(1)
ஈஸி சேரில் படுத்து பேப்பர் படித்து கொண்டிருந்தார் சித்தப்பா.
"வாடா கோபி ..எங்கே ரொம்ப நாளா ஆளே காணோம் ..? ஊர்ல எல்லோரும் சௌக்யமா ..?"
" கொஞ்ச நாளா கம்பெனிலே வேலை ஜாஸ்தி சித்தப்பா நானும் ஆத்தூர் போய் ரொம்ப நாளாச்சி ... ..இப்பதான் ரெண்டு நாள் ஆப்ஃ கெடைச்சுது ..இந்த பக்கம் கொஞ்சம் வேலை இருந்தது ..அப்படியே உங்களை பாத்துட்டு போகலாமுன்னு ..விஜி எப்பிடி இருக்கா ..? புது வேலை எப்படி இருக்காம் ...?
சித்தியும் குரல் கேட்டு உள்ளிருந்து வந்தாள்.
"வாடா கோபி ..எப்படி இருக்கே ...? விஜி கூட இப்போ வர நேரமாச்சி . இந்த புது வேலை ஜாயின் பண்ணி சந்தோஷமாதான் போயிட்டிருந்தா ..ஏன்னு தெரியலே கொஞ்ச நாளாவே கொஞ்சம் டல்லா இருக்கா கேட்டா எதுவும் சொல்ல மாட்டேங்குறா . நீதான் அவ கிட்டே பேசணும் .
என்னமோ போ... அவளுக்கு நல்ல வரனா பாத்து ஒரு கல்யாணத்தை பண்ணி முடிச்சி உன் கல்யாணத்தையும் பாத்துட்டா நாங்க கொஞ்சம் நிம்மதியா மிச்ச காலத்தை கழிப்போம்.சொந்தத்துல அத்தனை பொண்ணுங்க இருக்கு.. நீ என்னடான்னா விஜிக்கு கல்யாணம் பண்ணிட்டுதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பிடிவாதம் பிடிக்குற...." இது சித்தி .
"இவ வேற எல்லாத்தையும் பெரிசு படுத்திக்கிட்டு ..அவளுக்கு வேலையில எவ்வளவு டென்ஷனோ ..? புள்ளாண்டான் வந்ததும் வராதுமா ..
அப்புறம் கோபி , வேற என்ன சங்கதி? வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு ..? ஏம்பா ..அங்க தனியா இருந்து கஷ்ட படுறே ..இங்கதான் இவ்வளவு பெரிய வீடு இருக்கே பேசாம இங்கே வந்துடேன் ...?" பரிவுடன் கேட்டார் சித்தப்பா .
"அதை ஏன் சித்தப்பா கேட்குறீங்க .. டபுள் ஷிப்ட் போட்டு தாளிச்சி எடுக்கரானுங்க. மத்தபடி எல்லாம் ஓகே இங்க இருந்து வேலைக்கு போறது கஷ்டம் அங்கே எனக்கு பக்கம் .. .."
சிறிது நேரம் இருவரிடமும் பேசிவிட்டு கிளம்ப எத்தனிக்கையில் சித்தி கண்டிப்பாக தங்கி விட்டு போக அன்பு கட்டளை இட்டாள். கோபியும் மறுக்க முடியாமல் ஒப்புகொண்டான்.
"சரி சித்தி நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன் .." வெளியே கிளம்பினான் கோபி .
"சரிப்பா சீக்கிரம் வந்துடு நான் போய் டிபன் ரெடி பண்ணுறேன் ..."
(2)
பொதுவாகவே வாழ்கையில் குறிப்பிட்ட சில உறவுகள் மீது சிலருக்கு அதிகமான பிடிப்பு இருக்கும் . . அம்மா , அப்பா மற்றும் கூட பிறந்த பந்தங்களை விட அந்த உறவின் மேல் தனிப்பட்ட பாசமும் புரிந்துணர்வும் இருக்கும் .கோபியை பொறுத்த வரை அந்த உறவு சித்தப்பாதான்.
சித்தப்பா வயது வித்தியாசம் பார்க்காமல் ஒரு நண்பனை போல கோபியிடம் பழகுவார். நிறைய விஷயங்களை மனம் விட்டு பேசி பகிர்ந்து
கொள்ள கோபிக்கு ஆசானாகவும் வழிகாட்டியாகவும் நண்பனாகவும் ஒவ்வொரு
கால கட்டத்திலும் இருந்தவர்.
கோபி வளர்ந்து ஆளாகி இன்று வரை அவன் வாழ்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சித்தப்பாவின் பங்களிப்பு நிறையவே உண்டு . இன்னும் சொல்ல போனால் அவன் அப்பா அம்மாவை விட கோபியின் விருப்பு வெறுப்புகளை அதிகம் புரிந்து கொண்டவர் சித்தப்பாதான் . கோபி பல சமயங்களில் யோசித்ததுண்டு எப்படியோ தவறி தன் குடும்பத்தில் பிறந்து விட்டோம் என்று.
கோபியின் சொந்த ஊர் திருச்சி பக்கம் ஆத்தூர் என்கிற சிறிய கிராமம். தாத்தாவின் பூர்வீக சொத்து நஞ்சை புஞ்சை நிலங்கள் உண்டு. தாத்தாவிற்கு அப்பா, சித்தப்பா இரண்டு மகன்கள் மட்டுமே. சித்தப்பாவிற்கு திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் குமாஸ்தா வேலை கிடைத்து அங்கேயே செட்டில் ஆகி விட்டார்.
அப்பா பஞ்சாயத்து மேல்நிலை பள்ளியில் கணக்கு வாத்தியார்.
கோபியின் அப்பா ரொம்ப கண்டிப்பானவர். கறார் பேர்வழி . வீட்டில் எல்லாமே தன் இஷ்டபடிதான் நடக்க வேண்டும். வீட்டுக்கு யார் யார் வரவேண்டும் யார் வரகூடாது என்று ஒரு லிஸ்ட்டே போட்டு வைத்திருப்பார் . அம்மாவோ அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. அப்பா வேலை முடித்து வீட்டுக்கு வருகையில் அவர் மொபெட் சத்தம் தூரத்தில் கேட்கும்போதே வீடே நிசப்தமாகி விடும்.
கோபி சிறுவயதில் ஆசை பட்ட விஷயங்களை முதலில் அம்மாவிடம்தான் சொல்லுவான் . அம்மா பிறகு நல்ல சமயமாக பார்த்து நைசாக அவரிடம் கேட்பாள். " மொதல்ல அவனை
முதல் ரேங்க் எடுக்க சொல்லு அப்புறம் பாக்கலாம் .." என்று சொல்லி விடுவார் . ஆறு வயதில், வராத பதிநேழாம் வாய்பாட்டை கையில் பிரம்பை வைத்து கொண்டு மனப்பாடமாக சொல்ல சொல்லுவார். கோபிக்கு அதனாலேயே கணக்கின் மீது ஒரு வெறுப்பு வந்து இன்று வரை சின்ன கணக்கு என்றாலும் செல்போன் கால்குலேட்டர் உதவி தேவைப்படும்.
வீட்டில் நிலவும் இந்த இறுக்கமான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க அப்போதெல்லாம் கோபிக்கு ஒரே வடிகால் திருச்சியில் இருக்கும் சித்தப்பா வீடுதான்.
. சித்தப்பா அப்படியே கோபியின் அப்பாவிற்கு எதிர்மறை. அன்பால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைப்பவர். அதனால் ஒவ்வொரு பள்ளி விடுமுறையின் போதும் கோபி திருச்சிக்கு கிளம்பி விடுவது வழக்கம். ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு திருச்சிக்கு போகும் போதும் ஒரே கொண்டாட்டம்தான். அதே போல் பொங்கல் , தீபாவளி என்றால் சித்தப்பா குடும்பம் மற்றும் பெங்களூர் மாமா குடும்பம் எல்லோரும் ஒன்று கூடி கிராமத்துக்கு வந்து சந்தோஷமாக கொண்டாடிவிட்டு போவார்கள் . கோபிக்கு காமிக்ஸ் பிடிக்கும் என்று தெரிந்து முத்து காமிக்ஸ் இரும்புக்கை மாயாவி , டின்-டின், மந்திரவாதி மான்ரெக்ஸ் ,தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறிகிறார் என்று நிறைய புத்தகங்களை வாங்கி வைத்திருப்பார் சித்தப்பா.
கோபி படிப்பில் சுமார்தான் +2வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்காததால்
எந்த அரசு பாலி டெக்னிக்கிலும் சீட் கிடைக்கவில்லை தனியார் பாலிடெக்னிக்கில் நன்கொடை கொடுத்து சேர்க்க கோபியின் அப்பா
வுக்கு கண்டிப்பாக உடன்பாடில்லை .
"வாத்தியார் புள்ளைன்னு வெளியே சொல்லாதே என் மானம்தான் போகும் . விவசாயத்தை பாக்க ஆள் இல்லை .நீ படிச்சி கிழிச்சது போதும் பேசாம விவசாயத்தையாவது ஒழுங்கா பார் " ஆத்திரத்தில் கடிந்து கொண்டார் அவனை.
கோபிக்கு தொழில் நுட்ப மூளை. சிறுவயதிலிருந்தே எப்போதும் எலெக்ட்ரானிக், எலெக்ட்ரிக் பொருட்களை கழட்டி எதையாவது நோண்டி பழுது பார்ப்பதில் ஒரு ஆர்வம். விவசாயத்தில் ஓரளவு ஈடு பாடு இருந்தாலும் கிராமத்திலேயே வாழ்க்கையை முடித்து கொள்ள விருப்பமில்லை . மறுபடியும் சித்தப்பாதான் கை கொடுத்தார் . கோபியின் அப்பா எவ்வளவுதான் முன்கோபியாக இருந்தாலும் தம்பி மேல் உள்ளுக்குள் ஒரு பாசம் . தம்பி பேச்சை தட்ட மாட்டார் அண்ணனிடம் பேசி ஒரு வழியாக கோபியை ஒரு தனியார் ITI ல் சேர்க்க சம்மதிக்க வைத்தார்.
ITI முடித்ததும் பெரம்பூர் தொழில் பேட்டையில் ஒரு ஸ்டீல் பாக்டரியில் வேலை கிடைத்தது.
விஜி அப்போதிருந்தே படிப்பில் படு சுட்டி. பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் பெற்று கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்து கோர்ஸ் முடிக்கும் முன்னரே காம்பஸ் இண்டர்வியூவில் செலெக்ட் ஆகி சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது . அதற்கு பிறகு தன் திறமையால் படிப்படியாக உயர்ந்து பகுதி நேர கோர்ஸில் சேர்ந்து மேலும் தன் தகுதியை மேம்படுத்தி கொண்டதின் பலனால் பிரபல TKC குரூப் கம்பெனியில் கூடுதல் சம்பளம் , சலுகைகளுடன் புரோக்ராம் டெவலப்பர் வேலை கிடைத்தது.
சித்தப்பாவும் ,சித்தியும் விஜி லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு செல்வதில் விருப்பமில்லாமல் திருச்சியில் இருந்த வீட்டை வாடகைக்கு விட்டு திருமணம் ஆகும் வரை மகளுடன் கூட இருக்க வேண்டி சென்னைக்கு குடிபெயர்த்து வந்தனர்.
கோபி ஏற்கனவே சென்னையில் இருந்ததால் சித்தப்பா கோபியிடம் வீடு பார்க்கும் பொறுப்பை ஒப்படைத்து இருந்தார் . அவனும் விடுப்பு எடுத்து பல
இடங்களில் அலைந்து பல புரோக்கர்களை பார்த்து நல்ல ஏரியாவாக தேர்வு செய்து கடைசியில் சைதாபேட்டையில்
அவர்கள் இப்போது குடியிருக்கும் வீட்டை தேர்ந்தெடுத்தான் .
(3)
பல விஷயங்களில் சித்தப்பாவின் அறிவாற்றலையும் ஞானத்தையும் கண்டு பிரமிக்கும் கோபி , அவருடன் உடன் படாமல் போனது அவரது ஆன்மீக நம்பிக்கையுடன் மட்டுமே. நல்லநேரம், ராகு காலம் பார்ப்பது, சகுனம் பார்ப்பது சாமியார்கள் பின்னே அலைவது போன்ற அவருடைய நம்பிக்கைகளை பல சமயங்களில் சீண்டி வேடிக்கை பார்ப்பதில் கோபிக்கு ஒரு அலாதி சந்தோஷம்.
அவரும் விட்டு கொடுக்காமல் எல்லாவற்றிற்கும் ஏதாவது விளக்கம் சொல்லி சமாளிப்பார் .
கோபி எட்டாவது படிக்கும் போதே சித்தப்பாவிடம் ஏதாவது கேள்விகளை கேட்டு மடக்குவான் .
"சித்தப்பா ராவணனுக்கு பத்து தலைன்னு சொல்றீங்க. நடுவுல ஒரு தலை, இந்த பக்கம் அஞ்சு, அந்த பக்கம் நாலு..... எப்படி பாலன்ஸ் ஆகும் .? அப்புறம் திருமாலின் நாபி கமலத்தில் முளைத்திருக்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மாவுக்கு நாலு தலை . தூங்கும் போது தலையணைல மூச்சு முட்டாதா ..?" என்று கிண்டலாக கேட்பான் .
அதற்கு அவரும் . "புராண இதிகாசங்களில் இருக்கும் விஷயங்களை மேம்போக்காக பார்த்தால் அபத்தமா தோணும் .. எல்லாவற்றிற்கும் ஒரு ஆழ்ந்த உள்ளர்த்தம், வேதாந்தம் உள்ளடங்கி இருக்கு . ஆன்மீக கடல்ல ஆழமா முங்கி எழுபவனுக்குத்தான் முத்து கிடைக்கும் . ..கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது .." என்பார் .
"சித்தப்பு எல்லாத்துக்கும் ஒரு பதில் ரெடியா வெச்சி இருக்கீங்க ..சரி கலியுகம் முடிவில நிறைய அக்கிரமங்களும் அநியாயங்களும் நடக்கும் போது உங்க திருமால் கல்கி அவதாரம் எடுத்து வருவாராமே . ..ஏன் இன்னும் வெயிட் பண்ணிட்டு இருக்கார்? இப்போ நாட்டுல நடக்குற அநியாயங்கள், அக்கிரமங்கள் போதாது இன்னும் கொஞ்சம் நடக்கணும்னு காத்துட்டு இருக்காரோ ...?"
"நீ நெனைக்கறா மாதிரி பெருமாள் கல்கி அவதாரம் எடுத்து வானதிலேந்து வெள்ளை குதிரையில வந்து உலகத்தை காப்பாத்தணும்னு அவசியம் இல்லே ..ஒருவேளை இப்போ கூட மனுஷர்கள் மத்தியிலே கலந்து மனுஷர்கள் மாதிரியே உலவி அநியாயம் பண்ணுறவங்களை தண்டிச்சி நல்லவங்களை அவங்களுக்கு தெரியாமலே உதவி செஞ்சிண்டு இருக்கலாம் ....."
இந்த சம்பாஷனை நடந்து கொண்டிருந்தது முன்னொருநாள் திருச்சி மேல்மாசி வீதி.
அப்போது அந்த பக்கம் ஒரு ஆட்டோ கடந்து சென்றது . கோபி அந்த ஆட்டோ டிரைவரை காட்டி அப்போ அந்த ஆட்டோ டிரைவர் முப்பது முக்கோடி தேவர்களில் ஒருத்தரா இருக்கலாமுன்னு சொல்லறீங்களா ...?"
"கண்டிப்பா..."
"சித்தப்பா ஒரு நிமிஷம்... கடையில எலுமிச்சம் பழம் வாங்கிட்டு வந்துடறேன் .."
"எதுக்கு ..?"
"சித்தி கிட்டே சொல்லி உங்க தலையில தேய்குறதுக்கு ....."
(4)
கோபி சைதாபேட்டைக்கு வரும்போதெல்லாம் தெருமுனையில் இந்த கடைக்கு வந்து சிகரெட் வாங்குவது வழக்கம் .
" பிருந்தா பார்மஸி & ஃ பான்சி ஸ்டோர் "
கிங்ஸ் ஃ பில்ட்டர் வாங்கி பணம் கொடுத்த போது வெள்ளை சட்டை, வேஷ்டி சந்தன பொட்டு சகிதம் ரெஜிஸ்டரில் இருந்த முதலாளி புன்னகைத்தார் .
"தம்பி நீங்க இப்போ புதுசா திருச்சியில் இருந்து குடி வந்தாங்களே அவங்க வீடுதானே .. ?"
" ஆமா ...அது என் சித்தப்பா வீடு எப்படி அது எப்படி உங்களுக்கு ......?"
"நான் இந்த ஏரியாவில ரொம்ப வருஷமா இருக்கேன் தம்பி . பெரும்பாலும் எல்லாரையும் தெரியும். நீங்க வண்டியில சாமான் எல்லாம் கொண்டு எறக்கி உதவி செஞ்சப்போ நான் பாத்திருக்கேன் . அதுக்கப்புறம் ரெண்டு முறை நம்ப கடை பக்கமா வந்த போது பாத்தது . அப்போ அந்த பொண்ணு உன் தங்கை முறையா ..? "
அந்த கேள்வி கோபிக்கு அனாவசியமாக பட்டதால் கொஞ்சம் குரலை உயர்த்தி கேட்டான் கோபி "ஆமாம் .. எதுக்கு கேக்கறீங்க ...?"
"தப்பா நெனைக்காதீங்க தம்பி ரெண்டு நாளைக்கு முன்னே அந்த பொண்ணு நம்ப கடைக்கு வந்திருந்தது. டாயசீபம் மாத்திரை கேட்டது .
டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாம நாங்க தரகூடாதுமானேன். " இல்லே அங்கிள் ..வேலையில ஒரே ஸ்ட்ரெஸ் ..சரியா தூங்க முடியலே, டாக்டர் கிட்டே போக நேரமில்லைன்னு சொல்லிச்சு .. மத்த கடைங்கள்ள நம்ப கடை மாதிரி ரூல்ஸ் பாலோ பண்ணுவாங்கன்னு சொல்ல முடியாது.
ஏதோ உன் கிட்டே சொல்லணும்னு தோணுச்சி அதான் சொன்னேன் .."
(5)
கோபிக்கு பிடித்த சப்பாத்தி, பட்டாணி குருமா வாசனை தெரு வரை வந்து மூக்கை துளைத்தது .
கோபி திரும்பி போகவும் விஜி வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது. வழக்கமாக விஜி கோபியை பார்த்த சந்தோஷத்தில் வள வளவென்று ஏதேதோ பேசி தீர்த்து விடுவாள். ஆனால் பிரகாசமான அவள் கண்கள் இருண்டிருந்தது.
"என்ன எப்படி இருக்கே ? ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க ..?" என்று ஏதோ பேசவேண்டுமே என்பதற்காக பேசிவிட்டு "எனக்கு கொஞ்சம் ப்ராஜெக்ட் வேலை இருக்கு" என்று தன் அறைக்கு போய் விட்டாள் விஜி.
டின்னர் சாப்பிடும் போது கூட யாரும் அதிகம் பேசவில்லை. எப்போதும் ஒருவரை ஒருவர் கேலி செய்துகொண்டும்,வம்புக்கிழுத்தும் ஏதாவது அறுவை ஜோக்குகளை சொல்லி சிரித்துகொண்டு கல கலப்பாக இருந்த குடும்பமா இது...? விஜி ஏதோ ஒப்புக்கு சாப்பிட்டு விட்டு எழுந்து கை கழுவி அறைக்கு போய் கதவை சாத்தி கொண்டாள். சித்தப்பாவும் சாப்பிட்டு முடித்து வெளியே ஒரு வாக் போக கிளம்பினார்.
"கோபி நான் படுக்கறேன். ரூம்ல மாத்திக்க கைலி, டவல் எல்லாம் எடுத்து வெச்சிருக்கேன் நாளைக்கு இருந்து மதியம் சாபிட்டுதான் போகணும் சரியா ..?"
என்று சொல்லி விட்டுசித்தியும் படுக்க போனாள்.
"சரி சித்தி நீங்க போய் படுங்க...நான் கொஞ்ச நேரம் நியூஸ் பாத்துட்டு படுக்கறேன்
..." மற்ற சமயமாக இருந்தால் சித்தப்பாவோடு கோபியும் வாக்கிங் போயிருப்பான் . ஆனால் விஜியின் மனதை குடைந்து கொண்டிருக்கும் விஷயம் எதுவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளாமல் கோபிக்கு தலையே வெடித்து விடும் போலிருந்தது.
(6)
சித்தப்பா வெளியே போகும் வரை காத்திருந்து மெல்ல நடந்து போய் விஜியின் அறை கதவை தட்டினான் கோபி. கொஞ்சமாய் கதவை திறந்து முகத்தில் கேள்விக்குறியோடு கேட்டாள் .
"எங்க MD . வேலைக்கு சேர்ந்த புதுசுல கேள்விபட்டேன் அவன் பொம்பளைங்க விஷயத்துல ஒரு மாதிரின்னு. நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன். கன்பர்மேஷன் முடிஞ்சு எனக்கு வர வேண்டிய கிராஜுட்டி என் அக்கௌன்ட் -ல க்ரெடிட் ஆகலே ஹெச் . ஆர் - ல போய் கேட்டா எங்களுக்கு தெரியாது சூபர்வைசர் கிட்டே கேக்க சொன்னாங்க. சூபர்வைசர்
மேடம் கிட்டே போய் கேட்டா உனக்கு நல்ல நேரம்... உன் அதிருஷ்டம் நீ ஃப்ரெஷெர்... நம்ப MD பார்வை உன் மேல விழுந்திருக்கு பார்த்து அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்க. நீ எங்கியோ போயிடிவேன்னு " கண்ணடிச்சி சிரிக்கறா... ஆத்திரம் தாங்க முடியாம நேரா நானே MD ரூமுக்கு போய்,
"சார் ..என் கிராஜுட்டி பாக்கி ஹோல்ட்ல இருக்கு. சூபர்வைசர் மேடம் கிட்டே கேட்டா ஏதேதோ தப்பா பேசுறாங்க 'ன்னேன் அதுக்கு அந்த பொறிக்கி ராஸ்கல்,
"அவங்க தப்பா சொல்லலை , சரியாதான் பேசி இருக்காங்க...
என்னை கொஞ்சம் அனுசரிச்சி நடந்துக்கோ உனக்கு நடக்க வேண்டியதெல்லாம் தானா நடக்கும்னு சொன்னான் ..."
இதை சொல்லும்போது அவமானத்தால் அவள் உடல் குறுகி போனது .
"போடா நீயும் உன் வேலையுமாச்சுன்னு ரிசைன் பண்ண வேண்டியதுதானே? " ஆத்திரத்தோடு இடைமறித்தான் கோபி.
" நானும் அதைதான் சொன்னேன். நான் வேலைய இன்னிக்கே ரிசைன்
பண்ணறேன்னு சொல்லிட்டு அவன் ரூமை விட்டு கிளம்பும் போது
, ஒரு நிமிஷம் இதை கொஞ்சம் பாத்துட்டு போன்னு நக்கலா சிரிச்சிகிட்டே அவன் மொபைல்ல ஒரு போட்டோவை காமிச்சான்...
அவன் என் தோள் மேல கை போட்டுட்டு நெருக்கமா இருக்கற மாதிரி.. எனக்கு தூக்கி வாரி போட்டது ..
கம்பெனி ஸ்டாப்ஃ பர்த் டே பார்டியில என் ப்ரெண்ட் மாலா கூட எடுத்துகிட்ட போட்டாவை எடுத்து "போட்டோ ஷாப்" பண்ணியிருக்கான்.
எப்படி என் வொர்க்..? நான் நினைச்சதை அடையாம விட மாட்டேன். என்னை மீறி நீ வேற எங்கேயும் போயி நீ குப்பை கொட்ட முடியாது . என் வழிக்கு வரலேன்னா இதை விட அசிங்கமா எடிட் பண்ணி நெட்ல போட்டுடுவேன்... அப்புறம் உன் குடும்பத்தோட தூக்குல தொங்கணும் புரிஞ்சு நடதுக்கோனான்.
"சார் உங்களுக்கு கல்யாணம் ஆகி ஃபாமிலி குழைந்தைங்க எல்லாம் இருக்கு , எங்க வீட்ட எனக்கு மாப்பிள்ளை பாத்துக்கிட்டு இருக்காங்க என்னை விட்டுடுங்க ப்ளீஸ்ன்னு கால்ல விழுந்து கதறினேன்...
"நீ யாரை வேணாம் கல்யாணம் பண்ணிக்கோ ..என்னை மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ உன்னை மகா ராணி மாதிரி வச்சிக்கறேன்னு... கொஞ்சம் கூட வாய் கூசாம சொல்லுறான் ..." மீண்டும் குமுறி அழுதாள் விஜி.
"தப்பு எதுவும் நடக்கலியே ..." தர்ம சங்கடத்தோடு கேட்டான் கோபி .
"சீ...அந்த மானம் கெட்ட வக்கிர புத்தி புடிச்ச நாயின் விருப்பத்துக்கு இணங்குரதை விட சாகுறதே மேல்னு முடிவு செஞ்சி ஒவ்வொரு பார்மசியா போய் டாயசீபம் மாத்திரைகள் கலெக்ட் பண்ணி வெச்சிருக்கேன். இன்னும் மூணு வாரம் கம்பெனியில ISO இன்ஸ்பெக்ஷன் , ஆடிட்டிங்.. அதுவரைக்கும் அவன் தொந்திரவு இருக்காது. அதுவரைக்குமாவது அம்மா அப்பா கூட இருந்துட்டு அப்புறம் போய் சேந்துடலாம்னு பிளான் பண்ணி இருந்தேன்.. எனக்கு வேற வழி தெரியலஅண்ணே .."
குழந்தை போல் குலுங்கி குலுங்கி அழுதவளை தோளில் சாய்த்து ஆசுவாச படுத்தினான் கோபி. உள்ளுக்குள் ஒரு எரிமலை குமுறியது.
"முட்டாள்.என்ன காரியம் செய்ய இருந்தே .. பிரச்சனைக்கெல்லாம் தற்கொலைதான் முடிவுன்னா இந்த உலகத்துல ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டாங்க. நம்மால தீர்க்க முடியாத சில பிரச்சினைகளுக்கு சில சமயம் காலம் நல்ல தீர்ப்பு தரும் அது வரைக்கும் பல்லை கடிச்சிக்கிட்டு பொறுமையா இருக்கணும். நீ இந்த அண்ணன் கிட்ட சொல்லிட்ட இல்ல ...மத்ததை நான் பாத்துக்கறேன்."
"உன்னால அவனை ஒண்ணும் பண்ண முடியாது அவனுக்கு இண்டஸ்ட்ரில ரொம்ப இன்ப்ளூயன்ஸ் இருக்கு. எங்க கம்பெனி செக்யூரிட்டி தாண்டி வெளி ஆட்கள் ஒருத்தரும் உள்ளே வர முடியாது " என்றாள் விஜி கண்ணை துடைத்து கொண்டே .
"நமக்கு மூணு வாரம் டைம் இருக்கு. என்ன செய்யலாமுன்னு யோசிக்கணும்.. அதுவரைக்கு ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்க. இதுக்கு நடுவே அவன் டார்ச்சர் பண்ணா, யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்னு மட்டும் சொல்லு. மத்ததை நான் பாத்துக்கறேன். அது வரைக்கும் இந்த மாதிரி எந்த முட்டாள் தனமான முடிவும் எடுக்க மாட்டேன்னு என் கிட்டே சத்தியம் பண்ணு.." என்று கையை நீட்டினான் கோபி.
"ப்ராமிஸ்.." கை மேல் சத்தியம் செய்து .." இன்னும் இந்த பழக்கத்தை விடலையா.." என்றாள் விஜி .
"எந்த பழக்கம் ..?"
"இந்த சிகரெட் பழக்கம்..."
"எல்லாம் நல்லபடியா முடிஞ்சா விட்டுடறேன்.." சிரித்து கொண்டே சொன்னான் கோபி.
"ப்ராமிஸ் ...? இந்தமுறை கோபி விஜியின் கைமேல் அடித்து சத்தியம் செய்தான்.
முதல் முறையாக விஜியின் முகத்தில் ஒரு தெளிவும் லேசான புன்னகையும் தென்பட்டது. புழுங்கி கொண்டிருந்த பாரம் இறக்கி வைத்ததால் மனம் லேசானது போல் ஒரு உணர்வு. விஜியிடம் கேட்டு அந்த MD மற்றும் கம்பெனி பெயரை மனதில் குறித்துவைத்து கொண்டான் கோபி.
"சரி . . இதை பத்தி யார் கிட்டேயும் சொல்லாதே. சித்தப்பா வர நேரமாச்சு நீ போய் படு அதுக்கு முன்னாடி மறக்காம எல்லா மாத்திரையும் ஒண்ணு விடாம என் கிட்டே குடுத்துட்டு படுக்கற.. சரியா ?."
"சரி" என்று வெகுளித்தனமாய் தலையாட்டி படிகட்டில் இறங்கி மறைந்தாள் விஜி
.
கோபியின் ரத்தம் கொதித்தது. ஒரு சிற்றெரும்புக்கு கூட தீது நினைக்காத சித்தாப்பாவின் குடும்பத்திற்கு இப்படி ஒரு சோதனையா...? கஷ்ட பட்டு படித்து முன்னேறி ஒரு நல்ல வாழ்கை அமைய போகும் நேரத்தில்... வெண்ணை திரண்டு வர தாழி உடைந்த கதையாய் ....பண பலத்தையும் அதிகாரத்தையும் பயன் படுத்தி அப்பாவி பெண்களில் வாழ்கையை சீரழிக்கும் காமுகன் ....
அந்த MD யை அவன் பிறப்பையும் அவன் தாயின் கற்பை பழிக்கும் வெளியே சொல்ல முடியாத தகாத வசை சொற்களை சொல்லி பற்களை நர நறவென்று கடித்து நரம்புகள் புடைக்க எதிரே அவன் இருப்பதாக நினைத்துக்கொண்டு பித்து பிடித்தவனை போல காற்றிலே குத்துக்களை சரமாரியாக விட்டான். பலமான அந்த குத்துக்கள் அந்த MD யின் முகத்தில் விழுந்திருக்குமானால் அவன் தாடை எலும்பு உடைந்து சில பற்கள் சிதறி இருப்பது நிச்சயம்.
படுப்பதற்கு முன் மணி பார்த்தான் கோபி. மணி பத்து. நண்பன் ரவியை அலைபேசியில் அழைத்தான் .
"ரவி , நான்தான் கோபி ..சைதாப்பேட்டை சித்தப்பா வீட்லேந்து பேசறேன் .. தூங்கிட்டியா.. "
"இல்லே என்ன விஷயம் ..? "
"நாளைக்கு என்ன ஷிப்ட் பாக்குற..?
"3-11 எதுக்கு கேக்குற...? "
"போன்ல எதுவும் சொல்ல முடியாது..ரொம்ப அவசரம் . நாளைக்கு காலையில பத்து மணிக்கு நாயர் கடைக்கு வந்துடு .. "
"சரி ...குட் நைட் ..."
கோபியும் ரவியும் பால்ய நண்பர்கள். ஒரே கிராமம். இருவரும் ஒரே தொழில்நுட்ப கல்லூரியில் டிப்ளமோ முடித்து ஒரே இடத்தில் வேலை கிடைத்ததில் இருவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி .ரவிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள். ஒருவரும் ஒரே இடத்தில வேலை செய்தாலும் ஷிப்ட் காரணமாக அடிக்கடி பார்த்து கொள்ள முடியாவிட்டாலும் நேரம் போது எப்போதாவது பாருக்கு போய் பழைய கதைகள் பேசி ஜாலியாக பொழுதை கழிப்பார்கள்.
இந்த பிரச்சனையை கவனத்தோடு கையாள ரவி போன்ற நம்பகமான நண்பனை அணுகுவதை தவிர வேறு வழி தெரியவில்லை கோபிக்கு.
படுக்கையில் படுத்த கோபிக்கு நித்திரை வரவில்லை. நீண்ட நேரம் மேலே சுற்றிகொண்டிருந்த ஃபேனை பார்த்து கொண்டும் விரல்களால் விஜி கொண்டு வந்து கொடுத்த டாயசீபம் மாத்திரைகளில் ஒன்றை எடுத்து நீண்ட நேரம் உருட்டி யோசித்து கொண்டிருந்தான் .
"உயிர் போக எத்தனை மாத்திரைகள் தேவைப்படும் ...? அவனுக்குள் ஏனோ இந்த ஐயம் எழ சிறிது நேரத்தில் உறங்கி போனான்.
(7)
சுருக்கமாக எல்லா விஷயத்தையும் ரவியிடம் விவரித்தான் கோபி. பொறுமையாக கேட்டுவிட்டு. "இது கொஞ்சம் பெரிய மேட்டர். நம்பளால தனியா டீல் பண்ண முடியாது கன்னையா அண்ணன் கிட்ட பேசி பாக்கலாம்....அவருக்கு நெறைய கான்டாக்ட்ஸ் தெரியும் .."என்றான் ரவி .
கன்னையா தொழிற்பேட்டையில் யூனியன் லீடர். கன்னையாவுக்கும் கொளத்தூர் பக்கத்தில் புளியம்பட்டி சொந்த ஊர் என்பதால் கோபி, ரவி மேல் ஒரு அபிமானம் உண்டு எந்த பிரச்னை என்றாலும் தயங்காமல் உடனே உதவி செய்வார். கன்னையாவுக்கு தொழிலாளர்கள் மத்தியில் நிறைய செல்வாக்கு இருந்த போதிலும் மறைமுகமாக நிறைய எதிரிகள் உண்டு. அதனால் பின்புலத்தில் பக்க பலமாக இருக்க சில விசுவாசமான அடியாட்களின் உதவி அவ்வப்போது அவருக்கு தேவைப்படும்.
நல்ல வேளையாக கன்னையாவின் மொபைல் நம்பர் ரவியிடம் இருந்தது.போன் போட்டு அவசரமாக பேச வேண்டும் என்று சொல்ல, தான் வீட்டில் இருப்பதாகவும் ஷிப்டுக்கு போகும் முன் வழியில் பார்த்துவிட்டு விட்டு போகும் படியும் சொன்னார்.
வீட்டில் வரவேற்பறையில் லுங்கி, பனியனில் இருந்தார் கன்னையா.
"வாங்கப்பா ...டீ , காபி ஏதாவது சாப்பிடுறீங்களா ..? என்ன அப்படி முக்கியமான விஷயம்? வேலையில ஏதாவது
பிரச்சனயா ...?"
ரவியும் , கோபியும் விஷயத்தை சொல்ல மெளனமாக கேட்டு விட்டு
ஏதோ ஆழமாக யோசித்தார். இருவரும் பொறுமையாக அவர் பதிலுக்கு காத்திருக்க சிறிது நேரம் கழித்து பின்னால் எட்டி பார்த்து தன் குடும்பத்தினர் யாரும் அருகில் இல்லை என்று உறுதி செய்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
"உன் ஆதங்கம் எனக்கு நல்லா புரியுது ....எனக்கும் ஊர்ல கல்யாண வயசுல ஒரு தங்கச்சி இருக்கு. வேலை விஷயத்துல எந்த பிரச்சனைன்னாலும் நான் பாத்துக்குவேன் இது கொஞ்சம் பெரிய மேட்டர் . . இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் டீல் பண்ணுறதுக்கு ஒரு ஆள் எனக்கு தெரியும். நம்ம பசங்கங்கரதால செய்யறேன். என் பேர் மட்டும் அடி படமா பாத்துக்குங்க..."
" அந்த ஆள் கிட்டே விஷயத்தை சொல்லி உங்களை கான்டாக்ட் பண்ண சொல்லுறேன். காண்டீனுக்கு போன் பண்ணுவான். மொபைல்ல எந்த ரெக்கார்டும் வேண்டாம். ஜாக்கிரதை.."
"ரொம்ப நன்றிண்ணே அப்போ நாங்க கெளம்பறோம் ..அந்த ஆள் பேரு ........?"
"குருவி ."
(8)
பழைய வண்ணாரபேட்டை வால்டாக்ஸ் சாலையில் அந்த ஆட்டோ மெக்கானிக் ஷாப்பில் ஒரு பொடியன் உடல் முழுக்க எஞ்சின் ஆயில் கறையுடன் ஒரு டூ வீலரை பழுது பார்த்து கொண்டிருந்தான்.
" தம்பி இங்க குருவிங்கறது....."
குரல் கேட்டு ஒரே நொடி மட்டும் நிமிர்ந்து பார்த்து கட்டை விரலால் கடையின் பின் புறம் சைகை காட்டிவிட்டு மறுபடியும் வேலையில் மும்முரமானான்.
தரையில் சிதறி கிடந்த பல அளவு ஸ்பானர்கள், பஞ்சர் ஒட்டும் உபகரணங்கள் இவற்றையெல்லாம் கவனமாக தாண்டி கடைக்கு பின்புறம்
அவர்கள் செல்ல, திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் வரும் இடம் போல் எங்கும் துரு பிடித்த வாகனங்களின் உதிரி பாகங்கள், வண்டி சக்கரங்கள் மற்றும் பழைய டயர்கள் மலை போல் குவித்து கிடந்தன..
ஒரு மூலையில் ஓலை கீற்று பந்தலுக்கு கீழே இரண்டு பேர் கேரம் போர்டு விளையாடி கொண்டிருந்தார்கள் . ஒரு ஆள் ஒல்லியான தேகம் , இன்னொரு ஆள் சற்று குள்ளமாக பருமனாக.
" இங்கே "குருவி " ன்னு ..." சிறிது தயங்கி கேட்டான் ரவி .
"நான்தான் ..சொல்லுங்க என்ன விஷயம் ...? தலை நிமிராமல் கண்களை போர்டில் இருந்து எடுக்காமல் பதில் சொன்னான் ஒல்லியாக இருந்த ஆள்.
"நாங்க .. கன்னையா அண்ணன் அனுப்பி ...ஸ்டீல் பாக்டரிலேந்து ..."
ஒரு முறை மட்டும் ஓரக்கண்ணால் கோபியையும், ரவியையும் பார்த்து விட்டு அவன் விரல்கள் ஸ்ட்ரைக்கரை சுண்டி விட, அது எதிர் மூலையில் சிகப்பு காயை கட் செய்து அதே வேகத்தில் கட்டையில் மோதி ஒரு
கோணத்தில் திரும்பி குழிக்கு அருகே இருந்த கருப்பு காயை லேசாக முத்தமிட அது குழிக்குள் விழுந்து "ஃபாலோ " ஆனது.
"குருவி "எதிரே அமர்ந்து ஆட்டத்தில் இருந்த ஆளுக்கு சைகை காட்ட, அந்த ஆள் உரையாடல் காதில் கேட்காத தூரத்துக்கு போய் கை கட்டி நின்றான் .
"குருவி " இருவரையும் அங்கிருந்த மர பெஞ்சை காட்டி
அமறும் படி சைகை செய்தான்.
கையில் செப்பு காப்பும் கழுத்தில் கருப்பு கயிறில் ஒரு
டாலர் கட்டி சட்டை மேல் பொத்தான்களை கழற்றி விட்டிருந்தான். முகத்தில் சில நாட்கள் சவரம் செய்யப்படாத தாடி. தேகம் ஒல்லியாக இருந்தாலும் கண்களில் தீவிரமும் இனம் புரியாத ஒரு அலட்சியமும்
தெரிந்தது.
" அண்ணன் எல்லா மேட்டரும் சொன்னாரு.. இதுல யாரு பொண்ணோட அண்ணன் ..? "
"நான்தான் " என்றான் கோபி.
"எனக்கு அந்த ஆளு போட்டோ , அட்ரெஸ், வண்டி நம்பர் வேணும். இதெல்லாம் நான் சொல்ற எடத்துக்கு கொண்டு வர சொல்லோ பாதி அமௌண்ட் கையில வரணும் . மீதி மேட்டர் முடிச்ச அப்புறம்.."
ரவி குருவி காதருகே போய் , " இதை எப்படி செய்ய போறீங்க ..........?" என்று மெதுவாய் கேட்க .
"அதெல்லாம் உன்னாண்ட சொல்ல முடியாது . இவ்வளோ நாள் அரசியல்வாதிங்களோட விரோதத்துக்குகாக துட்டு குடுக்கரவனுக்கு வேலை செஞ்சிட்டு இருந்தேன். இப்பதான் முதல் தபா குடும்பத்துக்கு வேலை செய்யறேன்.மனசுக்கு தெம்மா கீது. வாத்தியாரே...நீ எதுக்கும் கவலை படாதே நம்ப கிட்டே வேல சுத்தமா இருக்கும் ...."
கோபியின் முகத்தில் சிறிது கலக்கம் இருப்பதை கண்ட அந்த ஆள் "குருவி " "ஏன் பாஸ் சும்மா டென்ஷனா கீற ...?"என்று கேட்க ,
"ஆளை தீர்த்து கட்டுறது என் நோக்கம் கிடையாது. என் தங்கச்சி வாழ்கையில அவன் இனிமேல் தலையிடாம இருக்கணும் ..அவ்வளோதான் .." என்றான் .
"அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ண உன்ன மாதிரி ஒரு ஆள் இருக்குது.. உதவி செய்ய ஆள் இல்லாத மத்த பொண்ணுங்க கதி . ..? ஒண்ணும் படிக்காத லோ கிளாஸ்.. நாங்களே மேல் போல கீது ...அவ்வளோ படிச்ச ஹை கிளாஸ்ல இவ்வளோ கலீஜா ......?
நான் தலைக்கு குறி வெக்கறேன் . அவனுக்கு அன்னிக்கி ராசி பலன்ல நாள் நல்லா இருந்திச்சின்னா பொழைச்சுக்குவான் .. என்னா ஒண்ணு... காலத்துக்கும் வீல் சேர்ல தான் மொடமா கெடக்கணும். அதுக்கு பதில் மேல போறதே பெட்டர் .." சுட்டு விரலால் வானத்தை காண்பித்து அலட்சியமாய் சிரித்தான் .
"நீ ஒண்ணும் பீல் பண்ணாத வாத்தியாரே ..நல்லது செஞ்ச காந்தியையே போட்டு தள்ளிட்டாங்கோ... இவன் ஒரு மொள்ளமாரி .இவனை மாதிரி ஆளுங்களை வுட்டு வெச்சா என்ன மாறி ரவுடிக்கிதான் அசிங்கம் . நீ கெத்தா ஊட்டுக்கு போ .. " என்று சொல்லி தோளில் தட்டி வழியனுப்பி வைத்தான் "குருவி "
கோபிக்கு வயிற்றில் புளியை கரைத்து.
"குருவி"யை சந்தித்து திரும்புகையில் வழியில் ரவியிடம் கேட்டான் கோபி .." டேய் இவனே புல் தடுக்கி பயில்வான் மாதிரி இருக்கான் இவன் போயி....எப்பிடிடா.... ?"என்று சந்தேகத்துடன் வினவ , அதற்கு ரவி,
" மச்சான் சினிமாவில்தான் ரவுடிங்க எல்லாம் தீவட்டி தடியன்கள் மாதிரி இருப்பாங்க ..நிஜ வாழ்கையில அப்படி இல்லை .." சிரித்தான் ரவி.
"அது போகட்டும் உன்னையும் இதுல இன்வால்வ் பண்றதுக்கு எனக்கு
இஷ்டமில்லை . இது என் பிரச்சனை. நானாவது ஒண்டிக்கட்டை நீயோ புள்ளை குட்டிகாரன் .." கவலையோடு சொன்னான் கோபி.
"வாயை மூடுடா .. உன் பிரச்சனை என் பிரச்சனைன்னு பிரிச்சி பேசிக்கிட்டு ..எனக்கு ஒரு தங்கச்சி இருந்து எனக்கும் இந்த மாதிரி நடந்திருந்தா நீ எனக்கு ஹெல்ப் பண்ணி இருக்க மாட்டியா ..? உனக்கு உள்ளுக்குள்ள எவ்வளவு ஆத்திரமும் வெறியும் இருக்கோ அதே அளவுக்கு ஆத்திரமும் வெறியும் எனக்கும்அவன் மேல வருது .ஊரை சுத்தவும் ஒண்ணா சேர்ந்து சரக்கு அடிக்கறதுக்கு மட்டும் ப்ரெண்ட்
ஷிப்னா அது உண்மையான ப்ரெண்ட்ஷிப் இல்லை.... "
கோபிக்கு பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. உணர்ச்சி வசத்தால் தொண்டை கம்ம இப்படி ஒரு நல்ல நண்பன் கிடைத்ததற்கு பெருமிதபட்டு கண்கள் குளமாக ரவிவை ஆர தழுவிக்கொண்டான்.
"அது சரி .அவன் கேட்ட பணத்தை எப்படி அவ்வளோ சீக்கிரம் புரட்டுறது ...?. பேங்க் ட்ரான்ஸ்ஷாக்சன் பண்ணுறது கூட ஸேப்ஃ இல்லை .." கவலையுடன் கேட்டான் ரவி
"ஒரு சீட்டு போட்டு வெச்சிருக்கேன். அதை எடுத்துட வேண்டியதுதான். இதுல என்ன வேடிக்கைன்னா விஜிக்கு என் கல்யாண பரிசா கொஞ்சம் கொஞ்சமா சேத்து வெச்சது . அது இப்படி அவளுக்கே செலவாகுமுன்னு நெனைச்சி கூட பாக்கலே. அவளுக்கு இதை விட பெரிய கல்யாண பரிசு வேறு என்ன இருக்க முடியும் ..? " விரக்தியில் சிரித்தான் கோபி.
(10)
நாட்கள் கட கடவென்று பறந்தது. அடுத்த சில நாட்களில் "குருவி " கேட்ட விஷயங்களை சேகரிப்பதில் கோபிக்கு அவ்வளவு சிரமமாக இல்லை. போட்டோ, மற்ற விவரங்கள் , சீட்டு கம்பெனியில் போட்டு வைத்திருந்த பணத்தில் "குருவி" சொன்ன தொகை முதலானவை ஒரு மஞ்சள் பையில் அவன் வர சொல்லி இருந்த வேறு ஒரு இடத்தில் கை மாறியது .
விஜி கோபியிடம் இந்த விஷயம் குறித்து பேசி இரண்டு வாரம் கழிந்தது. "குருவியிடம்" இருந்து எந்த தகவலும் இல்லை. நாள் ஆக ஆக கோபிக்கு
பதட்டமாக இருந்தது .
கேண்டீனில் ரவி கோபியிடம் கிசு கிசுத்தான் ,
"கோபி ..அண்ணன் கேட்டார் விஷயம் என்ன ஆச்சுன்னு. எதாவது தெரிஞ்சுதா .?"
" ஒண்ணும் இல்லைடா . எனக்கு என்னமோ நம்பிக்கை இல்லை. "
"பொறுமையா இருடா ..அண்ணன் சொன்ன ஆளு அப்படி எல்லாம் ஏமாத்த மாட்டான்.."
அது சற்று ஆறுதலளித்தது கோபிக்கு .
ஒவ்வொரு நாளும் ஏதாவது செய்தி வருமா , எப்படி செய்தி வரும் என்று கூட தெரியாமல் ஒவ்வொரு நொடியும் நரக வேதனையாக கழிந்தது கோபிக்கு.
(11)
அன்று பதிமூன்றாம் நாள்.
பஸ் 28- ல் வழக்கம் போல் ஏகப்பட்ட நெரிசல். பின்னே முண்டியடித்து ஏறிய கோபியை பிதுக்கி பிதுக்கி முன்னே தள்ளியது கூட்டம். படிக்கட்டில் தொங்கிய கூட்டம் பஸ்ஸை ஒரு பக்கமாக சாய்க்க கடும் பிரயர்த்தனம் செய்வது போலிருந்தது. ஏதோ யோசனையில் ஆழ்திருந்தவன் சட்டென சுய நினைவுக்கு வந்து நிறுத்தத்தை தவற விட்டு விட்டோமோ என்று ஐயம் எழ குனிந்து ஜன்னல் வழியாக வெளியே பார்க்க நல்ல வேலையாக இன்னும் இறங்க வேண்டிய இடம் வரவில்லை. அப்போதுதான் எதேச்சையாக கோபியின் கண்ணில் பட்டது அது.... அந்த பெட்டி கடை முன்பு கருப்பு கொட்டை எழுத்துக்களில் மாலை பதிப்பின் முக்கிய செய்திகள்....
"ஹோல்ட் ஆன் !! ஸ்டாப் !!.."
திடீரென கோபி அடிவயிற்றில் பேருந்தின் மேற்கூரையை தட தடவென்று தட்டி கத்த , முதல் கியர் போட்டு பஸ் மெதுவாக நகர ஆரம்பிக்கையில் ஓட்டுனர் ப்ரேக் போட்டு நிறுத்த, எல்லோரும் ஒருவர் மேல் ஒருவர் சாய ,ஜனங்களை தள்ளிக்கொண்டு வேக வேகமாக கீழே குதித்து கண்டக்டரின் வசவு களையும் , கால் மிதி பட்ட கிழவியின் தூற்றல்களையும் பொருட்படுத்தாமல் அந்த பெட்டி கடைக்கு ஓடினான் கோபி.
"தண்ணீர் டேங்கர் லாரி மோதி TKC கம்பெனியின் MD சாலை விபத்தில் மரணம் .."
அவசர அவசரமாக பணத்தை உருவி செய்திதாளை வாங்கி வாசித்தான் .
" இன்று காலை காரில் வேலைக்கு சென்று கொண்டிருத்த TKC கம்பனியின் MD மீது எதிரே வந்த தண்ணீர் டேங்கர் லாரி கட்டுபாட்டை இழந்து பயங்கரமாக மோதியதில் அவர் அதே இடத்தில பரிதாமாக உடல் நசுங்கி இறந்தார் .."
கோபி தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு அந்த செய்தியை மீண்டும் மீண்டும் படித்தான் . பிரசுரிக்கபட்டிருந்த போட்டோவிலிருந்தும் விஜியின் கம்பெனி தெளிவாக குறிப்பிடப்பட்டிருத்ததிலிருந்தும் கண்டிப்பாக அது விஜியின் MD தான் என்று உறுதி செய்து கொண்டான்.
பெட்டிக்கடையில் வாழைபழம் வாங்கிய ஒரு பெரியவர் புலம்பினார். "வர வர இந்த டேங்கர் லாரி காரனுங்க பண்ணுற அட்டூழியம் தாங்க முடியலே ..ரோட்டுல நடக்கவே பயமா இருக்கு "
கோபியின் மொபைல் கிணு கிணுத்தது . அழைத்தது விஜி.
" நியூஸ் பாத்தியா..?"
"என்ன நியூஸ் ..? எதுவும் தெரியாத மாதிரி கேட்டான் கோபி.
"இன்னிக்கு காலையில எங்க MD ஆக்சிடெண்ட்ல இறந்துட்டார்..கடவுள் அவனை இப்படி தண்டிப்பார்னு நான் நெனைக்கலே . அவன் குடும்பத்தை நெனைச்சாதான் பாவமா இருக்கு ..இதை சொல்லத்தான்
கூப்பிட்டேன் நீ கவலை பட்டுட்டு இருப்பியேன்னுதான் போன் பண்ணேன்.. நீ சொன்ன அட்வைஸ் கேட்டு பொறுமையா இருந்ததாலே இப்போ உயிரோட உன் கேட்டே பேசிட்டு இருக்கேன் .ரொம்ப தேங்க்ஸ் அண்ணா .."
கடைசி முறையாக ஒரு சிகரெட்டை உருவி உதடுகளில் வைத்து பற்ற வைத்து மீதமிருந்த சிகரெட்டுகளை பாக்கெட்டோடு அங்கிருந்த குப்பைதொட்டியில் செய்திதாளோடு சேர்த்து வீசி விட்டு நடந்தான் கோபி.
ஏனோ தெரியவில்லை ஒரு கணம் வெள்ளை குதிரை மேல் கையில் சங்கு சக்கரத்தோடும் தலையில் தங்க கிரீடத்தோடும் "குருவி"யின் உருவம் அவன் கண் முன் தோன்றி மறைந்தது .
கோபிக்கு தன்னையுமறியாமல் சிரிப்பு வந்தது.
*******************