Tuesday, November 8, 2011

கடனும் நட்பும் (சிந்தனை துளி )

"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.". என்றான் கம்பன். அது அந்த காலம். ஆனால் இந்த காலத்துல கடன் கொடுத்தவன்தான் கலங்கணும். என்னுடைய அனுபவத்தில் எத்தனையோ நல்ல நட்பு கொடுக்கல், வாங்கல் விவகாரத்தால்
முறிந்ததை நான் பார்த்திருக்கிறேன் கடன் அன்பை முறிக்கும் என்பது நட்புக்கும் பொருந்தும். நாம் மாடாய் உழைப்பது அந்த பணதுக்காகதான்.

நண்பன் பண கஷ்டத்தில் இருக்கும் போது அதனை உணர்ந்து கேட்காமலே உதவி செய்யும் நட்பு தெய்வீக நட்பு.

"உடுக்கை இழந்தவன் கை போல, அங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"

என்ற வள்ளுவன் வாக்கின் படி அப்படி ஒரு நண்பன் உங்களுக்கு கிடைத்தால், உலகத்தில் நீங்கள்தான் அதிருஷ்ட சாலி. அந்த நட்பை எந்த காரணம் கொண்டும் இழக்காதீர்கள்.
அதே போல்

"காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தில் மான பெரிது" என்றான் வள்ளுவன்.

சில பேர் அவசர செலவுக்கு கடன் வாங்குவார்கள். ஆனால் நாட்கள் போகும், மாதங்கள் போகும்..திருப்பி தருவானா, ஒருவேளை மறந்து விட்டிருப்பானோ, ஒரு வேளை நாம் கேட்டால் நம்மை "சில்லரையாக" நினைத்து விடுவானோ என்ற எண்ணமும் தோன்றும் . ஆனால் கடன் வாங்கியவனுக்கு இப்படி எந்த டென்ஷனும் இருக்காது . பஸ்ஸில் ஏறி மீதி
சில்லறை கண்டக்டர் இறங்குவதற்குள் குடுப்பரா மாட்டாரா என்று டென்ஷன் ஆகிவிடுமே அது போல மண்டை குடைய ஆரம்பிக்கும்.

நல்ல நட்புக்கு அடையாளம் முடிந்த வரை கைமாற்று வாங்காமல் இருப்பது. அப்படி வாங்க நேர்ந்தால் அந்த கடனை வாக்களித்த குறிப்பிட்ட தேதியில் கொடுத்து விடுங்கள். அப்படி கொடுக்க முடியாமல் போனால், நண்பனிடம் "மச்சி இன்ன தேதிக்குள்ள கொடுக்க முடியலை.. கொஞ்ச நாள்ல கொடுத்திடறேன்.." என்று சொல்வது courtesy மட்டுமல்ல அதோடு உங்கள் நண்பனுக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் நீங்கள் அந்த பணத்தை திருப்பி கொடுக்க பிரயர்த்தன படுகிறீங்கள் என்றும் தெரியும். உங்கள் நட்பு ஆரோகியமானதாக இருக்கும்.

நீங்கள் செய்த உதவியை நினைக்காமல் கடனை "காந்தி கணக்கில்" எழுதி உங்கள் தலையில் மிளகாய் அரைக்க நினைக்கும் நண்பர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் அறுத்தெரிந்து விடுங்கள். கொடுத்த பணம் கிடைக்கவிட்டாலும் பரவாயில்லை..உங்களில் நல்ல நட்பை இழந்த அந்த நபரின் இழப்பை ஒப்பு நோக்கும் போது, நீங்கள் இழந்தது ஒன்றுமில்லை.. இல்லையென்றால் வடிவேலு காமெடி போல் "இவன் எவ்வளோ அடிச்சாலும் தாங்கறான்..இவன் ரொம்ப நல்லவன்"
என்கிற இளிச்ச வாயன் பட்டம் மட்டுமே உங்களுக்கு கிட்டும்.

என்னடா friendship -ல போய் பண விஷயத்தை பெருசா பேசறேன்னு நினைக்க வேண்டாம். இதனை படித்த பின் உங்களின் வாழ்க்கையிலோ இல்லை உங்களின் நண்பர்களின் வாழ்க்கையிலோ கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் ஏற்பட்ட மன கசப்புக்கள் கட்டாயம் உங்கள் நினைவுக்கு வரும். "நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்.." என்ற தளபதி பாடல் இப்போது என் நினைவுக்கு வருகிறது. இதிகாசங்களில் ராமன்- குகன், துரியோதனன்-கர்ணன் போல உங்கள் நட்பு காலத்தால் பேசப்படும் நட்பாக இருக்க வேண்டுமானால் உங்களுக்கிடையே கொடுக்கல் வாங்கலில் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். ஆமாம் , நல்ல நண்பன் கிடைப்பது கூட இறைவன் கொடுத்த வரம்தான். அதனை காப்பாற்றி கொள்வதும், கை நழுவ விடுவதும் நம் கொள்கைகளில்தான்
இருக்கிறது.

ஆக, கடன் நட்பை முறிக்காது..நல்ல புரிந்துணர்வு இருக்கும் வரை..சரி

சந்ரானந்தா சார்.. கைமாத்தா ஒரு 20 ரியால் கிடைக்குமா....?