த வளையத்திற்குள்  லாவகமாக கையை நுழைத்து பெற்று செல்வார் . இரவு நேரங்களில் டிரைவருக்கு தெரிவதற்காக மூங்கில் வளையத்தை கொடுப்பவர் மறு கையில் தீபந்தம் ஏந்தி நிற்பர்.
இதை ஏதோ சர்க்கஸ் பார்ப்பது போல் ஒவ்வொரு முறையும் புதிதாக பார்ப்பது போல் பார்த்து அதிசயித்ததுண்டு .

இரயில்வே தொழிலாளிகள் குடும்பம் எப்பொழுதும் கழைகூத்தாடிகள் போல் ட்ரான்ஸ் ஃ பர் -க்கு தயாராக இருக்க வேண்டும் . ஒருமுறை திருவண்ணாமலைக்கு பக்கத்தில் ஒரு ஊரில்  இருந்தோம் .
இரயில் வெகு தொலைவில் மலையடிவாரத்தில் புகையை கக்கி கொண்டு வளைந்து வரும் காட்சி கொள்ளை அழகு ,
தேர்ந்த ஓவியனின் கேன்வாஸ் ஓவியம்  போல.

ஜன்னலோரம் பயணம் செய்து பச்சை பசேல் வயல் வெளிகள் , வேகமாக ஓடும் மரங்கள் , படிக்கட்டில் நின்று வளைவில் நம்மை இழுத்து செல்லும் எஞ்சினை எட்டி பார்த்து ரசித்த நாட்கள் ..(கண்களில் கரியும் விழுந்ததுண்டு )

பின்னர் அகல ரயில் பாதை வந்த பிறகு மின்மயமாக்க பட்டு புகை வண்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் கரும்புகை போல் மறைந்து
போனது .

இப்போது அந்த அனுபவம் கிடைக்க வேண்டுமானால் குன்னூர்- உதகமண்டலம் இரயில் பயணம் மேற்கொண்டால் கிடைக்கும் . அற்புதமான அனுபவம். உயிரே படத்தின் "தக தைய தைய தையா .." பாடல் படமாக்கபட்டது இந்த வண்டியில்தான் .

எழில் கொஞ்சும் நீலகிரி மலை பெண்ணின் தேகத்தின் வளைவு நெளிவுகளில் ஊர்ந்து மேடு பள்ளங்களில் ஓடி இன்னும் கொஞ்ச நேரம் நீடிக்காதா என மனம் ஏங்கிடும் இருண்ட குகை பிரவேசம் ....ஒரு பரவச அனுபவம்.

UNESCO -வால் World Heritage Site ஆக அங்கீகரிக்கபட்டு
இன்னும் பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டுதலுக்கு உரிய விஷயம் .
 உயர்ந்த பாலத்தில் இரயில் வண்டி செல்கையில் கீழே படு பாதாளத்தை பார்க்கும் பொது ஏதோ வானத்தில் பறப்பதை போன்றதொரு உணர்வு . மீண்டும் பழைய இரயில் நாட்களை நினைவு படுத்திய பயணம் .
இதுவும் இன்னும் எத்தனை காலத்துக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது.

மறைந்து விட்ட "டைனசர்" இனம் போல நம் குழந்தைகள்
எதிர் காலத்தில் புகை வண்டியை படத்தை
பார்த்தோ இல்லை கிழக்கே போகும் இரயில் படத்தின் " பூவரசம்பூ பூத்தாச்சி பாடலை..." பார்த்தோதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது .

இப்போது மிச்சமிருப்பது   புகை வண்டி விட்டு சென்ற கரும்புகை போல் வானில் நீண்டு மிதக்கும் கார் மேகம் நினைவு படுத்தும்   இரயில் கால நினைவுகள் மட்டுமே .....
.                                                                         

                                                                             ********

 

Sunday, June 23, 2013

ஆறாம் அறிவு (கவிதை )


ரகசியம் (கவிதை)

காதோடுதான் ஒரு
ரகசியம் சொன்னாய் ..
உன் இதழ்கள்
உரசிய ஸ்பரிசம்
பிடித்திருந்தது
ரகசியத்தை விட ...

Saturday, June 22, 2013

காசு ..பணம் ..துட்டு ..money ..money (சிந்தனை துளி )

இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை படக்கூடாது என்று ஒரு பழமொழி  உண்டு.  ஒரு கதை நினைவுக்கு வந்தது . அதுக்கு முன்னாடி ஒரு சின்ன சமாச்சாரம் . Youtube  ஆரம்பத்துல வர கமர்சியல் மாதிரி இந்த கதைக்கும் அதுக்கும்  எந்த சம்மந்தமும் இல்லை ..

இப்பல்லாம் ஆளாளுக்கு ஹாண்ட்ஸ்ஃப்ரீ, புளு டூத் -ன்னு பேசிக்கிட்டே  நடமாடுறதால  யாரு தனக்கு தானே பேசிக்கற அரை லூசு , யாரு Hi-Fi Wi-Fi ஆசாமின்னு அடையாளம் கண்டுக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு ...சரி  இப்ப கதை..

முன்னொரு காலத்துல ஒரு   ஊருக்கு ஒரு பெரிய ஞானி விஜயம் செய்தாராம். அந்த ஊர் மக்கள் பலரும் அந்த ஞானியை தரிசித்து அருளாசி பெற்றனர்.

இதை கேள்விப்பட்ட ஒரு ஏழை விவசாயி அவரை காண சென்றான் . ஒரே கூட்டம். வரிசையில் நின்று  அவன்  முறை வந்ததும் முகத்தில் சாந்தம் தவழும் அந்த ஞானி அந்த குடியானவனிடம் வினவினார்

"சொல் மகனே , உனக்கு என்ன குறை ..?"

அதற்கு அந்த விவசாயி " அய்யா நாட்டில் எல்லோரும் சகல சௌபாக்கியங்களோடு சந்தோஷமாக இருக்கிறார்கள் . நான் மட்டும் சந்தோஷமாக இல்லை .."

அதற்கு அந்த ஞானி " சரி ..உன்னிடம் இருக்கும் சொத்து என்ன ..? என்று கேட்க, அதற்கு அந்த விவசாயி

" ஐயா சொல்லும்படியாக ஒன்றும் இல்லை . ஒரு காணி நிலம் , கொஞ்சம் கோழிகள், கால்நடை ஒரு சிறு குடிசை அவ்வளவுதான் இதை வைத்து கொண்டு எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் ....?" என்றான் .

" உனக்கு வாழ்க்கையில் சந்தோசம் வேண்டும் அவ்வளவுதானே ..? உனக்கு ஒரு பரீட்சை வைக்க போகிறேன் . அது முடிந்ததும் நீ விரும்பிய சந்தோசம் உனக்கு கிட்டும் என்றார் .."

அதை கேட்ட குடியானவன் "சரி நான் தயார் என்றான் .."

"சரி இன்று இரவு தூங்கும் பொழுது கோழிகளை உன் குடிலுக்குள் கொண்டு வந்து அவைகளுடன்  தூங்கு ..நாளை எனை வந்து பார்.."  என, அதற்கு அந்த விவசாயி,

 " ஐயா , நான் இருப்பதோ சிறிய குடிசை இதில் எப்படி .." என்று தயங்க ,

"உனக்கு சந்தோஷம் வேண்டுமா , வேண்டாமா ?" என்று அந்த அறிஞர் கேட்க அரை மனதோடு விடை பெற்று சென்றான் விவசாயி .

மறுநாள் அந்த ஞானியை சந்தித்த விவசாயி "அய்யா கோழிகளின் சத்தத்தில் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றான் ..."

 அதற்கு அந்த ஞானி,  " நல்லது இன்று இரவு கோழிகளுடன் வெள்ளாடுகளையும் வீட்டினுள் கொண்டு வந்து உறங்கு .." நாளை மீண்டும் எனை வந்து பார் " என்றார் .

குடியானவன் அவர் சொன்னதை நிறைவேற்றி மறுநாள் மீண்டும் அந்த ஞானியை சந்தித்தான் . "நேற்று இரவு எப்படி தூங்கினாய் ..? என்று அவர் கேட்க ,

 "ஐயா முந்தைய இரவே தேவலாம் , கொழிகளோடு சேர்த்து ஆடுகள் சத்தம் கொடுமையாக இருந்தது .." என்றான் .

 " சரி இதுதான் பரிட்சையின் கடைசி நாள் ..இன்று இரவு கோழி, ஆடுகளுடன் மாடுகளையும் சேர்த்து கொள் ..மீண்டும் நாளை வா .." என்று சொல்ல , அந்த விவசாயிக்கு முதன் முறையாக நாம் சரியான   ஒரு பித்தனிடம் வந்து மாட்டிகொண்டோமோ என்று ஐயம் எழுந்தது 

எதற்கும் அது கடைசி முறை என்பதால் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் வீட்டுக்கு கிளம்பினான். மறுநாள் ஞானியை சந்தித்த விவசாயின் முகம் தூக்கமில்லாமல் சோர்ந்திருந்தது

 " அய்யா என் மேல்  ஏன் இந்த கொல வெறி ..? நேற்று இரவுதான் நரகம் என்பது என்ன என்பதை முழுமையாக அனுபவித்தேன் .. கோழி, ஆடு , மாடுகள் இவைகளுக்கே இடம் போதவில்லை அவைகளின் சாணத்தின்  நாற்றத்தோடு கொசுக்கள் என்னை பிடுங்கி எடுத்து விட்டன . ஒரு நொடி கூட கண்ணயர முடியவில்லை .." என்று புலம்ப  , ஞானி.

 "  இதைதான் நான் எதிர்பார்த்தேன் .".என்றார் மர்மமாய் புன்னகைத்து . "

"மகனே இன்றோடு உன் கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு வரும் போ.. வீட்டுக்கு சென்று  வீட்டை நன்றாக கழுவி  சுத்த படுத்தி இன்று இரவு நீ மட்டும் தனியே படுத்துறங்கு . நாளை வந்து பார் .." என்று விடை கொடுத்து அனுப்பினார்
.
மறுநாள் ஞானியை காண வந்த  குடியானவன் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி ...

" அய்யா ஜன்னலில் வந்த நிலவொளியில் , வீசிய இதமான  தென்றலில் ,  நேற்று இரவு அருமையான உறக்கம் கண்டேன் இதுதான் சொர்க்கம் 
  . " என்றான் .

அதற்கு அந்த ஞானி  , "இதுதான் நீ விரும்பிய சந்தோஷம் .. போய் வா " என்றார் .

என்னதான் வெளியில் இருக்கும் லௌதீக விஷயங்களில் சந்தோஷம் இல்லை,  உண்மையான சந்தோஷம்  நம் மனதுக்குள்தான்
 இருக்கிறது என்று இந்த கதையின் நீதி சொன்னாலும் ஒவ்வொரு முறையும் புது மாடல் iphone , ipad வரும்போது temptation- ஐ கட்டுபடுத்துவது சிரமமாகவே இருக்கிறது.

 இப்பதான் புரியுது ஏன் iphone க்கு ஆப்பிள் லோகோவா 
 வச்சிருக்காங்கன்னு ..

ஏடன் தோட்டத்தில temptation ஆரம்பிச்சதே இந்த ஆப்பிள் -ல இருந்து
தான் என்பதாலோ .....?

Wednesday, June 19, 2013

விலை நிலம் (கவிதை)


வெட்டப்படும்

பசு மரங்கள்

நாளை

நம் சந்ததிக்கு

கொள்ளி கட்டைகள் ..

விளை நிலங்கள்

விலை நிலங்களாகி

தோண்டப்படும்
 
அஸ்திவாரங்கள்

நமக்கு நாமே தோண்டிய

சவ    குழிகள் ..

Sunday, June 16, 2013

கொன்றால் பாவம் (கவிதை)

உங்கள் நாவின்
ருசிக்காக தினம்
மரித்தோம்  என்றன
வெள்ளாடுகள்..
உடைக்காக மரித்தோம்  
என்றன பட்டு பூச்சிகள் ..
நீவிர் புசித்த தேகம் போக 
எஞ்சிய எங்கள் தோல்
உங்கள் காலணி
என்றன ஆவினம் ...
குண்டடி பட்டு மரிக்கும் முன்
மானினம் கேட்டன
உம் பாவங்களுக்கு
மரித்தவரை
மட்டும் கடவுள் என்றீர் ...

கணக்கு வாத்தியார் (கவிதை )


அதே ஒற்றையடி பாதை..
பழைய மிதி வண்டி..  
சிறிது நின்று இளைப்பாற
உயரே ஒரு ஆகாய விமானம்
அண்ணாந்து பார்த்தார் 
கணக்கு வாத்தியார்
தன்னிடம் பயின்ற குமார்
அதில் பயணிப்பதை அறியாமலே ...

Thursday, June 13, 2013

பசி (கவிதை )


தன்மானம்

பசியிடம் தோற்று

மழையில் நனைந்து

யாசித்து

கொண்டிருந்தது

விதியிடம்....


முத்தம் (கவிதை)





விழிகள்  துவக்கிய

காதல் காவியத்திற்கு

இதழ்கள் எழுதும் முகவுரை

காம சூத்திரத்தின்

முதல் அத்தியாயம்

அதரங்கள் உரசி

பற்ற வைக்கும்

இன்ப தீ

மன்மத குறளில்

உதடுகள் எழுதும் காமத்து பால்

உச்சரிக்காமல் இருவர் பேசும்

மோக மொழி ...

Tuesday, June 11, 2013

கவிதாஞ்சலி

கண்ணெதிரே தவழ்ந்து  குமரியாய் வளர்ந்து  ஒருநாள் காற்றோடு காற்றாய் கலந்து காணாமல் போன  ஒரு கஸ்தூரி மஞ்சளுக்கு சமர்ப்பணம் ..



ஊடலின் சோகம்
கூடலின் சுகம்..
சிசுவின் அழுகையில்
சுரந்திடும் முலை பாலில்
வழிந்தோடும் தாய்மை..
சிகையில்  முதல்
வெள்ளி கண்டு கலக்கம்..
பேர பிள்ளைகள்
மடியை ஈரமாகிய பூரிப்பு...
யாவுமறியாமல்
வாழ்கை நாடகம்
முடியும் முன்னரே
பாதியில் எழுந்து
நீ கிளம்பியதேனோ ..?
காலன் வரும்  வரை
காத்திருக்க பொறுமை இன்றி
உனக்கு நீயே
ஏன் எழுதிக்கொண்டாய் முடிவுரை ..?
வாழ்வை எதிர் கொள்ள முடியா
கோழையல்ல நீ
மரணத்தின் மூலைக்கு
தள்ளப்பட்ட நிராயுதபாணி ..
பாதி முடிந்த சித்திரமே
உன் முழு பிம்பம்
என் கண்களில் இன்றும்..
பரிபூரணமாய் நீ
என் இதயத்தில் என்றும்..

Monday, June 10, 2013

சல்யூட் (சிறுகதை)

அன்புடையீர்...இந்த சிறு கதையை நீங்கள்  படித்து  முடித்த உடன் இந்த உலகம் ஒரு உருண்டை, வாழ்கை ஒரு வட்டம் என்ற உண்மை      பொட்டில் அடித்தார் போல்  உங்களுக்கு  புரியும் ...


அன்புடையீர்...இந்த சிறு கதையை நீங்கள்  படித்து  முடித்த உடன் இந்த உலகம் ஒரு உருண்டை, வாழ்கை ஒரு வட்டம் என்ற உண்மை     பொட்டில் அடித்தார் போல்  உங்களுக்கு  புரியும் ...



என்னடா சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுறாரே ஒருவேளை கிரிக்கெட் விளையாடி  பின்னந்தலையில் "மெடுல்லா ஒப்ளேங்கட்டா"-வில இவருக்கு அடிபட்டிருக்குமோன்னு தானே யோசிக்கிறீங்க ......?

அதெல்லாம் ஒண்ணுமில்லே ..ஒரு தடவைக்கு  ரெண்டு தடவை  சொன்னா தத்துவம் அடி மனசுல ஆழமா பதியும்னுதான் .  சரி வாங்க,  கதைக்கு போவோம்...



வேலூர் ..பிரபல தனியார் மருத்துவ மனை ...  .உள்ளூர் நோயாளிகள் போதாதென்று  இந்தியாவின் பல்வேறு மாநில நோயாளிகள் , உறவினர்கள் என்று ஏகப்பட்ட கூட்டம்

"இங்க  தன்ராஜ் ஃ பாமிலி யாரு  ...?" அட்டெண்டெர் பெரியசாமி வெளியே பெஞ்சில் வரிசையாக அமர்ந்திருந்த நோயாளிகளையும் உறவினர்களையும் பார்த்து கேட்க ,

"நான்தாங்க  பேஷண்டுக்கு  வைஃப் ." என்றார் ஒரு முப்பதைந்து வயது மதிக்கதக்க பெண்மணி கவலை தோய்ந்த முகத்தோடு .

"உள்ள போங்கம்மா ...டாக்டர் வர சொல்றார் ..."

டாக்டர் குமரகுரு "கன்சல்டண்ட் யூராலாஜி" என்று வெள்ளை  எழுத்துக்களில்  மேஜை மீது இருந்த செவ்வக மர பலகை சொல்லியது .

 சுமார் நாற்பத்தைந்து வயதில் குறுந்தாடியில், கஞ்சி போட்டு இஸ்தரி செய்து தும்பை பூ வெள்ளை கைத்தறி சட்டை அவர் எளிமையை காட்ட , அகன்ற நெற்றியும்   கண்களில் தெரிந்த தேஜஸும் பழுத்த அனுபவத்தை காட்டியது.

 சுழல் நாற்காலியில் அமர்ந்து    பெரிய கம்யூட்டர் மானிட்டரில்  நோயாளியின்  எக்ஸ் ரே , CT ஸ்கேன் படங்களை மூக்கு கண்ணாடியை நாசி நுனிக்கு கீழிறக்கி  கூர்ந்து பார்த்து கொண்டிருந்தார்.

"வாங்கம்மா நீங்கதான் Mr .தன்ராஜின் மனைவியா ..?"

"ஆமாம் டாக்டர் .."

"உட்காருங்க..   நீங்க வேலூரா ..?"

 ஒருவித பதட்டத்துடன் நாற்காலியை இழுத்து நுனியில் உட்கார்ந்த  தன்ராஜின் மனைவிக்கு திரை படங்களில் மருத்துவர்கள் ஒரு எக்ஸ்-ரே வை தலை கீழாக பிடித்து பார்த்து   உதட்டை பிதுக்கி , தலையை ஆட்டி  "இன்னும் மூணு மாசம்தான் .." என்று சொல்லும் காட்சிகளெல்லாம் கண் முன் தோன்றி மறைந்தன.

"இல்லை டாக்டர் அம்பத்தூர் . இங்க உறவு காரங்க கல்யாணதுக்கு வந்தோம் ..வந்த எடத்துல இப்படி ஆயிடிச்சி. ரிசப்ஷன் முடிஞ்சி ஃ ப்ரெண்ட்ஸ் கூட கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனாரு. எனக்கு அப்பவே தெரியும் இந்த ஆளு இப்படி ஏதாவது பண்ணுவாருன்னு.  ஃ ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து குடிச்சிட்டு வண்டி ஓட்டி ..."  முந்தானையில் கண்களை கசக்கினாள் அந்த பெண்மணி.

"கவலை படாதீங்கம்மா. நல்லவேளை உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லை . ஆனா இடுப்பில இருக்கிற சில எலும்புங்க உடைஞ்சு சிறுநீர் வெளியேறும் வழி பாதிக்க பட்டிருக்கு. அதனால சிறுநீர் வெளியேற முடியாம சிறுநீர்ப்பை உப்பி அடிவயிறு வீங்கி இருக்கு. ஃபோலிஸ்  கதீட்டர் -ங்குற ரப்பர் குழாயை உள்ளே செலுத்தி சிறுநீரை வெளியேற்ற முயற்சி செய்தோம் ஆனா முடியலே.   சிறுநீர்  பையின்கொள்ளவை விட அதிகமானால் சிறுநீர்
சிறுநீரகத்துக்கு ஏறிஅதனால சிறுநீரகங்களுக்கு  பாதிப்பு ஏற்படலாம் .
அதோடு சிறுநீர்  கசிந்து உள்ளே இருக்கும் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கு .அதனால அவருக்கு  அடிவயிற்றில ஒரு குழாயை செலுத்தி சிறுநீரை வெளியேற்றி இருக்கோம்.  இதை "சுப்ரா பியுபிக் பஞ்ச்சர்"ன்னு சொல்லுவாங்க . இது தற்காலிகம்தான்.  அவருக்கு உடனடியா அறுவை சிகிச்சை செய்தாகணும். ..உங்க கணவர் இப்போ கையெழுத்து போட முடியாத நிலைமையில் இருப்பதாலே நீங்க அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்து இந்த  பேப்பர்ல கையெழுத்து போடணும் . "இன்ஃ பார்ம்டு கன்சென்ட்" அதாவது ,

டாக்கர்-ங்குற முறையில அறுவை சிகிச்சை பற்றியும் அதன்  பின் விளைவுகள் பற்றியும் நோயாளிக்கு விளக்க வேண்டியது என் கடமை . . விபத்தால அடி வயிற்றில இருக்கிற சில நரம்புகள் பாதிக்க பட்டிருக்கிறதால  துரதிருஷ்ட வசமா  பிற்காலத்தில் தாம்பத்திய உறவு பாதிக்க  நிறைய வாய்ப்பு இருக்கிறது. மருத்துவரின் கவன குறைவு தவிர்த்து அறுவை சிகிச்சை செய்ததின் விளைவாகத்தான் அப்படி நேர்ந்தது என்று சட்ட ரீதியாக மருத்துவ நிர்வாகத்தின் மீதோ மருத்துவர் மீதோ நஷ்ட ஈடு எடுக்க மாட்டோம் என்பதற்கான உங்கள் சம்மதம் கூட இதுல உள்ளடங்கி இருக்கு  ... .

உங்களுக்கு வேற ஏதாவது கேட்கணும்னு தோணிச்சின்னா கேளுங்க ..."

தன்ராஜின் மனைவி எதுவும் பேசும் நிலைமையில் இல்லை . கன்னிபருவத்திலே சிச்சுவேஷன் சாங்  "பட்டு வண்ண ரோசாவம் .." பாட்டு மட்டும் ஏனோ நினைவுக்கு வந்தது .

வாழ்க்கையில் எல்லா கெட்ட விஷயங்களும் ஒரே சமயத்தில்  கைகோர்த்து  வர , தன் விதியை நொந்து கொண்டு  அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்து பேப்பர்களில் கையெழுத்து போட்டு கொண்டிருக்கும் கேப்பில் ... ஒரு விஷயம் மட்டும் உங்களிடம் சொல்லி கதையை தொடர்கிறேன்.

அதாவது டாக்டர் குமர குருவும் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளி தன்ராஜும் ஒரு கால கட்டத்தில்  பல வருடங்களுக்கு முன்பு சந்தித்து இருக்கிறார்கள் என்பதும் பொறியாளராக ஆக வேண்டிய டாக்டர் குமரகுரு மருத்துவராக காரணமே தன்ராஜ்தான் என்கிற விஷயம் நம்மை தவிர வேறு யாருக்கும் தெரியாது ..  சரி    மேல படிங்க ..


சென்னை ..25 வருடங்களுக்கு முன்பு ...



ப்ளஸ் டூவில் ஸ்டேட் ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்ற குமர குருவுக்கு இப்படி ஒரு குழப்பம். மருத்துவமா இல்லை பொறியியலா ..? எதுவும் முடிவு செய்ய முடியாத நிலையில் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை முன்னதாக இருந்ததால்  பொறியியல் கல்லூரியில் விண்ணப்பித்து  மனதில் இருந்து மருத்துவத்தை நீக்கி தான் ஒரு பொறியாளன் என்கிற நினைப்புக்கு தன்னை மாற்றி கொண்டு பொறியியல் கல்லூரி வாழ்கையை துவங்கினார்.

அப்போதெல்லாம் கல்லூரிகளில் ராகிங் என்ற பெயரில் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. புதிதாக சேரும் மாணவர்களை சீனியர்கள் வெறும் தரையில் நீச்சலடிக்க சொல்லுவது , நடனமாட சொல்லுவது   போன்ற சிறுபிள்ளை தனமான  கல்லூரி வளாகத்தில்  நடைபெறும் கோமாளிதனங்கள் பலராலும்  சகித்து கொள்ளப்பட்டது. ஆனால் விடுதியில் ராகிங் எனும் பெயரில் சில விஷமிகளின் வக்கிர புத்தியும் கொடூர காமுக குணங்களும் அரங்கேறும். பல சமயங்களில் இவை எல்லை மீறி பல பேர் வாழ்கையில் நீங்காத வடுக்களை ஏற்படுத்தியதுண்டு ... தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கூட போனதுண்டு ..

குமர குரு விடுதியில் சேர்ந்து  அன்றோடு இரண்டாம் வார இறுதி. அன்றுதான் "அஃபிஷியலாக" வருடம்தோறும் சீனியர்களால் ராகிங் நடைபெறும் நாள்.. 

"இன்னைக்கு கிளாஸ் முடிஞ்சி சேர்மன் ரூம்ல ... அவங்க என்ன செய்ய சொல்லுறாங்களோ அதை செஞ்சிட்டா எந்த பிரச்சனையும் இல்லை. இன்னிக்கு ஒருநாள்தான்.. அப்புறம் கவலை பட தேவையில்லை .."

அன்று காலையிலிருந்தே அரசல் புரசலாக புது மாணவர்கள் அந்த மாலையை எதிர்பார்த்து ஏதேதோ பேசி கொண்டிருந்ததனர். சிலர் ஆவலோடு எதிர்பார்த்தும் , சிலர் சற்று பயந்தும் காணப்பட்டனர். ஒருவரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது. சக மாணவன்  ஒருவன் குமர குருவின் காதை கடித்தான் ..

" முக்கியமா  ஹிட்லர் சல்யூட் அடிக்க சொல்லுவாங்க. .."

"அது ஈஸி தானே ..  ஒரு கையை உயர்த்தி ..."

"இது நீ நெனைக்கற மாதிரி இல்லை ..."

"அப்போ எப்பிடி ..?"

"வெயிட் பண்ணு இன்னிக்கி சாயங்காலம் நீயே தெரிஞ்சுக்குவே .."

அன்று மாலை சேர்மேன் தன்ராஜ் அறைக்கு ஜூனியர்கள் அனைவரும் கூடினர். குழுக்களாக பிரித்து அவன் அறைக்குள் அனுப்பபட்டனர்.

அறைக்குள் நுழைந்ததும் குமர குருவுக்கு மூச்சு முட்டியது . எங்கும் ஒரே சிகரெட் புகை மண்டலம் . அங்கங்கே காலி மது பாட்டில்கள் தரையில் சிதறி கிடக்க  சுவர் முழுவதும் அரை நிர்வாண பெண்களின் போஸ்டர்கள் . ..

சீனியர்கள் பலர் கட்டிலில் அமர்ந்திருக்க  எதிரே பலி கடாக்கள் போல் ஜூனியர்கள் நிற்கவைக்க பட்டிருந்தனர் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ராகிங் செய்யப்பட்டனர் . சிலர் கழை கூத்தாடி குரங்கை போல் "பல்டி" அடிக்க , புகை பழக்கம் இல்லாதவர்கள் வாயில் வலுக்கட்டாயமாக சிகரெட் திணிக்கப்பட்டது ..மது சுவை அறிந்திராதவர் வாயில் மது ஊற்றப்பட்டது. குமர குருவும் மற்றவர்களும் இன்றோடு  இந்த  மூடர்களின் முட்டாள்தனம்  ஒரு வழியாக முடிந்தால் போதும் என்று பல்லை கடித்து கொண்டு அவர்கள் செய்ய சொன்ன கோமாளிதனங்களை ஒவ்வொன்றாய்  செய்ய   கடைசியில் போதையில் இருந்த  வைஸ் சேர்மன் எழுந்து,

"வெரி குட் .ஃ பிரெண்ட்ஸ் ..ஒத்துழைத்த அனைவருக்கும் மிக்க   நன்றி ..இன்னிலேந்து நம்ப எல்லோரும்  ஃ பிரெண்ட்ஸ்.. நம்ப சபை கலையறதுக்கு முன்னே கடைசியா நம்ப சேர்மனுக்கு எல்லோரும் ஹிட்லர் சல்யூட் வெச்சி மரியாதை செஞ்சிட்டு கெளம்பலாம் ..."  என்றான் தள்ளாடி கொண்டே .

வரிசையில் முதலில் இருந்த மாணவன் இதை ஏற்கெனவே எதிர்பார்த்தது போல் ஆடையை களைய ஆரம்பித்தான்   ...குமர குருவுக்கு தூக்கி வாரி போட்டது .

என்ன ஒரு கொடுமை .?   வக்கிர புத்தி கொண்ட கீழ்த்தரமான செயல்கள் ..?

முதல் ஆளை தொடர்ந்து பிறந்த மேனியில் எல்லா மாணவர்களும் வரிசையாக ஒரு கையை தூக்கி விறைப்பாக நாஸி சல்யூட் செய்து நிற்க, சேர்மன் தன்ராஜ் எழுந்து  சிகரெட்  புகைத்து கொண்டே ஒரு நாட்டின் தேச தலைவர் அணிவகுப்பை பார்வையிடுவது போல் ஒவ்வொருவராக பார்த்து கொண்டு கடந்து வர கடைசியாக நின்று கொண்டிருந்த குமர குருவின் இதய துடிப்பு சென்செக்ஸ் குறியீடு போல் தாறு மாறாக ஓடியது ..

கடைசியாக குமரகுருவின் எதிரே வந்து நின்ற  தன்ராஜ், திமிராய் குமர குருவின்     முகத்தில் சிகரெட் புகையை ஊதி ,

"நீ மட்டும் என்ன..?  மெரிட்ல வந்தா  பெரிய  கொம்பா ...?  கழட்டுடா ..." என்று உரக்க கத்த,

குமர குரு எதுவும் செய்யாமல் நிற்க ...."பளார் ....."  அறையில் பொறி கலங்கியது ..!!

அறை வாங்கியதோடு மட்டும் இல்லாமல் தன் மானம் பலர் முன்னிலையில் கடை  விரிந்த அவமானத்தால் கூனி குறுகி போக, அந்த வார இறுதியோடு விடுதியை காலி செய்து கிளம்பி அப்பாவிடம் உண்மையான காரணம் சொன்னால் சங்கட படுவார் என்பதற்காக  பொறியியல் பிடிக்கவில்லை என்று ஒரு காரணம் சொல்லி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்து படித்து  டாக்டரானது  ....அதெல்லாம் பழைய கதை ...

புது அத்தியாயம் , புது நண்பர்கள் , புது வாழ்கை..  இதெல்லாம் நடந்து பல வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையில் அந்த நிகழ்வை மறந்தே போனார் டாக்டர் குமர குரு .

எடுத்த துறை எதுவாக இருந்தாலும் தன்னை முழு மனதோடு ஈடு படுத்தி கொண்டால் வாழ்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு சிறந்த ஒரு உதாரணம் டாக்டர் குமார குரு .

தன் திறமையாலும் அறிவாற்றலாலும் மருத்துவ உலகில் தனி இடத்தை பிடித்து மற்ற மருத்துவர்களால் முடியாது என்று கைவிடப்பட்ட பல கேஸ்களை சவாலாக எடுத்துக்கொண்டு பல நோயாளிகளுக்கு புது வாழ்வு தந்தவர் . உலகில் பல மருத்துவ ஜர்னல்களில் இவரின் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடபட்டு உலக அரகில் பல அங்கீகாரங்களை பெற்று தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்..


 சற்று சவாலுக்குரிய  கேஸ் என்பதால் அன்று அவசர பிரிவிலிருந்து அழைப்பு வந்த போது இந்த நிகழ்வு நடந்து பல வருடங்கள் ஆகி விட்டதாலும் , விபத்தில் பலமாக காயம் பட்டு முகம்  வீங்கியிருந்த தன்ராஜை அவருக்கு அடையாளம் கண்டு கொள்ள வாய்ப்பில்லை .

"ICU- வில் இத்தர பேருக்கு பேஷண்ட காணாம் பட்டில்லா.. ஒரு ஆள் கார் மட்டுமே காணம் பட்டு ..."

மருத்துவர்கள் ரவுண்ட்ஸ் வரும் நேரமென்பதால் நோயாளியை பார்க்க குழுமி  இருந்த கும்பலை விரட்டி கொண்டிருத்தாள் சேர நாட்டிளம் செவிலி.

ரவுண்ட்ஸின் போது  டாக்டர் குமர குருவின்  உடன் இரண்டு  மருத்துவ  மாணவிகள் கையில் பய பக்தியோடு நோட்ஸ் எடுத்து கொண்டிருந்தனர்.

தன்ராஜ்  கை கால்களில் கட்டுகளோடு படுத்திருக்க ஒரு குழாயில்  சிறு நீர்ப்பையில் இருந்து கட்டிலுக்கு அடியில்  சிகப்பு நிறத்தில் இரத்தம் கலந்த சிறுநீர்   ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரிக்க பட்டு  தொங்கியது . பக்கத்தில் பல வித திரவ மருந்துகளை  தானியங்கி இயந்திர பம்புகள்  மெல்லிய குழாய் மூலம் இரத்த நாளங்களில் செலுத்தி கொண்டிருந்தது . மானிட்டரில்  இதய துடிப்பு வரைபடம் , இரத்த அழுத்தத்தை குறிக்கும்  பலவித எண்கள் பளிசிட்டுகொண்டிருந்தது .

 டாக்கர் குமரகுருவை பார்த்ததும் எழுந்து நின்று மரியாதையுடன் வணங்கினாள்  தன்ராஜின் மனைவி .

"வணக்கம்மா ..சௌக்கியமா இருக்கீங்களா ..?ஆபரேஷன் எல்லாம் நல்ல படியா முடிஞ்சது . இரணம் ஆற இன்னும் கொஞ்ச நாள் ஆகும் . இன்னும் ரெண்டு நாள்ல ICU -ல வெச்சிட்டு அப்புறம் ரெகுலர் யூராலாஜி வார்டுக்கு மாத்திடலாம்  ."

" ரொம்ப நன்றி டாக்டர் இப்பத்தான் எழுந்து ரெண்டு வார்த்தை பேசினாரு . மறு படியும் தூங்கிட்டாரு. .."


வலிநிவாரண மருந்து, மயக்க மருந்துகளால்  முழுவதும் மயக்க நிலை தெளியாமல் இருந்த தன்ராஜ் இந்த சம்பாஷனை கேட்டு லேசாய் கண்விழிக்க  எதிரில்  குறுந்தாடியுடன் நின்றுருந்த டாக்டர் குமரகுருவும்  அவர் அருகில்  நின்றிருந்த இரண்டு மருத்துவ  மாணவிகளும் மங்கலாக தெரிந்தனர் .

 தன்ராஜ் கண் விழித்ததை பார்த்த அவன் மனைவி காதருகே போய்,

 "இவர்தான் டாக்கர் குமரகுரு... உங்களுக்கு ஆபெரேஷன் செஞ்ச பெரிய டாக்டர் ...." என்றாள் .

அதை புரிந்து கொண்ட தன்ராஜ் இரண்டு கரமும் தூக்கி கை கூப்ப முடியாத நிலையில் இடது கை,  வலியால் அடிவயிற்றை பிடித்திருக்க வலது கரத்தை சிரமப்பட்டு நீட்டி உயர்த்தி  அவருக்கு வணக்கம் செலுத்த பிரயர்த்தன  பட, பார்பதற்கு அது கிட்டத்தட்ட அந்த  "ஹிட்லர் சல்யூட் " போலிருந்தது .
                                       

                                                                   *******

Sunday, June 9, 2013

மழை காலம் (கவிதை )




ஈரம் காயாத உள்ளாடை ,

 வாகனம் வாரியிறைத்த

குழி சகதி ,

மேற்கூரை ஒழுக 

இருக்கையில்

தண்ணீர் துளியுடன்

பேருந்து  பயணம் ,

உரசி உரசி எரிய மறுக்கும்

நமத்து போன தீக்குச்சி,.....

இவையெல்லாம் மீறி

உள்ளம் குளிர

உணர்வுகள்  சிலிர்க்க

 மண்ணில்

விழுந்து தெறிக்கும்

மழைத்துளி ஸ்பரிசத்தில்

ஜனிக்கும் மழைக்கால

மண் வாசனைக்கு

மயங்காதார் யாருமுண்டோ ..?


அரக்கர் (கவிதை )


உம் மண்ணை ஆண்ட

இலங்கேஸ்வரன் கூட

பிறன்மனை கவர்ந்தும்

ஜனகன் மகள் 

விரல் தீண்டவில்லை இறுதிவரை...

சிறார்களை சின்னாபின்னமாக்கி

சீதைகளை சிதைத்து

சிதையுடன் புணர்ந்து 

அரக்கர் வம்சம்தான்  நாங்கள்

என  நீவிர் நிருபித்ததால்

நம்புகிறேன் ராமாயணத்தை...

கற்பு (கவிதை )






கண்ணகி முலை பாலை

எரிபொருளாக்கி மதுரை

எரித்தாய் ..

நீரோ மன்னன்

இசையில் மயங்கிய தருணம்

ரோமாபுரியை எரித்தாய்

அனுமன் வாலை தீப்பந்தமாக்க

இலங்கையை எரித்தாய்

ஏனோ சீதை உன்னுள் நுழைந்த கணம்

நீயே எரிந்து போனாய் ...?

காமம் (கவிதை )





படித்தால் மஞ்சள்

பார்த்தால் நீலம்

கதைத்தால் பச்சை

விற்குமிடம் சிகப்பு ..

வண்ணமிகு காதலுக்கு மட்டும்

நிறமொன்றும் இங்கில்லை

காமத்துக்கு

இத்தனை நிறங்களா ...?

Sunday, June 2, 2013

ஒன்பதுல குரு ...(சிந்தனை துளி )

ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் நல்ல நிகழ்வு , அசம்பாவிதம் எதுவாக இருந்தாலும் " பொறந்த நேரம் அப்பிடி " என்று சொல்ல கேட்டிருக்கிறோம். இதை யோசித்து பார்க்கும் போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம் ..அவருக்கு ஒரு ராணியாம் ..( அட நெஜமாவே இப்படித்தானுங்க இந்த கதை ஸ்டார்ட் ஆகுது ...) ரத ,கஜ ,துரக பதாதிகளோடு செங்கோலோச்சிய மன்னனுக்கு ஒரு குறை. பல    வருடங்களாக குழந்தை பாக்கியம்  இல்லை. அவர்கள் வேண்டாத தெய்வங்கள் இல்லை . செய்யாத யாகங்கள் இல்லை. நல்லாட்சி புரியம்  மகாராஜாவுக்கும் மகா ராணிக்கும் புத்திர பாக்கியம்  வேண்டி மக்களும் விடாது பிரார்த்தனை செய்தனர். பாலை வார்த்தது போல் ஒருநாள் அந்த நற்செய்தி வந்தது. ஆமாம் ..மகாராணி கர்ப்பம் தரித்தாள்.  அரியாசனத்தில்அமரபோகும அடுத்த வாரிசை எதிர்  பார்த்து நாடே ஆவலோடு காத்திருந்தது. பிறக்கபோவது இளவரசிதான் என்றும் இளவரசன்தான் என்றும் IPL ஆட்டம் போல் குடிமக்களில் சிலர்  பந்தயம் கட்டினர். குழந்தை பிறந்தவுடன் அந்த நாழிகை குறித்து கொள்ளப்பட்டு பின்பு ஜோதிடர் ஜாதகம் கணிப்பது மரபு. அதிலும்  ராஜ வம்சம் , அரிய மகப்பேறு. சொல்லவா வேண்டும்? நாடெங்கிலும் இருந்து பெரிய ஜோதிடர்கள் முன் கூட்டியே வரவழைக்கப்பட்டு அரண்மனையில் தங்க வைக்கபட்டுருந்தனர்.  . அரண்மனையில் பிரசவத்திற்காக சகல வசதிகளோடு பிரத்தியேகமாக ஒரு அறை  தயார் செய்யப்பட்டு ராஜ வம்சத்தின் முதல் வாரிசை    பிரசவிக்க  தயாரானாள் மகராணி.அந்த நாளும் வந்தது. மகாராணிக்கு பிரசவ வலி வந்ததும் அனைத்து ஜோசியர்களும் வரவழைக்கப்பட்டு பிரசவ அறைக்கு வெளியே கூடினர் . கொழு கொழுவென்று சகல சாமுத்திரிகா லட்சணங்களுடன் அமுல் பேபி போல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது . குழந்தை   ஜனித்த நாழிகை அரண்மனை தாதி எலுமிச்சை பழத்தை வெளியில் உருட்டி விட அந்த  நேரத்தை எல்லா ஜோசியர்களும் கவனமாக குறித்து கொண்டனர். ஜோதிடர்கள் அனைவரும் மும்முரமாக ஜாதகம் கணிக்க தொடங்கினர். ஆனந்தத்தில் மகாராஜா  தாதிக்கு கழுத்திலிருந்த தங்க காசு மாலையை பரிசளித்ததோடு அதற்கு வரி விலக்கும் அளித்தார். (தாதி அவர்களுக்கு விரைவில்  அடுத்த வாரிசு உருவாக மனதுக்குள் வேண்டிகொண்டாள்.)

 தாரை தப்பட்டை  முழங்க பொது மக்களுக்கு இந்த நற்செய்தி அறிவிக்கப்பட்டது. நாடே விழாகோலம் பூண்டது.

அடுத்த ஓரிரு தினங்களில் எல்லா ஜோதிடர்களும் அரசவையில் கூடினர். நடுநாயகமாக அரியாசனத்தில் மாகாராஜா கம்பீரமாக வீற்றிறுக்க  ஜோதிடர்களின் முகத்தில் தவழ்ந்த சந்தோஷத்தை கவனித்த மகாராஜா அது  நல்ல செய்தியின்  அறிகுறியாக தெரிய உள்ளுக்குள் நிம்மதி பெரு மூச்செறிந்தார். அதே போல்  ஓலை சுவடிகளை கைகளில் கட்டாக வைத்திருந்த மூத்த ஜோதிடர் சபையில் எழுந்து  "மகாராஜா ...இளவரசர் வருங்காலத்தில் சகல நற்குணங்கள் கொண்டு வீர தீர பராக்கிரமசாலியாக திகழ போவது உறுதி. தங்களை போல் சகல வல்லமைகளையும் கொண்டு குடிமக்கள் வாழ்த்த சீரும் சிறப்புமாக நல்லாட்சி புரிவார். இது எங்கள் எல்லோருடைய ஒருமனதான கணிப்பு " என்றார். அரசரும் அகமகிழ்து எல்லோருக்கும் பணமுடிப்பை தன் கைகளால்
வழங்கி கௌரவித்தார். எல்லோரும் ஒவ்வொருவராக  பணமுடிப்பை பெற்று கொண்டு நன்றி கூறி "அப்போ நாங்க பொறப்படுரோம்" என்று சொல்லி  விடைபெற , கடைசியாக ஒரு ஜோதிடர் மட்டும் பண முடிப்பை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அரசருக்கு அதிர்ச்சி. "ஜோதிடரே ஏன் பண முடிப்பு வேண்டாம் என்கிறீர்கள் ..? வேறு ஏதாவது வேண்டுமா ? எதுவாக இருந்தாலும் கேளுங்கள் . தருகிறேன் " என்றார் .

அதற்கு அந்த ஜோதிடர் "மன்னா ..என்னை மன்னித்து விடுங்கள் . என் கணிப்பு வேறு ..இதை சொல்லி உங்கள் சந்தோஷத்தை குலைக்க விரும்பவில்லை "

"பரவாயில்லை ..சொல்லுங்கள் ..."

"என் கணிப்பின் படி    இளவரசர் இந்த உலகில் வாழபோவது பன்னிரண்டு ஆண்டுகள்  மட்டுமே. பதின்ம வயது பாலகனாக மாறுவதற்கு முன் ஒரு  வன விலங்கால் அவருக்கு துர்மரணம் நிகழும் ..கிரக நிலைகள் கொண்டு நான் கணித்த ஜாதகம் சொல்கிறது . இதை சொல்வதற்கு என்னை மன்னித்து விடுங்கள் ..."

:"ஜோதிடரே என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறீரா ...? இத்தனை ஜோதிடர்களின் கணிப்பு பொய்யா ..? யாரங்கே ..!! இந்த பித்தனை சிறையில் அடையுங்கள்!! " என்று உத்தரவிட அரண்மனை  காவலர்கள் ஜோதிடரை இழுத்து சென்றனர். அரசர் ஜோதிடனிடம் சூளுரைத்தார் .

"உம் கணிப்பு பொய்த்தால்  யானை கொண்டு உம் சிரம் இடற,  அந்த துர்மணம் உமக்கு நிகழும் ..இழுத்து செல்லுங்கள் இவனை ''  என்று   உத்தரவிட ,

கச்சையணிந்து கவரி  வீசிய இளம் தாதியர் உட்பட அனைவரும் அதிர்சியில் உறைந்ததனர்.

அந்த   ஜோதிடனை  பித்தன் என்றே முடிவு   செய்து எள்ளி நகைத்து  அவன் சொன்னதை ஒரு பொருட்டாக யாரும் எடுத்து கொள்ளவில்லை.  நாட்கள் பறந்தது . இளவரசருக்கு குதிரையேற்றம் , வாள் வீச்சு , வில்வித்தை என்று  ஆய கலைகள் அனைத்தும் கற்று தரபட்டு அனைவரும் வியக்கும் வகையில் அனைத்திலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். பன்னிரண்டாம் வயது முடிவடைந்து பதின்ம பருவ வயது அடைய இன்னும் சில தினங்கள் இருந்தன. மன்னருக்கு அந்த ஜோதிடன் சொன்ன வார்த்தைகளை முழுவதுமாக ஊதாசினபடுத்த முடியவில்லை.

கோட்டையில் உயரமாக மிக பாதுகாப்பான அறையில் இளவரசர் தங்க வைக்கபட்டார்.   வாளேந்திய வீரர்கள் இரா பகலாக கோட்டையை சுற்றி காவலிருந்தனர்.
இன்னும் ஒரு ஜாமம் கடந்தால் அந்த ஜோதிடன் சொன்ன கெடு முடிவடைந்து விடும். அன்று இரவு முழுவதும் மேலும் படைகள் குவிக்க பட்டு பல மைல்களுக்கு ஒரு ஈ , காக்கை கூட அண்டாதவாறு வீரர்கள் விழித்திருந்து காவல் காத்தனர். மறுநாள் அதிகாலை இளவரசரை எழுப்பபோன அரண்மனை சேவகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 இளவரசர் கட்டில் மேல் பிணமாக ரத்த வெள்ளத்தில் ....!!

இத்தனை காவலையும் மீறி இது எப்படி சாத்தியம் ....?

மன்னரின் வீர தீர பராக்கிரமத்தை பறை சாற்றி வேட்டையாடப்பட்டு    அரண்மனை சுவற்றை அலங்கரித்த சிங்கம், புலி, மான் தலைகள் ..

இளவரசர் உறக்கத்தில் இருந்த போது  தலைமாட்டின் மேல் இருந்த கடம்பை மானின் தலை சுவற்றில் இருந்து விழுந்து அதன் கூறிய கொம்பு  இளவரசரின் இதயத்தை துளைத்து ...

 நாடே சோகத்தில் ஆழ்ந்தது.

ஒருபுறம் புத்திர சோகத்தில் வாட, மறுபுறம் ஒரு குற்றமும் புரியாத ஜோதிடனுக்கு  பன்னிரண்டு வருடங்கள் சிறை வாசம் விதிததற்காக குற்ற உணர்வு மன்னனை வாட்டி எடுத்தது. உடனே அந்த ஜோதிடனை விடுதித்து அரசவைக்கு அழைத்து வர உத்தரவிட்டார். ஜோதிடனை கண்டதும் தன்னை மன்னிக்கும்படி வேண்டிகொண்டார். ஜோதிடனும் இளவரசருக்கு நேர்ந்த துர்மரணம் கேட்டு மனமுருகி கண்ணீர் விட அரசர் ஜோதிடனிடம்

"ஜோதிடரே அது எப்படி உங்களால் மட்டும் அவ்வாறு சரியாக கணிக்க முடிந்தது ..?" என்று ஆச்சர்யத்தோடு வினவ ,

அதற்கு ஜோதிடர்  பன்னிரெண்டு ஆண்டுகள் பின்னோக்கி போய் இளவரசர் பிறந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார் 

" மன்னா , இளவரசர் பிறந்த நாழிகை எப்படி குறிக்கப்பட்டது
என்பது தங்களுக்கு நினைவிருக்கிறதா ...?"

"ஆமாம் ..பிரசவம் முடிந்த கணம் தாதி எலுமிச்சையை வெளியே  உருட்டி விட்ட நேரம் ..."

"ஆமாம் ...சரியாக சொன்னீர்கள். ஆனால் தாதி எலுமிச்சையை முதலில் உருட்டி விடும் போது அது கதவில் பட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டது . இதை யாரும் கவனிக்கவில்லை . அவள் மீண்டும் அந்த எலுமிச்சையை தேடி எடுத்து இரண்டாம் முறை வெளியே உருட்டி விட்ட நேரத்தைதான்  மற்றவர்கள் குறித்து கொண்டு இளவரசரின்  ஜாதகத்தை கணித்தனர். அப்போது சில மணித்துளிகள் கடந்து விட்டது .ஆனால் துரதிருஷ்ட வசமாக இளவரசர் பிறந்த நேரம் அவருடைய  ராசிப்படி  கிரக நிலைகள் தோஷத்தின் உச்சகட்டத்தில் இருந்த கணம். "

கதை இப்படி முடிகிறது . ராசி பலன் , ஜாதகம் இதெல்லாம் மூட நம்பிக்கையா இல்லை இதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்கிற விவாததுக்கெல்லாம் போக நான் விரும்பவில்லை. அது அவரவர் நம்பிக்கை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிரம்ப ஆச்சர்யமளிக்கிறது. கலீலியோ டெலஸ்கோப் கண்டுபிடிப்பதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே வெறும் கண்களால் கிரகங்களை கண்டறிந்து நம் முன்னோர்கள் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கி இருக்கின்றனர். யோசித்து பார்த்தால் பிரபஞ்சத்தில் இருக்கும் பல துகள்கள் (particles ), தனிமங்கள் நம் உடலிலும்  உள்ளன. உதாரணம் Ca, Na, K, H2O, C, I , Fe..etc

உயிரற்ற ஜடமென்று நாம் கருதும் கிரகங்களும் ஏதோ ஒரு சக்திக்கு கட்டுப்பட்டு தொடர்ச்சியாக ஒரு ஹார்மானிக்  இயக்கத்தில் இயங்கி கொண்டிருக்கின்றன. நமக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் இடையே ஏதோ ஒரு வகை ஒத்ததிர்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது .

ஒருவேளை அந்த கிரகங்களின் நிலைப்பாடும்  ஒவ்வொரு தனி மனித வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக வைத்து கொண்டாலும் அதை தெரிந்து கொண்டு என்ன ஆக போகிறது ?மேலும் அதை அந்த ஜோதிடன் போல் துல்லியமாக கணித்து சொல்லும்  திறமை இங்கே எத்தனை பேருக்கு இருக்கிறது ..? மக்களின் அறியாமையை தனக்கு சாதகமாக்கி பணம் பண்ணும் கூட்டம்தானே இங்கே அதிகம் ?


இன்ன தேதியில் சாகபோகிறோம் இலை கண்டம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு அந்த மன உளைச்சலில் பரிகாரங்கள் செய்து கொண்டு  வாழ்வதை காட்டிலும் வாழும் ஒவ்வொரு  நாளையும்  இதுதான் கடைசி நாள் என்று கொண்டு  வாழ்கையை அனுபவிப்பதே உத்தமம் என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய  தனிப்பட்ட தாழ்மையான அபிப்ராயம்.


இப்போது இது புது  ஃபேஷன். மருத்துவர் சொல்லும் உத்தேச பிரசவ தேதியில் ஜோசியர் குறித்து கொடுத்த நாளை தேர்ந்தெடுத்து 
இயற்கையாக பிரசவ வலி எடுத்து பிரசவம்  செய்து கொள்ளாமல்  நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து சிசேரியன் செய்து கொள்வது.

இதிலெல்லாம்  எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது இந்த குழந்தைகள் வருங்காலத்தில் ஒரு பில் கேட்ஸ் ஆகவோ , அம்பானியாகவோ , சச்சினாகவோ, சானியா மிஸ்ராவாகவோ வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்த்துதான் சொல்ல முடியும்.

                                                              ***