Sunday, April 24, 2011

மத்திய பருவம் (கவிதை)

இளமைக்கும் முதுமைக்கும் இடையே
மாட்டிகொண்ட திரிசங்கு நரகம்!

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
நிமிர்ந்த நன்னடை சற்றே வளைய ஆரம்பிக்க
நேர் கொண்ட பார்வைக்கு
கண்ணாடி தேவைப்படும்!

பந்திக்கு முந்தியதால்  தொந்தி!
காதோரம் முளைத்த ஒரு வெள்ளி
பௌர்ணமியாய் வளர்ந்து
சிரசெங்கும் சாம்ராஜ்யம் பரப்ப
படிக்கட்டு ஏறிட முழங்கால் முட்டிகள் இரண்டும்
பட்டி மன்றம் நடத்திடும்!

உப்பு, சர்க்கரை எதிரிகளாகிவிட
புதியதாய் சில மருத்துவ வார்த்தைகள்
நம் அகராதியில் சேர்ந்து கொள்ளும்!

சங்கடங்கள்  சில அறிமுகமாயினும்
உன்னதமானது மத்திய பருவம் ...

சிற்றின்பங்களில் மனம் சலித்து போக
பேரின்ப நாட்டம் கொள்ளும் ..

வாழ்க்கை போர்தனில் காயம் பல கண்டு
ஞானோதயம் மனம்தனில் உதிக்கும்.


தூய நட்பு, உண்மையான
உறவுகளை   போற்றி
தவறுகள் உணர்ந்து தெளிய


எஞ்சிய வாழ்வின் அருமை உணர்ந்து
ஒவ்வொரு நொடியும் அனுபவித்து
வாழ்த்திட துடிக்கும் பருவம்

பக்குவமாய் கனிந்திட்ட இந்த
கூங்கனி மத்திய பருவம் போற்றுவோம்!!

1 comment:

  1. #சிற்றின்பங்களில் மனம் சலித்து போக
    பேரின்ப நாட்டம் கொள்ளும் பருவம்#

    nice post

    ReplyDelete