சென்னை மாநகரில் கடற்கரை, கன்னிமாரா நூலகம், எக்மோர் அரசு அருங்காட்சியகம், குறளகம், இவை தவிர எனக்கு விருப்பமான இடம் அண்ணா சாலையில் இருக்கும் இந்த பிரம்மாண்டமான ஹாண்டிகிராப்ட்ஸ் எம்போரியம் தான். பல மாநில கலைஞர்களின் நுண்ணிய கை வண்ணங்களை, திறமைகளை உள்ளடக்கிய இங்கிருக்கும் ஒவ்வொரு கலைப்பொருளும் ஜீவனோடு உள்ளது போல் தோன்றும். ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு பளிங்கினால் ஆன குங்கும சிமிழ் . அதில்தான் எத்தனை வேலைப்பாடு ..? இங்கிருக்கும் கலை பொருட்களை பார்க்கும் பொழுதெல்லாம் "நீ பார்க்கும் ஒவ்வொரு மனிதருள்ளும், உன்னை சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளிலும் நீ வணங்கும் பரம்பொருளை பார் உன் வாழ்க்கை அழகாய் தெரியும் "என்று ஒரு மகான் சொன்ன வாக்கு நினைவுக்கு
வரும் .
பல அளவுகளில் உயர் ரக தேக்கு , செம்மரம் மற்றும்
பளிங்கு கற்களில் செதுக்கிய அழகான யானைகள் , ஒட்டகங்கள், பாரம்பரியத்தை பறை சாற்றும் தக தகக்கும் தஞ்சாவூர் தட்டுகள், வெண்கல சிலைகள், பிரமாண்ட அளவில் பல மணி நேர மனித உழைப்பையும் கலை ரசனையும் கலந்து இழைக்க பட்ட வார்னிஷ் தகதகக்கும் கீதாபோதேசம், உயர் ரக காஷ்மீர பஷ்மீனா
கம்பளத்தில் நுணுக்கமாக நெய்யபட்ட சீடர்கள் புடை சூழ, இயேசு பிரான் நடுவே வீற்றிருக்கும் லாஸ்ட் சப்பர் , பரிசுத்த வெண்ணிற ஆடையில் தம்பூரா மீட்டி மோன நிலையில் பஜனை புரியும் மீரா பொம்மைகள் , மற்றும் தக தகக்கும் தங்க முலாம் பூசிய ஆலிலை கண்ணனை சித்தரிக்கும் கண்கவர் தஞ்சாவூர் ஓவியங்கள் , .மகாபலிபுரத்து சிற்ப கலைஞர்களால் வடிக்கப்பட்ட பெண்மை பொங்கி பூரிக்கும் வடிவான கருங்கல் திருவுருவ சிற்பங்கள்..
பல சமயங்களில் ஒன்றும் வாங்காவிட்டாலும் சுற்றி பார்த்து இங்கே வந்து விண்டோ ஷாப்பிங் செய்து பொழுதை கழிப்பதில் ஒரு திருப்தி.
அந்த காலத்திலிருந்தே இந்த கடை வாடிக்கை . அப்போது சந்தன பொருட்களும் யானை தந்ததினால் ஆன பொருட்களும் அரசாங்கம் தடை விதித்திருக்கவில்லை. . அப்போது SSLC பாஸ் செய்ததற்கு அப்பா வாங்கி கொடுத்த சந்தன பேனா இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது . சமயங்களில் அதை முகறும் போது அந்த நறுமணத்தோடுஅப்பா நினைவும் வந்து கண்களை குளப்படுத்தும் .
.
நீண்ட நாள் வாடிக்கையாளர் என்பதால் இங்கே அனைவரும் பரிச்சயம். வரும்போதெல்லாம் மேனேஜர் சூடாய் காபி வரவழைத்து அன்பாய் உபசரிப்பார்.
பின்னணியில் மேஸ்ட்ரோ ஹரிப்ரசாத் சௌராசியாவின் ரம்மியமான புல்லாங்குழல் இசையோடு ஜவ்வாது மற்றும் ஊதுவத்தி சுமந்து வந்த சுகந்தம் நாசியில் புகுந்து உணர்வுகளில் கலந்திட ஏதோ ஏகாந்த உலகில் சஞ்சாரிப்பது போன்ற ஒரு உணர்வு. ..நம்மை சுற்றிதான் எத்தனை அழகான விஷயங்கள் ? இதற்கெல்லாம் எங்கே நேரம் என்று ஏதோ சாக்கு போக்கு சொல்லி இதோ பத்து அடிக்கு வெளியே உலகம் முண்டியடித்து எதையோ தேடி டென்ஷனாக ஓடிகொண்டிருக்கிறது .
சிறு வயதில் இருந்தே கைவினை பொருட்கள் மீது எனக்கு ஒரு அலாதி பிரியம். அவ்வப்போது கண்ணில் படும் அழகான கைவினை பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரித்து அழகு பார்ப்பதில் எனக்கு ஒரு ஆனந்தம். அம்மாவிடம் இருந்து எனக்கும் ஒட்டி கொண்டது இந்த வியாதி . கீழே தூக்கி போடும் பொருட்களை கொண்டு பொம்மைகள் செய்து அசத்துவாள் அம்மா . நியூஸ் பேப்பரை தண்ணீரில் ஊறவைத்து கூழாக்கி வித விதமான கூடைகள் செய்வது , ஜாக்கெட்,பாவாடை தைத்த பின் மிச்ச துணிகளை சேகரித்து பின்னி, கலர் கலராக மிதியடி செய்வது , பனை இளங்குருத்து ஓலைகளை பத படுத்தி பல வித பொம்மைகள் செய்வது, காலி மருந்து பாட்டில்களை சேகரித்து பெவிகால் போட்டு ஒட்டி கண்ணாடி மண்டபங்கள் செய்வது , என்று அவள் திறமைக்கு அளவே இல்லை.இந்த வயதிலும் சதா கிளாஸ் பெயிண்டிங் , தஞ்சாவூர் ஓவியங்கள் என்று ஏதாவது கற்றுகொள்ள மெனக்கெடுவாள்.
என் அதிருஷ்டம் கணவரும் ஒரு கலை பிரியர். என் விருப்பத்துக்கு எப்போதும் தடை சொன்னது கிடையாது . எங்கள் இரண்டு பேர்
ரசனையும் பல விதங்களில் ஒத்து போக எங்கள் வீடே ஒரு குட்டி அருங்காட்சியமாக மாறி போனது. கணவர் கார்த்திக் IT கம்பனியில் ப்ராஜெக்ட் மேனேஜர் .பல சமயத்தில் வீட்டிலிருந்தும் வேலை செய்ய வேண்டி இருக்கும். வேலை பளு காரணமாக இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து வெளியில் போவது அபூர்வம். மன உளைச்சலில் உழைத்து வீட்டுக்கு வந்து அக்கடா என்று சோபாவில் கொஞ்ச நேரம் கண்ணயரும் ஆளை வெளியே கூட்டி போக சொல்ல மனமில்லை. திருமணமான புதிதில் வீட்டிலேயே அடைபட்டு அனைத்திற்கும் அவரையே சார்ந்திருப்பது சிரமமாக இருந்தது.
முக்கியமாக வெளியே போக. டிரைவிங் கற்று கொண்ட பிறகு மெதுவாக நானே சுதந்திரமாக வெளியே போக கற்று கொண்டேன்.
கார்திக்கோடு வெளியே வந்தால் புள்ளை பூச்சியை மடியில் கொண்டது மாதிரி. எனக்கு ஆற அமர நிதானமாக பார்த்து பார்த்து வாங்க வேண்டும். கார்த்திக்கு பொறுமை கிடையாது . ஆதர்ஷா ஒரே பெண். மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பில் படிக்கிறாள். படு சுட்டி. அவளை ரெடி செய்து , ரெண்டு பேருக்கும் லஞ்ச் பேக் செய்து ஒரு வழியாக இரண்டு பேரும் கிளம்பியபிறகு மளிகை, ஷாப்பிங் லிஸ்ட் எடுத்துகொண்டு இப்படி கிளம்பி விடுவது வழக்கம்.வீணாக TV சீரியல்கள் பார்த்து நேரத்தை வீணாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை . ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.....வீட்டிற்கு ஷாப்பிங் முடித்தது போலும் ஆயிற்று. என் கலை பசிக்கு தீனி போட்டது போலும் ஆயிற்று .
அமெரிக்காவில் இருக்கும் அக்கா சுதா ஒவ்வொரு விடுமுறையில் வரும் போதும் ஷாப்பிங் செய்ய இங்கே கூட்டி வந்து விடுவேன். அவள்
வீட்டுக்கும் அவள் நண்பர்களுக்கு Souvenirs மற்றும் பல கலை பொருட்களை இங்கே வந்து வாங்கி செல்வாள். போன முறை வந்திருந்த போது வெண்கல நடராஜர் சிலை, ஆளுயர குத்து விளக்கு , தேக்கு யானை என்று ஏகத்துக்கு வாங்கி அவ்வளவுக்கும் ஒரு பிளாஸ்டிக் அட்டையை
அனாசியமாய் "ஸ்வைப்" செய்து கொண்டு போனாள் .
அங்கே போனதும் போட்டோ அனுப்பி இருந்தாள் . அவள் வீட்டை அந்த பொருட்கள் பிரமாதமாக அலங்கரித்து இருந்தன.
அக்காவும் அத்திம்பேரும் ஒவ்வொரு முறையும் அமெரிக்கா வந்துவிடும் படி கார்த்திக்கை நச்சரிப்பார்கள்.அவர்களுக்கு பதிலுக்கு ஒரு புன்னகை மட்டுமே கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் வாழ்கையில் ஒவ்வொரு குறிக்கோள்... கார்த்திக்கிற்கு இருக்கும் திறமைக்கு எப்போதோ வெளிநாடு சென்றிருக்கலாம். ஆனால் ஏனோ ஈடு பாடு இல்லை.
கம்பெனியில் பல முறை அமெரிக்கா போக வாய்ப்பு வந்தும் அதை தன் சகாக்களுக்கு விட்டு கொடுத்து இந்தியன் செக்டாரை விட்டு எங்கும் போவதாய் இல்லை என்று மேலிடத்தில் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.
"மத்தவங்க எல்லாம் வெளிநாடு போக ஒரு வாய்ப்பு கிடைக்காதான்னு ஏங்கிகிட்டு இருக்கும் போது நீங்க ஏன் வர்ற வாய்ப்பை வேண்டாங்கறீங்க.." என்று நான் கேட்ட போதெல்லாம் .."ஒவ்வொரு எஞ்சினியர், டாக்டரை உருவாக்க இந்த நாடு எத்தனை . செலவு செய்கிறது தெரியுமா...?"
என்று ஏதேதோ புரியாத கணக்கெல்லாம் . சொல்லுவார். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து , , வாழ்கையில் சந்தோஷம் என்பது வெளியில் நாம் இருக்கும் இடத்தில் இல்லை. அது நமக்கு உள்ளேதான் இருக்கு என்று ஏதாவது வேதாந்தம் பேசி வாயடைத்து விடுவார்.
என்னதான் இருந்தாலும் அடிப்படை கட்டமைப்பு , சுகாதார சீர்கேடு , யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்கிற மனபோக்கில் புரையோடி போயிருக்கும்பொறுப்பற்றஅதிகாரிகள், எங்குசென்றாலும் மூச்சுமுட்டும்ஜன நெரிசல் ,சாலை விதிகளை மதிக்காத பொதுமக்கள் என்று இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டு சில வருடங்கள் வெளிநாடு போய் வந்தால் என்ன என்கிற ஒரு நப்பாசை உள்ளுக்குள்
எனக்கு இன்றும் உண்டு .
கார்த்திக், காதில் i -pod மாட்டி trousar- ல் திரியும் லௌதீக ஆசைகள் கொண்ட இன்றைய மாடர்ன் " IT யன் " களிலிருந்து ரொம்பவே மாறு பட்டவர்.
கார்த்திக்கு நம் பாரம்பரியத்தில், தமிழ் இலக்கியத்தில் நிறைய ஈடுபாடு . சரியாக பராமரிக்காமல் கொஞ்ச கொஞ்சமாக அழிந்து வரும் நம் புரதான சின்னங்களை அடையாளம் கண்டு அவைகளை புணரமைக்க முயற்சி எடுக்க வேண்டும்,மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கி நம் பாரம்பரியத்தின் அருமை பற்றி தெரியாத இன்றைய இளைய தலை முறைக்கு விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும், வெளி உலகுக்கு தெரியாமல் போன சங்க இலக்கியங்களை மொழி பெயர்க்க வேண்டும் என்று இப்படி நிறைய ஆசை. அதற்கு இங்கே இருந்தால்தான் சரிவரும் என்பார்.
ராமன் இருக்கும் இடம்தான் சீதைக்கு அயோத்தி என்று நினைத்து அவருடைய நல்ல நோக்கத்திற்கு குறுக்கே இருக்க வேண்டாமென்று இது விஷயமாக நச்சரிப்பதை விட்டு விட்டேன்.அறிவு ஜீவிக்கு வாழ்கை பட்டால் பாரதி கண்ணம்மாவாக மாறுவதை தவிர வேறு வழி ..? இந்த விஷயத்தில் நான் நான் கொஞ்சம் அதிருஷ்ட சாலி ..
பாவம் கண்ணம்மா மகா கவிக்கு வாழ்க்கைப்பட்டு கடைசி வரை அடுத்த வேளை சோற்றுக்கே திண்டாடியதுதான் மிச்சம்.
"எக்ஸ்க்யூஸ் மீ ..." குரல் கேட்டு திரும்பினேன் . "நீ ...காயத்திரி தானே ...? நான்தான் பானு ... காலேஜ் மேட் ஞாபகம் இல்லை ..?
ஓ ..மை காட் .!!
வாட் a pleasant சர்ப்ரைஸ்...!!
ஸ்லிம் பியூட்டி பானுவா நீ ..? ..சாரி பாத்து ரொம்ப வருஷம் ஆச்சு.. அடையாளமே தெரியலே .."
ஒரு கணம் நினைவுகள் பட படவென்று சில பல வருடங்கள்
பின்னோக்கி ரீவைண்ட் ஆனது .
நானும் பானுவும் எத்திராஜ் காலேஜில் ஒன்றாக படித்தோம்.
மிக நெருங்கிய தோழிகள் . பானு தவிர அமுதா , மாலதி என்று நாங்கள் நான்கு பேறும் எப்போதுமே ஒன்றாக இருப்போம் . கல்லூரி நாட்களில் நாங்கள் சேர்ந்து அடித்த லூட்டிக்கு அளவே இல்லை.
அப்போதெல்லாம் பானு ரொம்ப பாபுலர் . கதை, கவிதை, பேச்சுபோட்டி என்று எல்லாவற்றிலும் நம்பர் ஒன் . பட்டம் வாங்கியதும் அவரவர் வாழ்கை வெவ்வேறு திசை நோக்கி போக, கால போக்கில் கல்லூரி நட்புகளும் இரயில் சிநேகிதம் போல் காணாமல் போனது .
பல வருடங்களுக்கு பின் சந்தித்ததால் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. கௌரி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுவதாகவும் கணவர் அரசு இசை கல்லூரியில் பணியாற்றுவதாகவும் கூறினாள். பேசிக்கொண்டே கௌண்டருக்கு வந்து அங்கே பேக் செய்வதற்கு வைக்கபட்டிருந்த தான் வாங்கிய பொருளை காண்பித்தாள் கௌரி. அழகான சுமார் மூன்றடி உயர உலோகத்தால் ஆன கவச உடையில் கையில் வாளும், ஈட்டி போன்ற ஆயுதமும் ஏந்திய ரோம வீரன். கூரான நாசியும் கண்களில் பிரதிபலித்த வீரமும் படு கச்சிதமாய் கம்பீரமாக காட்சியளித்தது.
" பானு உனக்கு நல்ல டேஸ்ட் ..ரொம்ப பிரமாதமா இருக்கு .."
" தேங்க் யூ ..என் ரசனை எல்லாம் சாதாரணம்தான். நம்மை சுற்றி இருக்கும் சின்ன சின்ன விஷயத்தை கூட அழகா ரசிக்க கத்துண்டதே என் பொண்ணு கயல் விழி கிட்டேந்துதான் ..."
இது கூட அவளுக்காகத்தான் ..ஒரு சின்ன சர்ப்ரைஸ் .."
" அப்படியா..? என்ன வயசு உன் டாட்டருக்கு ..?"
"இந்த மே 25 வந்தால் 8 வயது .."
"பரவாயில்லையே இந்த வயசிலேயே நல்ல ரசனை இருக்கே ..வெரி குட் . அது சரி இது கொஞ்சம் ஹெவியா இருக்கும் போல இருக்கே ..? எப்பிடி கொண்டு போக போறே ..?
"வீடு பக்கம்தான் KK நகர் ஆட்டோ பிடிச்சு போயிடுவேன் .."
அப்பிடியா என் வீடு அசோக் நகர் . ஆன் தி வே தான் . வழியிலே டிராப் பண்ணிடறேன் இப் யு டோன்ட் மைண்ட் .."
"வெரி கைண்ட் ஆப் யூ ..பட் வீட்டுக்கு வந்து கண்டிப்பா காபி சாப்பிட்டுதான் போகணும் .."
"ஷ்யூர் ..நீயும் அவசியம் என் வீட்டுக்கு வரணும் .."
இருவரும் தொலைபேசி எங்களை பறிமாறி கொண்டோம் .
KK நகரில் டிராபிக் அதிகம் இல்லாத அமைதியான தெருவில் அமைந்திருந்தது பானுவின் வீடு .
கேட்டை திறந்ததும் குட்டி பொமொரெனியன் துள்ளி குதித்து பானுவை
கண்டு சந்தோஷத்தில் வாலாட்டியும் என்னை கண்டு கொஞ்சம் பயத்தில் அரை மனதோடு குரைத்து குழம்பி குறுக்கும் நெடுக்கும் ஓடியதை கண்டு சிரிப்பு வந்தது .
கார் டிக்கியிலிருந்து அந்த கனமான உலோக சிலையை ஆளுக்கு ஒருபுறம் பிடித்து வரவேற்பறையில் வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது .
பானுவின் வீட்டு வரவேற்பறை பளிச்சென்று படு சுத்தமாக இருந்தது .
வீட்டினுள் நுழைந்ததும் ரம்மியமான ஒரு உணர்வு . உள்ளே ஏதோ ஒரு அறையில் இருந்து வயலின் வாசிப்பு கேட்டது . ஒருவேளை பானுவின் கணவராக இருக்க கூடும் . இசை கல்லூரியில் வேலை செய்வதாக பானு சொன்னது நினைவுக்கு வந்தது . வீடு முழுவதும் நல்ல கலை நயத்தோடு அங்கங்கே கலை பொருட்கள் அலங்கரித்தன. என் வீட்டில் இருப்பதை போன்ற அதே உணர்வு .
வரவேற்பறையில் ஒரு கண்ணாடி ஷெல் ஃப்.. முழுக்க வித விதமான கைவினை பொருட்கள். தீக்குச்சிகள் கொண்டு செய்யப்பட்ட கப்பல் , உடைந்த வளையல் துண்டுகள் கொண்டு செய்யப்பட்ட வண்ணமிகு நாட்டிய மங்கை, மெழுகை நேர்த்தியாக சுரண்டி எடுத்து வித விதமான மனித உருவங்கள் , கிளிஞ்சல்களில் அழகான பறவைகள் ......
"ஏய் காயத்ரி என்ன அப்படி ஆச்சர்யமா பாக்கிற ? இதெல்லாம் கயலோட வொர்க். இவங்கதான் என் மாமியார் ..அம்மா இவதான் காயத்ரி நான் அடிக்கடி சொல்லுவேனே ..?
பிரம்மிப்பிலிருந்து மீண்டு சுதாகரித்து திரும்பி பார்த்தேன் . சுமார் 75 வயது மதிக்க தக்க சாந்தம் தவழும் முகத்தோடு வெள்ளை ரவிக்கை நூல் புடவையில் பானுவின் மாமியார் .
"நம்ஸ்காரம் மா ..சாரி நீங்க வந்ததை கவனிக்கலே ...
பானு, உன் மாமியார் வீட்ல இருக்காங்கன்னு சொல்லவே இல்லையே ..?
உங்க பேத்தியோட ஆர்ட் வொர்க்கை பார்த்து மலைச்சி போயிட்டேன் ..
என்னாலே நம்பவே முடியலே இந்த சின்ன வயசில் இவ்வளவு டேலென்டா ..unbelievable..!!.."
"பானு உன்னை பத்தி நெறைய சொல்லி இருக்கா உன்னை பார்த்ததுலே ரொம்ப சந்தோஷம் ரெண்டு பேரும் பேசிண்டிருங்கோ நான் காபி போட்டுட்டு வந்துடறேன் .."
"சரிம்மா ..காபி மட்டும் போதும் தயவு செய்து வேற எதுவும் செய்ய வேண்டாம் நான் ஆதர்ஷா வர்றதுக்குள்ளே வீட்டுக்கு போயாகணும் .."
மனதுக்குள் பழைய நட்பை புதுப்பித்து கொண்டதில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது . இந்த எட்டு வயதில் அத்தனை கலை ரசனை கொண்ட பானுவின் மகளை காண மனம் விழைந்தது .
" பானு, எங்க அந்த ஜீனியஸ் .,உன் டாட்டர் ..? அவளை கண்டிப்பா நான் பாக்கணும் . அவள் திறமையை பாராட்டணும் .."
"இதோ ஒரு நிமிஷம் கூட்டிட்டு வரேன் .ரூம்ல வயலின் ப்ராக்டிஸ் பண்ணிண்டிருக்கா ..அவ அப்பாவோட ட்ரைனிங் .."
"வாட். .? .இவ்வளோ அழகா வாசிக்கறது உன் டாட்டரா .?.நான் இவ்வளவு நேரம் உன் ஹஸ்பண்டுன்னு இல்லே நெனச்சிட்டு இருந்தேன் .? ஓ மை காட் !!..யூ ஆர் வெரி லக்கி ..."
இதற்கு பிறகு நடந்த விஷயங்களை வார்த்தையால் விவரிக்க முடியாது .
அறைக்கு சென்று வயலின் வாசித்து கொண்டிருந்த கயல் விழியை அழைத்து வந்தாள் பானு ...கை பிடித்து ...!!
கரு கருவென அடர்த்தியான கேசத்தோடு சட்டை பாவடையில் ஒரு குட்டி தேவதையை பார்ப்பது போலிருந்தது.
..ஆனால்.... ஆனால்.. முன்னே கை நீட்டி அடிமேல் அடிவைத்து ஒவ்வொரு அடியும் கவனமாக பார்த்து பார்த்து ...ஏன் ...?
அதிர்ச்சியில் உறைந்து போனேன் நான் ...
"கயல்.. இவங்கதான் என் காலேஜ் ப்ரெண்ட் காயத்ரி ...நமஸ்காரம் பண்ணு .."
"வணக்கம் ஆண்டி ...உங்களை பத்தி அம்மா நெறைய சொல்லி இருக்காங்க ..."
"கயல் ..உனக்கு இன்னொரு சர்பிரைஸ் .." வரவேற்பறையில் காபி டேபிளின் மீது நாங்கள் வாங்கி வந்த ரோம போர் வீரனிடம் அவளை கை பிடித்து அழைத்து சென்ற அதே தருணம் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த
என்னை பார்த்து உள்ளே வரும்படி சைகை செய்தாள் பானு ..
"கயல் பாத்து எப்படி இருக்குன்னு சொல்லு நான் ஆண்டி கிட்டே பேசிட்டு இருக்கேன் .."
உள்ளே பானுவை பின்தொடர்தேன் . அறை கதவை சாத்திய உடன் மேலே சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள் பானு ..
"கௌரி... சாரி உன் கிட்டே கடையிலேயே சொல்லலாம்னுதான் இருந்தேன் . அதை சொல்லி உன்னையும் சங்கட படுத்த விரும்பலை .பொறக்கும் போது நார்மலாதான் இருந்தா . பொறந்த போது அவ கண்ணு அவ்வளோ அழகா இருக்குன்னு எல்லாரும் சொல்லுவாங்க .அதனால கயல் விழின்னு பேர் வெச்சோம் . மூணு வயது வரைக்கும் நல்லாத்தான் பார்த்துட்டு இருந்தா ... அப்புறம் யார் கண்ணு பட்டுதோ கொஞ்ச கொஞ்சமா பார்வை மங்கிடுச்சு . Opthalmalogist கிட்டே கூட்டிட்டு போய் ஐ டெஸ்ட் செஞ்சோம், கண்ணாடி எல்லாம் கொஞ்ச நாள் போட்டுட்டு இருந்தா ..ஆனா , போக போக பார்வை இன்னும் மோசமாயிடிச்சி . பெரிய ஸ்பெஷலிஸ்ட் கிட்டே கூட்டிட்டு போனோம் . நெறைய டெஸ்ட் எல்லாம் பண்ணி இது " லீபெர்ஸ் கன்ஜெனிடல் அமௌரோசிஸ்", மரபணு mutation ஆகுரதால ஏற்படுற குழைந்தை பருவத்தில பார்வையை பாதிக்கும் அபூர்வ நோயாம். லட்சத்தில் ஒருத்தருக்கு இந்த நோய் வரும் வாய்ப்பாம். அந்த அதிருஷ்ட சாலி என் பொண்ணு .."
"மொதல்ல நானும் , வீட்டுக்காரரும் ரொம்ப இடிஞ்சி போயிட்டோம் .
அப்புறம் மனசை திடப்படுதிண்டோம் ..
கோயில் குளமெல்லாம் சுத்தி, தவம் செஞ்சி பெத்த பொண்ணாச்சே ..
எங்களால முடிஞ்ச வரைக்கும் இனிமே
அவளை குறையில்லாமல் பாத்துக்கணும் .அவ்வளோதான். இதிலென்ன ஆச்சரியம்னா பார்வை போன பிறகு கூட அவள் கொஞ்ச கூட கவலையோ துளி வருத்தமோ படல. கண்ணில்லாமலேயே வாழ்கையை ரசிக்க முடியும்கறதை தீர்க்கமா தினம் தினம் எங்களுக்கு நிருபிச்சி காட்டுறா. இதுக்கு ஒரே ட்ரீட்மென்ட் ஜீன் தெரபியாம் நேஷனல் ஐ இன்ஸ்டியூட் -ல கிளினிகல் ட்ரையலுக்கு அவளை செலக்ட் செஞ்சிருக்காங்க . அடுத்த மாசத்திலேந்து ட்ரீட்மென்ட் தொடங்குது ..அதுதான் எங்களுக்கு ஒரே கடைசி நம்பிக்கை..."
உன்கிட்டே ஒரே ஒரு சின்ன request . வெளியே போனதும் கயல் கிட்டே மத்த குழந்தைங்ககிட்ட பேசுற மாதிரி சாதரணமாவே பேசு அனுதாபம் மட்டும் காட்டிடாதே . ஏன்னா அவ தன் கிட்டே எந்த குறையும் இருக்கறதா நினைக்கலே .." கண்களை துடைத்துக்கொண்டு கதவை திறந்தாள் பானு .
வரவேற்பறையில் ரோம போர் வீர சிலையை ஸ்பரிசித்து "கண்டு "அணு அணுவாக ரசித்து கொண்டிருந்தன கலையின் பிஞ்சு விரல்கள் .
"மம்மி ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. இதை தரையில வெச்சா ஷார்ட்டா தெரியும் கொஞ்சம் ஹைட்ல வெச்சா நல்லா இருக்கும் .... ஒரு ஐடியா ..டாடி கிட்டே சொல்லி பரண்ல இருக்கிற முக்காலிக்கு வார்னிஷ் அடிச்சிட்டு அது மேலே இதை வெச்சி ரிசப்ஷன்ல வெக்கலாம்..வாட் டூ யு திங்க் ..? "
சமையலறையில் இருந்து மிதந்து வந்த பில்டர் காபியின் மனத்தை கூட உணர முடியாமல் உருண்டு வந்து ஏதோ ஒன்று என் தொண்டையில் அடைத்தது ........
********