Sunday, May 22, 2011

குழந்தை வளர்ப்பு

அமெரிக்காவில் நடத்தப்படும் கடுமையான Spelling Bee competition-ல் எப்போதும் இந்திய குழந்தைகள் முதலிடம் வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்திய குழந்தைகளின் திறமை எங்கே தம் குழந்தைகளின் வேலை வாய்ப்பை பாதிக்குமோ என்று அமெரிக்க பெற்றோர்கள் பயப்படும் அளவுக்கு இந்திய குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இதனை மேம்போக்காக பார்த்தால்இந்தியர்கள் எல்லோருமே பெருமைப்பட வேண்டிய விஷயம். ஆனால் எனக்குள் நான் கேட்டுகொண்டதுண்டு. எப்படி நமக்கு மட்டும்(சீனர்கள் கூட) இப்படிப்பட்டகுணம்?
பெரும்பான்மையான இந்திய அம்மாக்களை பார்த்தீர்களென்றால், குழந்தை பிறக்கும் வரை எல்லா கணவன் மனைவி போல வாழ்கையினை ஜாலியாக அனுபவிப்பார்கள். குழந்தை பிறந்து LKG போக துவங்கும் போது பிடிக்கும் ஒரு பேய்..அதுதான் COMPARISON பேய்..
பக்கத்துக்கு வீட்டு மலா குழந்தை நல்ல ஸ்கூல், அடுத்த வீட்டு கோபு போகிற ஸ்கூல் நல்ல ஸ்கூல் என்று...இந்த மனப்பான்மை ஒருவித மன நோயாக நம் இந்திய பெண்களை தாக்கி அவர்கள் கவனம் முழுவதும் கணவனின் தேவைகள் கூட இரண்டாம் பட்சமாக போய் தங்கள் குழந்தைகளை உலகத்திலேயே அறிவாளியாக ஆக்கியே தீருவேன் அன்று கங்கணம் கட்டிக்கொண்டு தங்கள் வாழ்கையை தியாகம் செய்து கடைசியில்
இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்வியலை அவர்களுக்கு கற்று கொடுக்க மறந்து போவார்கள்.
அமெரிக்காவில் உலகத்திலேயே இளம் வயதில் டாக்டர் பட்டம்(guinness record )பெற்ற பாலா அம்பானி சகோதரர்களை கேள்வி பட்டுருப்பீர்கள். இளைய சகோதரனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். சில மாதங்களிலேயே விவாகரத்து ஆகி விட்டது. விவாகரத்து கொடுமை காரணமாக இந்தியா வந்த போது தமிழ்நாடு போலீஸ் அவரை கைது செய்து உள்ளே போட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவ்வளவு பெரிய அறிவாளி வாழ்வியலில் தோற்றதற்கு காரணம் அவர்கள் பெற்றோர். அவருக்கு வெளியே சென்று அடிபட்டு அனுபவ படிப்பினை அறிந்து கொள்ளும் வாய்பே கொடுக்க பட வில்லை.படிக்கும் காலத்தில் புத்தகங்களையே திணித்து திணித்து தம்மை சுற்றி நடக்கும் வாழ்வியல் நடப்புகளை கூட காண முடியாத அளவுக்கு புத்தக புழுக்களாக மாற்றி விடுகிறார்கள்.
"ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்"என்றார் வள்ளுவர். உண்மைதான். ஆனால் வாழ்வியலை தெரியாதவனை சான்றோன் என்று எப்படி ஒத்து கொள்ள முடியும் ? நம் புராணத்தில் ஒரு கதை உண்டு. ஒரு ஊரில் ஆற்றை கடக்க பரிசலில் செல்ல வேண்டும். பயணியாக பல நூல்களை கற்றறிந்த ஒரு ஞானி. படிக்காத ஒரு பாமரன் பரிசல் காரன். ஞானி கேட்கிறார் அந்த பாமரனிடம் " உனக்கு ராமாயணம் தெரியுமா?" என்று அவன் தெரியாது என்றான். அதற்கு அவர் "நீ உன் வாழ்நாளில் பாதியை வீணாக்கி விட்டாய், சரி மகாபாரதமாவது தெரியுமா" என கேட்க அதற்கும் அவன் தெரியாது என, அந்த ஞானி "நீ உன் வாழ்நாளில் முக்கால் வாசி வீணடித்து விட்டாயே.." என்றார்.
பரிசல் கொஞ்ச தொலைவு சென்றதும் பரிசலில் ஓட்டை விழுந்து நீர் குபு குபு என உள்ளே வர ஆரம்பித்தது. அந்த பாமரன் அந்த ஞானியிடம் கேட்டான் "அய்யா உங்களுக்கு நீச்சல் தெரியுமா?" அதற்கு அந்த ஞானி சொன்னார் "தெரியாது". அந்த பாமரன் சொன்னான் "அய்யா இன்னும் கொஞ்சம் நேரத்தில் பரிசல் மூழ்க போகிறது .. நீங்கள் உங்கள் முழு .வாழகையையே வீணடித்து விட்டீர்கள் ....எஸ்கேப்" என்று நீந்தி பிழைத்தது
கொண்டான்.
இது போல்தான் நாமும் நம் குழந்தைகளை வளர்கிறோம். பயிர்களுக்கு வேகமாக வளர வேண்டும் என்று தேவையில்லாத வேதி உரங்களை போட்டு வளர்ப்பது போல. இயற்கையில் எப்படி ஒவ்வொரு கனியும் மா, பலா, வழை என தனகென ஒரு தனித்துவம் கொண்டு விளங்குகிறதோ அதே போல் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. மற்ற குழந்தைகளோடு நம் குழந்தைகளை எப்போதும் ஒப்பிட்டு அவர்களை குறை கூறுவது அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை (inferiority complex ) உண்டாக்கும் . அதை மதித்து காலத்தின் போக்கில் இயற்கையாக அவர்களை வளர விட வேண்டும். அவர்கள் தவறான் வழிக்கு தடம் மாறி போகாமல் பார்த்து கொள்ள வேண்டியது நம் கடமை. அவர்கள் கல்வி கற்க ஒரு ஆரோக்யமான சூழலை ஏற்படுத்தி கொடுத்தால் போதும். அவ்வபோது இடையே அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடவோ, டிவி பார்க்க அனுமதிபதலோ எந்த தவறும் இல்லை. மாறாக அது மன அழுத்ததிலிறிந்து(stress ) அவர்கள் மூளைக்கு சற்று புத்துணர்வு கிடைக்கும்.

ஒரு முறை விஞ்ஞானி Enstein இடம் நிருபர்கள் அவர் தியரி குறித்த வினாவிற்கு அவர் சொன்னது. "எனக்கு நினைவில்லை என் ஏட்டு குறிப்பை பார்த்துதான் சொல்ல வேண்டும்" என்றாராம். அதற்கு நிருபர் கேட்டாராம் "நீங்கள் கண்டுபிடித்த விஷயம்..உங்களுக்கே நினைவில்லையா என்று வினவ, அதற்கு அவர் சொன்னாராம் "உண்மைதான், தேவை பட்டால் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான், எதற்காக மூளைக்குள் எல்லா விஷயங்களையும் போட்டு திணிக்க வேண்டும் ?"

உண்மைதான். எதற்காக நேரத்தை செலவழித்து உலகத்திலுள்ள எல்லா நாட்டின் தலை நகரங்களையும் மனப்பாடம் செய்ய சொல்லி குழந்தைகளை torture செய்ய வேண்டும்? இந்த நவீன உலகத்தில் Google , spellcheck விரல் நுனியில் இருக்கும் போது எதற்கு இந்த போராட்டம்?

ஆக ஒரு குழத்தை எப்படி அறிவாளியாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் புத்திசாலியாக இருக்க வேண்டியதும் மிக முக்கியம். அப்போதுதான் இந்த உலகத்தின் போராட்டங்களை சந்தித்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். சரி இதோடு முடித்து கொள்கிறேன். பசங்க homework முடிசிடாங்கலானு பாக்கணும்!
-Bala

திரை கடல் (கவிதை )



திரை கடல் ஓடி

திரவியம் தேடினோம்

கிடைத்தது செல்வம்

தொலைந்தன சொந்தம்...


Sunday, May 15, 2011

எது கலாச்சாரம் ?

நெடு நாட்களாகவே என்னுள் ஒரு கேள்வி .. கலாச்சாரம் என்பது என்ன.? பொதுவாக நாம் எல்லோருக்கும் நம் கலாச்சாரத்தின் மேல் ஒரு பெருமை உண்டு , அதே போல மேலை நாட்டு கலாச்சாரத்தின் மேல் ஒரு அவமதிப்பு உண்டு. இந்த விஷயத்தினை ஆழமாக யோசித்து பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். இந்தியாவில் பிறந்து வளர்ந்த அனுபவமும் மேல் நாட்டு கலாச்சாரத்தினை காணமுடிந்த வாய்ப்பும் எனக்கு கிடைத்ததால் நாம் எப்படி குருட்டாம் போக்கில் பல அனுமானங்களை நம்புகிறோம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. நம் கலாச்சாரம் சிறந்தது என்றால் நம் நாட்டில் ஏன் இத்தனை முதியோர் இல்லங்கள்? AIDS -ல் தமிழகம் ஏன் கொடி கட்டி பறக்கிறது எப்படி இத்தனை Abortion clinics ? நாட்டில் நாளுக்கு நாள் ஏன் விவாகரத்து அதிகரித்து கொண்டே போகிறது ? செய்தி தாளில் ஏன் தினமும் கள்ள தொடர்பு கொலைகள்? உண்மையை சொல்லப்போனால் என் மேல் நாட்டு அனுபவத்தில் வயதான பெற்றோரை முகம் சுளிக்காமல் பார்த்துகொள்ளும் மகன்களையும் ,மகள்களையும் அதே போல நீண்ட வருடங்கள் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக அன்பான தம்பதியரையும் நிறைய கண்டிருக்கிறேன். இங்கே dating என்பது ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுவதற்காக சந்தித்து கொள்கிறார்கள். இதில் அவர்கள் வெளிப்படையாக இருக்கிறார்கள் . ஆனால் நம் ஊரில் கலாச்சாரம் என்ற போலி பயத்தில் சமுதாயத்துக்கு பயந்து ஒளிந்து ஒளித்து பார்க்கிலும் பீச்சிலும் சந்தித்து கொண்டு எதோ திருட்டு தனம் செய்வது பயந்து பயந்து காதலிக்க வேண்டிய சூழ்நிலை. கலாச்சாரம் என்ற போர்வையில் ஒருவனுக்கு ஒருத்தி என்று காலம் முழுவதும் கணவனும் மனைவியும் திருமணம் என்ற பந்தத்தில் ஒத்து வராவிட்டாலும் சகதியில் வாழ்வது என்ன கலாச்சாரம்? விவாகரத்தினால் குழந்தைகள் வாழ்கை பாதிக்குமென்றால் கணவன் மனைவி சண்டை சச்சரவு சூழல் மட்டும் ஒரு குழந்தைக்கு ஆரோக்யமானதா? அமெரிக்காவில் கணவன் மனைவி விவாகரத்து ஆனவுடன் குடும்ப நல நீதி மன்றம் எந்த பெற்றோர் வசம் குழந்தை இருந்தால் குழந்தைக்கு நல்லது என்று ஆய்வு செய்து அந்த பெற்றோர் வசம் குழந்தையை ஒப்படைக்கின்றனர். குழந்தையிடம் interview செய்து visitation வழங்கபடுகிறது. குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்த பின்னர்தான் எந்த முடிவும் எடுக்கப்படும்.இந்த சிஸ்டம் குழந்தைகள் நன்றாக புரிந்து கொள்ள முடிவதனால் அவர்களுக்கு phycological ஆக பாதிப்பை ஏற்படுவதில்லை. இவையெல்லாம் நான் சரி என்று சொல்லவில்லை. மேலை நாடுகளில் கணவன் மனைவி ஒத்து வராவிட்டால் சட்டை மாற்றுவது போல bye bye சொல்லிவிட்டு குழந்தைகளை நடுத்தெருவில் விட்டு விட்டு போய் கொண்டே இருப்பார்கள் என்ற நம் தவறான அனுமானத்தினை சுட்டி காட்டுகிறேன்.அதே போல இங்கே 18 வயதுக்கு பிறகு பிள்ளைகள் பெற்றோருக்கு பாரமாக இல்லாமல் தனியாக வாழ கற்று கொள்கிறார்கள். இதிலென்ன தவறு? விலங்குகளை பாருங்கள், குட்டி ஈன்ற பிறகு அவை சுயமாக வேட்டை ஆட கற்று கொள்ளும் வரைதான் தாயின் அரவணைப்பு இருக்கும். அதற்கு பிறகு அவை இந்த உலகத்தில் போராடி வாழ கற்று கொள்கின்றன. ஆனால் நம் சமுதாய முறையில் பல குடும்பங்களில் பிள்ளைகள் 30 வயது வரை கூட சுயமாக எந்த முடிவும் எடுக்க தெரியாமல் பெற்றோருக்கும் வயதான காலத்திலும் பாரமாக உள்ளனர். கூட்டு குடித்தனம் நல்ல கலாச்சாரம் என்று நாம் மார்தட்டி கொள்கிறோம். இந்த கால கட்டத்தில் கூட்டு குடும்பம் சாத்தியமா? நமக்கென்று ஒரு privacy இல்லாமல் ஒருவர் விஷயத்தில் ஒருவர் மூக்கை நுழைப்பது எவ்வளவு அநாகரீகம்?ஆண்டாண்டு காலமாக பெண்களின் கன்னித்தன்மை பெரிய விஷயமாக பேசப்படுகிறது. ஆனால் ஆணுக்கு அது ஒரு பெரிய விஷயமில்லை. நம் கலாச்சார "விதிகள்" நம் ஆணாதிக்கத்தையே காட்டுகிறது. திருமணம் வரை கன்னித்தன்மை என்பது நல்ல விஷயம் தான், ஆனால் அதை வைத்து எந்த ஒரு தனி மனிதரையும் எடை போடுவது என்பது என்பது கீழ்த்தரமான விஷயம். மேலும் நம் கலாச்சாரத்தில் பல ஆண்கள் ஒழுக்கமாக இருப்பதாக சொல்லிகொள்வதெல்லாம் உண்மையில் "சந்தர்பம்" கிடைக்காததால்தான். ஒரு நம்பிக்கையான ஆண் பெண் உறவில் ஒருவர் மற்றவருக்கு செய்யும் துரோகத்தினால் விளையும் வலி ஒரு இந்தியனுக்கும் சரி ஒரு அமெரிக்கனுக்கும் சரி ஒரே பாதிப்புதான்.அந்த உறவுகளின் வரையறைகள் மீறப்படும் போது ஏற்படும் பாதிப்புக்கள் எல்லோருக்கும் சமம்.கலாச்சாரம் ஒன்றுதான். இந்திய கலாச்சாரம் மேலை நாடு கலாச்சாரம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. மனித கலாச்சாரம்.என்னை பொறுத்த வரை கலாச்சாரம் என்பது தனி மனித ஒழுக்கம்.மனித உறவுகளை புனிதமாக நினைத்து அந்த உறவுகளுக்கு உண்மையாக இருத்தல். நான் இங்கே வாழ வேண்டிய சூழலில் உப்பிட்ட நன்றிக்காக மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு வக்காளத்து வாங்குவதாக தயவு செய்து நினைக்க வேண்டாம். நம் பாரம்பரியத்தின் மீது எனக்கு என்றும் ஒரு அளவு கடந்த பெருமிதம் உண்டு. அதே சமயம் பிற கலாச்சாரத்தினை பற்றி முழுவதும் அறியாத தவறான அனுமானங்களும் தவறு என்பது என் தாழ்மையான கருத்து.
- பாலா