Friday, June 28, 2013

இரயில் பயணங்களில் ..(கட்டுரை )

 
 
     ancestry.com என்று ஒரு இணைய தளம் .   குடும்ப பெயரை வைத்து
தங்கள் வம்சா வழி (family tree ) , மூதாதையரை பற்றி தெரிந்து கொள்ள ஏதுவான தளம் . ஒரு முறை நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட ஒரு   நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கையில்..
  "நம்மில் பெரும்பாலானோருக்கு  தாத்தா பெயர் தெரிந்தாலே அதிகம் .  இந்தியாவிலும் இப்படி ஒரு data base இருந்தால் நன்றாக இருக்குமே.." என்று சொன்னேன் . அதற்கு அவர்,

 "நீங்க வேற ..பரதேசி படம் பார்த்த அப்புறம் நானே ஆடி போயிட்டேன் . நம்ப கொள்ளு தாத்தா கொத்தடிமைன்னு தெரிஞ்சா இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போயிடும் .." என்றார்.

கிழக்கு இந்திய கம்பெனி என்று வணிகம் செய்ய வந்து நம்மில் புரையோடி கிடந்த பிரிவினையை சாதகமாக்கி நம்மை   அடிமைபடுத்தி   200 வருஷங்களுக்கு மேல் நம்மை ஆண்டு வளங்களை கொள்ளையடித்து ...புளித்து போன வரலாறு . ஆனால் அந்த வெள்ளைக்காரன் புண்ணியம் கட்டி கொண்ட விஷயங்களில் ஒன்று இந்தியன் ரயில்வேஸ் . இன்று உலகிலேயே பெரிய நெட்வொர்காக விளங்கும் இந்தியன் ரயில்வேக்கு அடித்தளம் போட்டவன் வெள்ளைகாரன்தான் .


அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் பல விஷயங்கள்  தொலைந்து போயின . சுழலும் கிராம ஃ போன் இசை தட்டு , எண்களை ஒவ்வொன்றாய் சுழற்றும் டிரிங் ..டிரிங் தொலைபேசி ,வால்வ் ரேடியோ, புகைப்பட சுருள் காமெரா ..

இவை தவிர தனிப்பட்ட முறையில் நான் நிறையவே " மிஸ்" செய்வது புகை வண்டி. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வாலிப பருவம் வரை  என் வாழ்கை பயணித்தது இரயில் ரோட்டில்தான் .  ரயில்வே குவார்டர்ஸ் ரயில் ரோட்டின் மிக அருகே இருந்ததால் குழந்தையாய் இருந்த போது எங்கள் இடுப்பில் கயிறு கட்டி கட்டில் காலோடு கட்டி வைப்பார்களாம்.

நாணயங்களை தண்டவாளத்தின் மேல் வைத்து இரயில் ஏறி சப்பையாக்குவதை பார்ப்பத்தில் ஒரு ஆனந்தம். ஊடகங்களுக்கு ஒலியை கடத்தும் தன்மை உண்டு இதற்கு ஒரு உதாரணம் தொலைவில் வரும் ரயில் வண்டியின் ஓசையை தண்டவாளத்தில் உணர முடியும் என்று வாத்தியார் பாடம் நடத்த இதை பரிசோதித்து பார்க்க தண்டவாளத்தில் நான் தலையை வைக்க இதை பார்த்து அப்பாவின் சகா "உங்க புள்ளை தண்ட வாளத்தில தலை வெச்சிருக்கான் " என்று சொல்ல வீட்டில் என்னமோ ஏதோ என்று பதற தலை தப்பியது தம்புரான் புண்ணியமாக போனது.
இதை போல் சிறார்கள் நாங்கள் கை கோர்த்து தண்டவாளத்தின் மேல் நடந்த நாட்கள் பல ..

சிறுவயதில் எல்லோருக்கும் ஒவ்வொரு மாதிரி ஆசை.  டாக்டர் , பைலட் ..இப்படி ...ஆனால் எனக்கோ லோகோ மோடிவ் நீராவி எஞ்சின் டிரைவர் ஆக வேண்டுமென்பது . ஏனோ தெரியாது அப்போதெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியர்கள்தான் புகைவண்டி மற்றும் டீசல் எஞ்சின் ஓட்டுனர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் பாசெஞ்சர் வண்டி வரும் போதும் எஞ்சின் வந்து நிற்கும் இடத்துக்கு போய் நின்று கொள்
வோம்.

கம்பீரமாக நீராவியை கக்கிகொண்டு பெரு மூச்செறிந்து
ஓடி வந்து நின்று ஆசுவாசபடுத்தி கொள்வதை பார்க்கும் பொழுது அந்த பிரம்மாண்ட கருப்பு இயந்திரம் முரட்டு காட்டு யானையை நினைவு படுத்தும்.
ஓட்டுனர்கள் தலையில் கரித்தூள் படிவதை தடுக்க கர்ச்சீப் கட்டி பின்புறம் சவலில் நிலக்கரியை வாரி லாவகமாக கீழே இரையாமல்   லீவரை இழுத்து இரும்பு கதவை திறந்து கனன்று கொண்டிருக்கும் தீயில் வீசுவதிலிருந்து
அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து
அந்த எஞ்சினின் இயக்கம் ஒவ்வொன்றும் அத்துப்படி .

கடைசி பெட்டியில் வெள்ளை யூனிபார்ம் அணிந்த கார்ட் விசில் அடித்து பச்சை கொடியை காட்டியவுடன் டிரைவர் மேலிருக்கும் கம்பியை பிடித்து இழுக்க வால்விலிருந்து நீராவி விடுபட்டு ஹாரன் வழியே போய் ..அதுதான் நம்மில் பலர் என்றோ கேட்ட கூ .....கூ ........!!

இப்போது எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் சுற்று சூழலை மாசு படுத்தாத நிலக்கரி, தண்ணீரை மட்டுமே பயன் படுத்தும் "கிளீன் எனர்ஜி "

  கப்பலில் இருக்கும் ஸ்டியரிங்  போல் ஒரு இரும்பு சக்கரத்தை
கடிகார திசையில் சுற்றி கடப்பாரை போன்ற ஒரு பெரிய லீவரை தூக்க மிக அழுத்தத்தில் இருக்கும் நீராவி பிரம்மாண்டமான பிஸ்டனை தள்ளி இரும்பு சக்கரத்துடன் இணைந்துள்ள  பெரிய நெம்பு கோல் சக்கரத்தை சுழற்றி வண்டியை முன் நகர்த்தும் . ஸ்டியரிங்கை
 கடிகார திசைக்கு எதிர் திசையில் சுழற்றினால் வண்டி பின் நோக்கி செல்லும் . இவ்வளவுதான் . மற்றபடி நீராவி அழுத்தங்களை பலவித மாணிகளில் அவ்வபோது  கண்காணிப்பர்  . எப்போதும் பைலட் கோ -பைலட் போன்று இருவர். ஒருவர் கரியள்ளி கொட்ட மற்றவர் மெயின் டிரைவர் . இவர் தான் எங்கள் ஹீரோ . ரயில்வே குவாரடர்ஸில் இருக்கும்
என் சக வயது பையன்கள் என்ஜினருகே போய் டிரைவரிடம் மூச்சா போகும் ஒருவிரல் சைகை காண்பித்தால் அதை அவர் புரிந்து கொண்டு எஞ்சினுக்கு போடும் கிரீஸை கொடுப்பார் . அது இப்போதைய சாசேஜ் போல் அழகாக பட்டர் பேப்பரில் சுற்றியிருக்கும் . அதுதான் எங்கள் play dough . ஒழுகும் ஃ பௌண்டைன் பேனாவுக்கும் மறையில் தடவினால் ஒழுகாது .

எக்ஸ்பிரஸ் ரயில் எங்கள் ஊரில் நிற்காது . அப்போதெல்லாம் ரயில்வண்டி ஒவ்வொரு நிலையத்தையும் கடந்து விட்டது என்பதற்கு அத்தாட்சியாக குறுப்பிட்ட எண் பொறிக்கப்பட்ட இரும்பு குண்டு மூங்கில் பிரம்பால் செய்யப்பட்ட டென்னிஸ் ராகெட் போன்ற வளையத்தில்
விலங்கு தோலினால் ஆன பௌச்சினுள் வைக்கப்பட்டு டிரைவரிடம் கொடுக்க படும். இதனை அந்த டிரைவர் அடுத்த நிலையத்தில் கொடுக்க வேண்டும் . ஒவ்வொரு நிலையத்திலும் இந்த முறையை பின்பற்றினால்தான் வண்டி அடுத்த நிலையத்துக்கு செல்ல முடியும் .

அந்த நிலையத்தின் நிலைய அதிகாரி (ஸ்டேஷன் மாஸ்டர் )
அல்லது பாயிண்ட்ஸ் மேன் , பிளாட்பாரத்தில்  அதிவேகமாக வரும் ரயிலுக்கு வெகு அருகில் நின்று கொண்டு அந்த மூங்கில் வளையத்தை கொடுக்க வேண்டும் . எக்ஸ்பிரஸ் வண்டியின் டிரைவர் தான் கொண்டு வந்த வளையத்தை வீசி எறிந்து இந்த வளையத்திற்குள்  லாவகமாக கையை நுழைத்து பெற்று செல்வார் . இரவு நேரங்களில் டிரைவருக்கு தெரிவதற்காக மூங்கில் வளையத்தை கொடுப்பவர் மறு கையில் தீபந்தம் ஏந்தி நிற்பர்.
இதை ஏதோ சர்க்கஸ் பார்ப்பது போல் ஒவ்வொரு முறையும் புதிதாக பார்ப்பது போல் பார்த்து அதிசயித்ததுண்டு .

இரயில்வே தொழிலாளிகள் குடும்பம் எப்பொழுதும் கழைகூத்தாடிகள் போல் ட்ரான்ஸ் ஃ பர் -க்கு தயாராக இருக்க வேண்டும் . ஒருமுறை திருவண்ணாமலைக்கு பக்கத்தில் ஒரு ஊரில்  இருந்தோம் .
இரயில் வெகு தொலைவில் மலையடிவாரத்தில் புகையை கக்கி கொண்டு வளைந்து வரும் காட்சி கொள்ளை அழகு ,
தேர்ந்த ஓவியனின் கேன்வாஸ் ஓவியம்  போல.

ஜன்னலோரம் பயணம் செய்து பச்சை பசேல் வயல் வெளிகள் , வேகமாக ஓடும் மரங்கள் , படிக்கட்டில் நின்று வளைவில் நம்மை இழுத்து செல்லும் எஞ்சினை எட்டி பார்த்து ரசித்த நாட்கள் ..(கண்களில் கரியும் விழுந்ததுண்டு )

பின்னர் அகல ரயில் பாதை வந்த பிறகு மின்மயமாக்க பட்டு புகை வண்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் கரும்புகை போல் மறைந்து
போனது .

இப்போது அந்த அனுபவம் கிடைக்க வேண்டுமானால் குன்னூர்- உதகமண்டலம் இரயில் பயணம் மேற்கொண்டால் கிடைக்கும் . அற்புதமான அனுபவம். உயிரே படத்தின் "தக தைய தைய தையா .." பாடல் படமாக்கபட்டது இந்த வண்டியில்தான் .

எழில் கொஞ்சும் நீலகிரி மலை பெண்ணின் தேகத்தின் வளைவு நெளிவுகளில் ஊர்ந்து மேடு பள்ளங்களில் ஓடி இன்னும் கொஞ்ச நேரம் நீடிக்காதா என மனம் ஏங்கிடும் இருண்ட குகை பிரவேசம் ....ஒரு பரவச அனுபவம்.

UNESCO -வால் World Heritage Site ஆக அங்கீகரிக்கபட்டு
இன்னும் பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டுதலுக்கு உரிய விஷயம் .
 உயர்ந்த பாலத்தில் இரயில் வண்டி செல்கையில் கீழே படு பாதாளத்தை பார்க்கும் பொது ஏதோ வானத்தில் பறப்பதை போன்றதொரு உணர்வு . மீண்டும் பழைய இரயில் நாட்களை நினைவு படுத்திய பயணம் .
இதுவும் இன்னும் எத்தனை காலத்துக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது.

மறைந்து விட்ட "டைனசர்" இனம் போல நம் குழந்தைகள்
எதிர் காலத்தில் புகை வண்டியை படத்தை
பார்த்தோ இல்லை கிழக்கே போகும் இரயில் படத்தின் " பூவரசம்பூ பூத்தாச்சி பாடலை..." பார்த்தோதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது .

இப்போது மிச்சமிருப்பது   புகை வண்டி விட்டு சென்ற கரும்புகை போல் வானில் நீண்டு மிதக்கும் கார் மேகம் நினைவு படுத்தும்   இரயில் கால நினைவுகள் மட்டுமே .....
.                                                                         

                                                                             ********

 

No comments:

Post a Comment