கருப்பு வெள்ளையில் ஒளியும் ஒலியும்
விவித பாரதியில் நேயர் விருப்பம்
தள்ளு வண்டியில் பானி பூரி,
நண்பர்களுடன் பகிர்ந்த தேநீர்..
அரும்பு மீசை குறும்பு பார்வைகள்
இளமை துள்ளிய நாட்கள்..
இலையுதிர் காலத்தின் சருகுகளாய்
நாட்கள் பறந்தோட கண் விழித்து பார்கையில்
திடீரென புது யுகத்தில் நான்!
ஜன்னலுக்கு வெளியே
தெரிந்தது புதிதாய் நவயுகம்
எத்தனை வியத்தகு மாற்றங்கள்!
பூரித்தது நெஞ்சம் ..
கணினி, இணையதளம், கையடக்க தொலைபேசி
விண்ணை முட்டும் விஞ்ஞானம் ...
எல்லையில்லா பிரபஞ்சம்...
உள்ளங்கைக்குள் சுருங்கிபோனதின்று
இருந்தும் ..
சுருங்கியதிங்கு நம் உள்ளங்களுமா..?
செவ்வாய்க்கு விண்கலம்...!!
செவ்வாய் தோஷத்தில்
இளமையை தொலைத்து
கண்ணீர் மாலையுடன்
நித்திய கல்யாணிகள்!
வானுயர கோபுரம் பக்கத்தில்
மாம்பழம் விற்று
வெய்யிலில் வேகும் பாட்டி
பல்லாயிரம் மயில் கடந்து பட்டென
தொடர்பு கொள்ளும் தொழில் நுட்பம்
பத்தடியில் அண்டை வீட்டாரோடு
பாரா முகம்..
நான்கு சுவற்றுக்குள் முடங்கி
துள்ளி திரிந்து
ஓடி விளையாட
மறந்திட்ட இளம் தளிர்கள்
ஜனனத்தில் ஒட்டி பிறந்த அழுகையால்
இன்றும் மனம் விட்டு
சிரிக்கவே நாம் மறந்தோம்
பிறை நிலவின் அழகு,
தாலாட்டும் தென்றல்,
சூல்கொண்ட மேகம் ...
அந்தியில் சூரியன், குழதையின் சிரிப்பு,
புல் மேல் பனித்துளி,
அடைமழை, விண்மீன்கள்
இயற்கை அள்ளி தெளித்த
வண்ணங்கள் கண் முன்
கொட்டிகிடக்க
அவசர கோலத்தில்
ரசிக்கவே நாம் மறந்தோம்
இருக்கும் சுகங்களை தொலைத்து
பறக்கும் மாயைக்கு ஆலாய்
பறந்து மன உளைச்சல் மட்டும் மிஞ்ச
சிதையிலும் வேகாமல் போனோம்..
இது புது யுகம் ...
No comments:
Post a Comment